கல்லடிவாரத்தை இர்வின் எட்டிப் பார்த்தபோது, தெரிந்த பழுப்புநிறக் கேசத்தைக் கொண்ட வயதான அந்த மனிதன் யார்?
வனத்துக்குள் வாழும் குறிப்பிட்ட சிலரைத்தவிர அநேகமானோர் உலகில் எங்காவதிருந்து வந்து திரும்பிச் செல்லமுடியாமல் மாட்டிக் கொண்டு, இந்த வனவாழ்க்கையையே தஞ்சம் கொண்டு வாழ்பவர்கள்!
அந்த வகையில் கல்லடிவரத்தில் தனித்து வாழ்ந்து வரும் யோகியாரும், ஒரு காலத்தில் கிரேக்கத்து ‘கிரிடீ” தீவின் கராபாஷா பகுதியிலிருந்து “அமேசான்” வனத்தைச் சுற்றிப் பார்க்க வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.
யோகியாரின் தந்தை கராபாஷாப்பகுதியில் “இஸ்ம்” எழுதுவதிலும், “பஆல்” பார்ப்பதிலும் பிரசித்தி பெற்றவராவார்.
அப்பகுதியில் எவராவதொருவர் மருத்துவரால் சுகப்படுத்த முடியாத நிலையில் கைவிடப்பட்டால், யோகியாரின் தந்தையை நாடியே நோயாளியை அழைத்து வருவார்கள். அவர் வழங்கும் “இஸ்மை”ப் பயன்படுத்தி நோயிலிருந்தும் மீட்சி பெற்றோர் அதிகம்.
“பஆல்” பார்ப்பதன் மூலம் கராபாஷா பகுதியில் எங்காவது, ஏதாவதொரு பொருள் காணாமற்போயிருந்தால் அல்லது திருடப்பட்டிருந்தால் அதனைக் கண்டு பிடித்துக் கொடுப்பதிலும் அவர் பிரசித்தி பெற்றிருந்தார்.
யோகியார் தனது சிறு பிராயத்தில் தந்தையின் நடவடிக்கைகளில் அதிகம் ஈர்க்கப்பட்டவராகவும், தந்தை செய்கின்றவற்றை மிகவும் நுணுக்கமாகக் கவனித்து வருபவருமாக இருந்தார்!
ஏதோ அவரின் துரதிர்ஷ்டமோ அல்லது நல்லதிர்ஷ்டமோ தான் சிறு பிள்ளையாய் இருக்கும்போது தனது குடும்பத்தாரோடு அமேசான் வானத்தைப் பார்க்கவந்த அவர் கல்லிலிருந்து கால் சறுக்கி கல்லடிவாரத்தில் விழுந்து விட்டார்.
கல்லிலிருந்து சறுக்கி விழுவோர் எவருமே உயிர் பிழைத்தது கிடையாது என்று வனவாசிகள் குறிப்பிட்டதை நம்பிய கராபாஷா குடும்பத்தினர், தனது பிள்ளையை மீட்கும் முயற்சியில் கூட இறங்காமல், வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டனர்!
இது நடந்து நூறு வருடங்கள் கடந்திருக்கலாம்!
கல்லடிவாரத்தில் விழுந்த சிறுவனின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாததால், அவன் அப்பகுதியில் கிடைத்த பழங்கள், கிழங்குகளை உண்டு, அங்கிருந்த மிருகங்களோடு நட்போடு வாழ்ந்து வந்த நிலையில், இப்போது அவன் முதுமையை எய்தி வனவாசிகளால் “யோகியார்” என அழைக்கப்பட்டு வருகின்றான்! வனவாசிகள் எவரும் யோகியாரை நேரில் கண்டதில்லை செரோக்கியைத் தவிர!
வனவாசிகளும் யோகியாரும் இந்நாள் வரைக்கும் இங்கிருந்தும் அங்கிருந்தும் கத்திப் பேசியே உறவாடி வந்த நிலையில், செரோக்கி தனது ரெங்க்மாவுக்காக, மிகவும் துணிச்சலோடு கல்லடி வரையில் இறங்கி, அவரை நேரில் சந்தித்தான்!
கிணற்றுக்குள்ளிருந்து ஒருவர் பேசுவது போலிருந்த அந்தக் குரல் இர்வினைக் கல்லடிவாரம் நோக்கி எட்டிப்பார்க்க வைத்தது!
முற்றும் பழுத்த பழுப்புநிறக் கேசத்தைக் கொண்ட வயதான அந்த மனிதனின் தலைப்பகுதி மட்டுமே அவனது கண்களுக்குத் தெரிந்தது!
“குழந்தாய்... அவர்கள் எல்லோரும் தூரத்தில் தெரிகிறதே ஆறு... அதுதான் “ஓரினகோ” ஆறு... அங்குதான் அவர்கள் சென்றுள்ளனர். நீயும் அங்கு செல்வாயாக!” என்ற ஒலிக்கட்டளையைக் கேட்ட இர்வின், வெகு தூரத்தில் தெரிந்த வலைந்து நெளிந்து செல்லும் ஆற்றினை நோக்கினான்.
‘ஆஹா ... இங்கிருந்து அது வரை வெகு தூரம் போக வேண்டுமே?’
அவ்வளவு தூரம் தன்னால் நடக்க முடியாது என்பதை உணர்ந்த அவன் விழி பிதுங்கி நின்றான்!
“குழந்தாய் உனது நண்பனின் துணைவிக்குப் பரிகாரம் தேடி கிராமத்தவர்கள் அங்கு போயுள்ளனர்! உனது நண்பனிடத்தில் நீ உண்மையான அன்பு வைத்திருந்தால், தூரம் ஒன்றும் உனக்குப் பெரிதல்ல... நீயும் அங்கு செல்வாய்!”
அதன் பிறகு அந்த நரைத்த தலை மலையடிவாரத்திலிருந்தும் மறைந்துவிட்டது!
பெரிய கல்லை விட்டும் இறங்கி வந்த இர்வின், வந்த வழியே திரும்பிச் செல்வதா அல்லது ஆற்றை நோக்கி நடையைக் கட்டுவதா என்று யோசித்து நின்றான்!
(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments