Ticker

6/recent/ticker-posts

Ad Code



குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-84 (செந்தமிழ் இலக்கியம்)


ஆரோக்கியமான வாழ்வின் விதை
மனித வாழ்க்கை இறைவன் கொடுத்த வரம் ! அதை ஆனந்தமாக மகிழ்வாக, இன்பமாக, சந்தோஷமாக அனுபவிக்காமல் மனிதன் தனக்கான வாழ்க்கையைச் சாபமாக்கிக் கொள்கிறான். 

இது சரியா? உணவே மருந்து எனும் இயற்கையை உணராமல் இன்றைய உலகில் மருந்தே உணவாகி விட்ட நிலை. போதாக்குறைக்கு உணர்ச்சிகளால் வேறு. ஆம் பொறாமை, கோபம், பயம், சந்தேகம், காழ்ப்புணர்ச்சி எனப் பல்வேறு உணர்வுகளாலும் மனிதன் தன் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறான். 

இதில் தலையாயது பயம். அஞ்சி, அஞ்சி வாழ்கின்றான். அவன் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்கிறார். மகாகவி பாரதியார். இதனை நம் குறளாசான் கூறுவதைப்பாருங்கள். 

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின். (குறள் 497) என்பதன் மூலம், அச்சம் என்றும் துணையாகாது. 

அஞ்சாமல் நல்லவனவற்றை இடம் அறிந்து செய்யும் ஒருவருக்கு, அவரது துணிவைத் தவிர அவருக்கு வேறு துணை தேவையில்லை என்கிறார். காரணம் அச்சிமின்மையே ஆரோக்கியம் ஆகும். பயம் அது ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வரக் காரணம், தங்களுக்கு வந்து விடுமோ என்ற பயம் தான். அதனால் தான் “அச்சம் தவிர்” என்றனர் ஆன்றோர்.

இதனைக் கூறும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அக்பரிம் ஒருவர் சவால் விட்டார். “என் வேலைக்காரன் சரியான சாப்பாடு ராமன். நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய விருந்துணவாகக் குறைவின்றி சாப்பிட உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ, உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. 

ஆனால், அவன் ஒரு கிலோ கூட எடை கூடக் கூடாது என்றார். மன்னரிடமே சவாலா !!! அக்பர் யோசித்தார். தன் அருகில் இருந்த பீர்பாலைப் பார்த்தார். பீர்பால் அரசர் அக்பர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்.

மூன்று வேளைகளும் தவறாது மகத்தான விருந்துணவு அவனுக்குப் படைக்கப்பட்டது. ஓரிரு மாதங்கள் கழிந்தன. அவனது எடை அப்படியே இருந்தது என்பதை விட எடை குறைந்தும் விட்டது. அக்பருக்கோ ஒரே ஆச்சரியம் ! இது எப்படி சாத்தியம் என, பீர்பால் சொன்னார். இது வேறொன்றுமில்லை மன்னரே ! அவனுடைய இரவுப் படுக்கைய மட்டும் சிங்கக் கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு தாழிடப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் திறந்துக் கொள்ளும் என்று சொன்னேன். அவ்வளவுதான், பயத்தின் காரணமாக சத்து அவன் உடலில் ஒட்டவில்லை என்றாரே பார்க்கலாம்.

“எண்ணம் போல் வாழ்வு” ஒரு எண்ணத்தை எண்ணமாகப் பார்த்தால் அது ரசனை. ஒரு எண்ணத்தை சற்று கவனித்துப்பார்த்தால் அது சிந்தனை. ஒரு எண்ணத்தை நினைத்து நாம் செய்யும் செயலுக்குப் பெயர் தியானம். ஒரு எண்ணத்தை நினைத்து, நினைத்தபடியே அடைய நாம் செய்வது தான் தவம். அச்சம் தவிர்த்து, சலனமின்றி, தூய நற்சிந்தனையுடன் தவ வாழ்க்கை வாழ்வோம் ! அதுவே ஆரோக்கிய வாழ்வின் வித்தாகும். நலம் பெற்று நீடுவாழ்வோம்.!
(தொடரும்)



Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments