புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 95

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 95

அந்தப் புராதனப் பையைத் திறந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது!

பைக்குள்ளிருந்து  நாணயக்கட்டோடு சேர்ந்து புராதன நூலும்  நிலத்தில் விழுந்தது. நூலின் தாள்கள் சிதைவு பட்டிருந்ததால்,  அதனை அவன் மேலோட்டமாக விரித்துப் பார்த்தபோது, அதிலிருந்து நான்கு பக்கங்கள் கொண்ட இரண்டு தாள்கள் கலட்டப்பட்டிருந்தது.

இப்பொழுது அவன்  புரிந்து கொண்டான்.  அந்தக்குள்ள மனிதர்கள் ஏன் நாணயக்கட்டு ஒன்றை செரோக்கிக்குக் கொடுத்துச் சென்றார்கள் என்பது!

அன்றொருநாள் இர்வின் அந்த புராதன நூலை செரோக்கி இல்லாத நேரத்தில் குகைக்குள் வைத்துப்  பார்த்தபோது, அந்த நூலில் சில தாள்களில் பக்கக்குறிப்பெழுதப்பட்டு, சிவப்புக்கோடிடப்பட்டிருந்ததை அவன் கண்டான்.  அதில் இரண்டு தாள்கள் இப்போது கலட்டப்பட்டிருக்கின்றது.

அதில் அப்படி என்னதான் இருந்ததோ இர்வின் அறிய மாட்டான்!

இவற்றையெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருப்பதற்கு அவனுக்கு இப்போது நேரமில்லை. செரோக்கியும் கிராமத்திலிருந்த மற்ற மனிதர்களும் எங்கு சென்றார்கள் என்பதைக் கண்டு பிடித்தாக  வேண்டும்.

நூலையும், நாணயக்கட்டையும் பைக்குள் திணித்துவிட்டு, பையை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு, குகையை விட்டும் வெளியேறி,  ரெங்க்மாவின் பெற்றோரின் ஜாகை நோக்கி  நடக்கலானான்.

அங்கும் அவனால் எந்த மனித நடமாட்டத்தையும் காண முடியாதிருந்தது!

மேலும்  சற்றுத் தூரம் நடந்து,  புரோகோனிஷ் எல்லையில் அமைந்திருந்த ரங்குவின் ஜாகை வரை சென்றபோதிலும் கூட எந்த மனிதர்களுமே அவனது கண்களில் படவில்லை.

இந்த மனிதர்களுக்கு என்னதான்  நடந்தது?

சிலவேளை செரோக்கி தனக்குக் கிடைத்த நாணயத்தாள்களில் சிலவற்றை  எடுத்துக் கொண்டு, புரோகோனிஷ் கிராமத்தவர்களையும்  கூட்டிக்கொண்டு, நகரப்பகுதியை நாடிச்சென்று விட்டானோ?

எந்தக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்காத நிலையில் இர்வின், தொடர்ந்து நடந்து  “பெரிய கல்” லில் ஏறலானான்! கல்லின் உச்சிக்குச் சென்றவன் சுற்று முற்றும் பார்த்தான், எங்கு தேடியும் எந்த  மனிதர்களும்  அவனது கண்களில் படவில்லை!

அப்பொழுது அவன் கல்லடிவாரத்திலிருந்து வந்த அந்தக் குரலைக்  கேட்டான்!

கிணற்றுக்குள்ளிருந்து ஒருவர் பேசுவது போன்றிருந்தது அது அவனுக்கு!

கல்லடிவாரத்தை  அவன் எட்டிப் பார்த்தபோது, முற்றும் பழுத்து பழுப்புநிற கேசத்தைக்  கொண்ட வயதான ஒரு மனிதனின் தலைப்பகுதி  மாத்திரம் அவன் கண்களுக்குத்  தெரிந்தது!

யாரந்த மனிதர்?
(தொடரும்)


Vettai Email-vettai007@yahoo.com


 


Post a Comment

Previous Post Next Post