குறள் 882
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
மாப்ள.. நம்மளோட எதிரிங்களை ரெண்டு வகையா பாக்கலாம். வாள் மாதிரி கூர்மையானவனுவொ கொஞ்சவேரு. பேச வேண்டியதை நம்ம மொகத்துக்கு நேரயே பேசிருவானுவொ. அவனுவொளுக்கு நாம பயப்படத் தேவையில்ல.
இன்னங் கொஞ்சம் பேரு இருக்கானுவொ. சேக்காளி கணக்கா எப்பவும் நம்ம கூடவே ஒட்டிட்டு இருப்பானுவொ. உள்ளுக்குள்ள கமுக்கமா இருந்துகிட்டு நேரம் பாத்து குளி பறிச்சு நம்மளை கவுத்திருவானுவொ. அவனுவொளுக்குத் தாம் மாப்ள நாம பயப்படணும்.
குறள் 892
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
நம்மை விட கூடுதலா படிச்சவங்களையும், வயசுல பெரியவங்களையும், நாம எப்பவும் மதிச்சு நடக்கணும் மருமவன. அப்பிடி நடக்காட்டா நமக்கு பெரிய பெரிய தும்பமெல்லாம் வந்து சேரும் மருமவன.
குறள் 897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
மருமவன... ஒருத்தங்கிட்ட சொத்துக்கு சொத்து இருக்கு. வசதியான வாழ்க்கை வேற கெடச்சிருக்கு. எல்லாத்தியும் நல்ல அனுபவிச்சுக்கிட்டு இருக்கான்.
தகுதி வாய்ந்த பெரியவர் ஒருத்தரு, இவம் மேல கோவப்பட்டுட்டாருன்னா, அந்த கோவத்துக்கு முன்னால இவங்கிட்ட இருக்க சொத்து சுகம்லாம் பயனில்லாம பொயிரும் மருமவன.
குறள் 932
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
சூதாடிகள் இருக்கானுவொள்ளா மாப்ள.. அவனுவளுக்கு சூதாட்டத்துல மொதல்ல கொஞ்சம் வருமானம் வரும். இதுனால இன்னங் கொஞ்சம் ஆசைப்பட்டு மேலும் மேலும் சூதாடுவானுவொ. போவப் போவ நல்ல தோத்துப் போயி இருக்க சொத்து பத்து அம்புட்டயும் விட்டிருவானுவொ.. இவனுவொள்ளாம் உருப்புட நல்ல வழி எப்பிடி மாப்ள வரும்?
குறள் 948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
யாராவது ஒடம்பு சரியில்லாம இருந்தாவொன்னா, அவொளுக்கு என்ன சீக்கு வந்துருக்கு, அது எதுனால வந்துச்சு, எப்பிடி அதை சரி பண்ணலாம்னு யோசிக்கணும். அதுக்கு பொறவு ஒடம்புக்கு ஏத்தமாதிரி மருத்துவம் பாக்கணும். நல்ல மருத்துவரு இப்பிடித்தான் செய்வாவொ.
குறள் 963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
மாப்ள.. நல்லாயிருக்க காலத்துல, நம்மகிட்ட பணிவு இருக்கணும். நம்ம நெலைமை மாறிட்டுன்னா. மானத்தோட வாழணும். யார் கால்லயும் விழுந்து வாழக்கூடிய மானங் கெட்ட பொழைப்பு மட்டும் கூடவே கூடாது மாப்ள.(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments