அந்த மூக்கைப் பற்றிய உண்மையான கதையை இங்கே நான் பதிவு செய்கிறேன்.
இந்த கதை ஆரம்பிக்கும்போது உலகப் பிரசித்தி பெற்ற அந்த மூக்கின் சொந்தக்காரனுக்கு இருபத்தி நான்கு வயது பூர்த்தியாகிவிட்டிருந்தது. அதற்கு முன் அவனை யாருக்குமே தெரியாது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இருபத்தி நான்காவது ஆண்டுக்கு ஏதேனும் சிறப்பு முக்கியத்துவம் இருக்கிறதா என்ன? யாருக்குத் தெரியும்? இந்த உலகின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் பல மாமனிதர்களுடைய வாழ்வில் இருபத்து நான்காவது ஆண்டுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்திருப்பது தெரியவரும். வரலாற்று மாணவர்களுக்கு இந்த விஷயத்தை சொல்ல வேண்டியதே இல்லை.
நம்முடைய கதையின் நாயகன் ஒரு சமையல்காரன். வேண்டுமானால் அடுப்பங்கரை வேலைக்காரன் என்று வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படி அவன் ஒன்றும் சூட்டிகையானவனல்ல. அவனுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. அவனுடைய உலகம் அந்த சமயலறையினால் ஆனது. அதற்கு வெளியே நடப்பவற்றைப் பற்றி அவனுக்கு அக்கறை ஏதும் இல்லை. அதைப்பற்றி அவன் ஏன் கவலைப்பட வேண்டும்? திருப்தியாகச் சாப்பிடுவான். விரும்பிய அளவு மூக்குப்பொடியை உறிஞ்சுவான். தூங்குவான். வேலை பார்ப்பான். அவனுடயை அன்றாட அலுவல்கள் இந்த செயல்பாடுகளில் முடிந்து போயின.
ஒரு ஆண்டின் ஒரு மாதத்தின் பெயர் என்ன என்று அவனுக்குத் தெரியாது. அவனுடைய சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நாள் வரும்போது அவனுடைய அம்மா வந்து அதை வாங்கிச் செல்வாள். மூக்குப்பொடி வேண்டுமென்றால் அந்த கிழவியே அதையும் அவனுக்கு வாங்கிக்கொடுப்பாள். ஒரு திருப்திகரமான வாழ்க்கையை அவன் வாழ்ந்தான். தனது இருபத்து நான்காம் வயது வரை. அதன் பிறகு ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்தது.
அவனுடைய மூக்கு லேசாக நீளவாக்கில் வளர ஆரம்பித்தது. அவனுடைய வாயைக் கடந்து தாடை வரை அது சென்றது.
ஒவ்வொரு நாளும் அது நீண்டுகொண்டே சென்றது. அதை மறைக்கத்தான் முடியுமா என்ன? ஒரு மாதம்கூட ஆகியிருக்காது. தொப்புள்வரை அவனுடைய மூக்கு வளர்ந்துவிட்டது. அவனுக்கு ஏதாவது அசௌகரியமாக இருந்ததா என்றா கேட்கிறீர்கள்? கிடையவே கிடையாது. நிம்மதியாக அவனால் மூச்சுவிட முடிந்தது. மூக்குப்பிடிக்க மூக்குப்பொடியை இழுக்க முடிந்தது. பலவிதமான வாசனைகளை தரம்பிரித்து சொல்ல முடிந்தது. சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு அசௌகரியமும் அவனுக்கு இல்லை.
எனினும், இந்த மூக்கின் பொருட்டு, பாவம் அந்த ஏழை சமையல்காரன் வேலையை விட்டு நீக்கப்பட்டான்.
என்ன காரணம்?
“பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியனை திரும்பவும் அழைத்துக்கொள்” என்று முழங்கியபடி எந்த குழுவும் அவனுக்காக பரிந்துகொண்டு வரவில்லை. இந்த அநியாயத்தைப் பார்த்தும் அரசியல் கட்சிகள் தங்கள் கண்களை மூடிக்கொண்டன.
“அவனை ஏன் வேலையை விட்டு நீக்கினீர்கள்?” எந்த மனிதகுல காதலனும் இவ்விதமான கேள்விகளைக் கேட்டு முன்வரவில்லை.
பாவம் அந்த சமையல்காரன்!
தனக்கு ஏன் வேலை போனது என்று யாருமே அவனுக்கு சொல்லவேண்டியதில்லை. அவனுடைய வீட்டுக்காரர்கள் அவன் பொருட்டு நிம்மதியாக இருக்க முடியாமல் போனதுதான் அதற்குக் காரணம். நீளமூக்கனையும் அவனுடைய மூக்கையும் பார்ப்பதற்காக மக்கள் இரவு பகல் பாராமல் வந்தவண்ணமிருந்தனர். நிழல்படமெடுப்பவர்கள் வீட்டுக்காரர்களுக்கு தொல்லை கொடுத்தனர். பத்திரிகை நிருபர்கள் வேறு. இப்படி வந்து அவஸ்தைப்படுத்தியவர்களால் அது போதாதென்பதுபோல வீட்டிலிருந்து பல பொருள்கள் திருட்டும் போயின.
பணி நீக்கம் செய்யப்பட்ட சமையல்காரன் தனது தனிமையான குடிசையிலே உட்கார்ந்து யோசித்தான். அவனுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாக புரிந்தது. அவனுடைய மூக்கு ரொம்ப பிரபலமடைந்துவிட்டது !
தொலைவிலிருந்தெல்லாம் மக்கள் அவனைக் காண வந்தார்கள். அவனுடைய நீண்ட மூக்கைப் பார்த்து அனைவரும் மூக்கில் விரலை வைத்தனர். சிலர் அவனுடைய மூக்கைத் தொட்டுப் பார்த்தனர். ஆனால் “இன்னிக்கி சாப்டியா?” “ஏன் இப்படி பலவீனமா இருக்கே?” என்றெல்லாம் யாருமே கேட்கவில்லை. குடிசையில் பணம் ஏதுமில்லை. ஒரு சின்ன மூக்குப்பொடி டப்பா வாங்கும் அளவுக்குக் கூட. பட்டினி போட்டு சாகடிக்க அவனென்ன காட்டு மிருகமா? அவன் முட்டாளாக இருக்கலாம். ஆனாலும் அவன் மனிதன். ஒரு நாள் அவன் தன் வயதான அம்மாவை தனியே அழைத்து காதில் கிசுகிசுத்தான் : “இந்த பயங்கரமானவர்களையெல்லாம் வெளியே தள்ளி கதவை மூடு”
அவன் சொன்னபடியே அவன் அம்மாவும் உடனே செய்தாள்.
அன்றிலிருந்து அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் நல்ல நேரம் உண்டானது. மகனுடைய மூக்கை தரிசிப்பதற்காக மக்கள் அம்மாவுக்கு லஞ்சம் கொடுக்க ஆரம்பித்தனர்! இந்த ஊழலுக்கு எதிராக சில நியாயவாதிகள் எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் இந்த செயலின்மையை எதிர்த்து பலர் அரசை அழிக்க புரட்சிக் கழகங்களில் சேர்ந்தனர் !
நீளமூக்கனது வருமானம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. அதிகமானது என்று மொட்டையாக ஏன் சொல்லவேண்டும்? ஆறு ஆண்டுகளில் அந்த ஏழை சமையல்காரன் ஒரு கோடீஸ்வரனாகிப் போனான்.
மூன்று முறை திரைப்படங்களில் அவன் நடித்தான். ‘மனித நீர்மூழ்கிக் கப்பல்’ என்ற அந்த டெக்னிகலர் படத்தைப் பார்ப்பதற்குத்தான் எவ்வளவு ரசிகர்கள்! நீளமூக்கனது உயர்ந்த குணங்களைப் பற்றி ஆறு கவிஞர்கள் காவியமெழுதினர் ! பிரபலமான ஒன்பது எழுத்தாளர்கள் அவனது வாழ்க்கை வரலாற்றை எழுதி பணமும் புகழும் சம்பாதித்தனர்.
அவனுடைய அரண்மனை போன்ற வீடும் பலர் வந்து பார்க்கக்கூடியதாக இருந்தது. யாரும் எந்த நேரத்திலும் அதற்குள் போகலாம். ஒரு வேளை சாப்பிடலாம். ஒரு இழுப்பு மூக்குப்பொடியும் பெற்றுக்கொள்ளலாம்!
அவனுக்கு இரண்டு காரியதரிசிகள் இருந்தனர். இரண்டு அழகான தேர்ந்த பெண்கள். இரண்டு பேருமே அவனைக் காதலித்தனர். மதித்து வணங்கினர். இரண்டு அழகான பெண்கள் ஒரே நேரத்தில் ஒரு ஆண்மகனைக் காதலித்தால் எப்போதுமே பிரச்சனைதான். நீளமூக்குக்காரனின் வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தது.
அவர்கள் இருவர் மட்டுமின்றி அவனைப் பலரும் விரும்ப ஆரம்பித்தனர். தொப்புள்வரை தொடர்ந்த அந்த நீண்ட மூக்கு உன்னதத்தின் குறியீடாக பார்க்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டுக்கொண்டிருந்த முக்கியமான நிகழ்வுகளைப் பற்றி நீளமூக்கன் தனது கருத்துக்களைச் சொன்னான். பத்திரிக்கைகள் அவனுடைய கருத்துக்களைப் பிரசுரித்தன :
“மணிக்கு 10,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் விமானம் உருவாக்கப்பட்டது. நீளமூக்கர் அதைப்பற்றி இப்படிச் சொன்னார்..”.
“டாக்டர் பண்ட்ரோஸ் ·புராசிபுரோஸ் இறந்த மனிதன் ஒருவனை உயிர்ப்பித்தார். அதைப்பற்றிக் குறிப்பிடும்போது நீளமூக்கர் தனது உரையில் …”
உலகின் மிக உயரமான சிகரம் ஏறப்பட்டுவிட்டது என்று தெரிந்தவுடன் மக்கள் இப்படிக் கேட்டனர் : “நீளமூக்கர் அதைப்பற்றி என்ன சொல்கிறார்?”
நீளமூக்கன் ஒரு நடப்பைப் பற்றி ஏதும் சொல்லவில்லை என்றால், ப்பூ… அது ஒன்னுமில்லாத விஷயம் என்றாகிப்போனது. எனவே எதைப்பற்றியும் எல்லாவற்றைப் பற்றியும் நீளமூக்கன் எதாவது சொல்லியாக வேண்டியிருந்தது ! ஓவியம், வாட்ச் வியாபாரம், மெஸ்மரிஸம், புகைப்படக்கலை, ஆன்மா, வெளியீட்டு நிறுவனங்கள், நாவல் எழுதுதல், இறப்புக்குப் பிறகான வாழ்க்கை, பத்திரிக்கைகளின் போக்கு, வேட்டையாடுதல் இப்படி.
இந்த சமயத்தில்தான் நீளமூக்கனைப் பிடிப்பதற்கான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. ஒன்றைப் பிடிப்பது — அதாவது உடல்ரீதியாக பிடிப்பது — என்பது ஒன்றும் புதிதல்ல. இந்த உலக வரலாற்றில் முக்கால்வாசி இப்படிப்பட்ட பிடிப்புகளையும் அதனால் ஏற்பட்ட வெற்றிகளையும் பற்றியதுதானே!
இந்த பிடித்தல் என்பது என்ன? தரிசாகக் கிடந்த ஒரு நிலத்தில் தென்னங்கன்றுகளை நடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலத்துக்கு நீரூற்றி அதை உரமிட்டு வளப்படுத்துகிறீர்கள். அதற்கு வேலி போடுகிறீர்கள். எதிர்பார்ப்பில் ஆண்டுகள் பல கழிந்து கன்று வளர்ந்து மரமாகி பலன் தர ஆரம்பிக்கிறது. அப்போது திடீரென்று உங்கள் தோட்டத்தை உங்களிடமிருந்து யாரோ பிடுங்கிக்கொள்கிறார்கள்.
எல்லாருக்கும் முதலில், நீளமூக்கனைப் பிடிப்பதற்கு அரசுதான் முயற்சி செய்தது. ஒரு நம்பிக்கை தந்திரத்தை அது கையாண்டது. ‘நீளமுக்கர்களின் தலைவன்’ என்று ஒரு பட்டத்தை அவனுக்கு வழங்கியது. ஒரு மெடலையும் பரிசாகக் கொடுத்தது. அந்த தங்க மெடலை அவன் கழுத்தில் ஜனாதிபதியே அணிவித்தார். அதன் பிறகு கைகுலுக்குவதற்கு பதிலாக, அவனுடைய நீண்ட மூக்கை லேசாக செல்லமாகக் கிள்ளினார். இது பத்திரிகையாளர்களால் படமாக்கப்பட்டு எல்லாத் திரையரங்குகளிலும் காண்பிக்கப்பட்டது.
இந்த நேரத்தில்தான் நாடு முழுவதிலும் இருந்த அரசியல் கட்சிகளும் ரொம்ப ஆர்வமாக முன்வந்தன. “மக்கள் போராட்டத்துக்கு தோழர் நீளமுக்கர்தான் தலைமை ஏற்று நடத்தவேண்டும்!” “தோழர் நீளமூக்கரேதான்!”
யாருடைய தோழர்? எதில் தோழர்? அட ஆண்டவனே! பாவம் அந்த நீளமூக்கன்!
நீளமூக்கன் ஒரு கட்சியில் சேரவேண்டும்! எந்த கட்சி? அப்போது நிறைய கட்சிகள் இருந்தன. எப்படி நீளமூக்கனால் ஒரே நேரத்தில் பல கட்சிகளில் சேர முடியும்?
அவனே சொன்னான் : “நான் ஏன் கட்சிகளில் சேரவேண்டும்? நானா? எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கிறது”
அதன்பின் அவனுடைய காரியதரிசிகளில் ஒருத்தி சொன்னாள் : “தோழர் நீளமூக்கர் என்னை விரும்பினால் என்னுடைய கட்சியில் சேரவேண்டும்”
அதற்கு நீளமூக்கன் எதுவும் சொல்லவில்லை.
“நான் எதாவது கட்சியில் சேரவேண்டுமா?” என்று இன்னொரு காரியதரிசினியைக் கேட்டான். அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்துகொண்ட அவள், “ஏன் சேரவேண்டும்?” என்று பதில் சொன்னாள்.
அந்த நேரத்தில் ஒரு கட்சி இந்த முழக்கத்தோடு வந்தது : “எங்கள் கட்சி நீளமூக்கரின் கட்சி. நீளமூக்கரின் கட்சி மக்களின் கட்சி”
மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் இதைக்கேட்டு கொதித்தெழுந்தனர். நீளமூக்கனின் காரியதரிசினிகளில் ஒருத்தியை வளைத்துப் போட்டு அவள் மூலமாக ஒரு அறிக்கை விட்டனர். “நீளமூக்கர் நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார். இதுநாள்வரை அவர் எல்லாரையும் ஏமாற்றிக்கொண்டுதான் இருந்தார். தன்னுடைய நடிப்பில் என்னையும் ஒரு பகடைக்காயாக பயன்படுத்திவிட்டார். இப்போது ஒரு உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அந்த நீளமான மூக்கு உண்மையில் ரப்பரால் ஆனது”
வாவ்! எல்லா பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி தலைப்புச் செய்தியாக முதல்பக்கத்தில் வெளியானது. நீளமூக்கனின் நீளமூக்கு ரப்பரால் ஆனது!
அதன்பிறகு மக்கள் அமைதியாக இருப்பார்களா என்ன? கோபமாக இதற்கு எதிர்வினை செய்யமாட்டார்களா என்ன? தந்திகளும், தொலைபேசிகளும், கடிதங்களும் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்தன! ஜனாதிபதிக்கு நிம்மதியோ அமைதியோ இல்லாமல் போனது. “நீளமூக்கனின் ரப்பர் மூக்கு அழிந்து போகட்டும்! நீளமூக்குக் கட்சி ஒழிக! புரட்சி வாழ்க!”
நீளமூக்குக்கு எதிரான அரசியல் கட்சி இவ்விதமாக ஒரு அறிக்கைவிட்டதும் அதை எதிர்த்து எதிர்க்கட்சி அவனுடைய இன்னொரு காரியதரிசினி மூலமாக எதிர் அறிக்கை விட்டது : “அன்புள்ளம் கொண்ட நாட்டுமக்களே! குடிமக்களே! அவள் சொன்னது ஒரு பச்சைப்பொய். தோழர் நீளமூக்கர் அவளை காதலிக்கவில்லை. அதனால் அவள் இப்படி பழிவாங்குகிறாள். நீளமூக்கரின் புகழையும் செல்வத்தையும் தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவளுடைய பேரவாவில் விளைந்த பொய் அது! அவளுடைய சகோதரர்களில் ஒருவர் எதிர்க்கட்சியில் இருக்கிறார். அந்த கட்சியின் உறுப்பினர்களின் உண்மையான நிறத்தை இப்போது காட்டுகிறேன். தோழர் நீளமூக்கரின் நம்பிக்கையான காரியதரிசினி நான்தான். அவருடைய மூக்கு ரப்பரால் ஆனதல்ல. எனது இதயம் உள்ளே துடித்துக்கொண்டிருப்பது எவ்வளவு உண்மையோ அதேபோல அவருடைய மூக்கும் உண்மையானதே. இந்த மாதிரி எசகுபிசகான சூழ்நிலையில் தோழர் நீளமூக்கரை ஆதரிக்கும் கட்சி நீடூழி வாழட்டும்! மக்கள் முன்னேற்றத்தைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த குறிக்கோளுமில்லை. புரட்சி நீடூழி வாழ்க!”
இப்போது என்ன செய்வது? மக்கள் மனதில் ரொம்ப குழப்பம் ஏற்பட்டது. நீளமூக்கனுக்கு எதிரான கட்சியின் தலைவர்கள் ஜனாதிபதியை குற்றம் சொல்ல ஆரம்பித்தார்கள் : “முட்டாள் அரசு! ‘நீளமூக்கர்களின் தலைவன்’ என்ற பட்டத்தை மக்களை ஏமாற்றிய ஒருவனுக்கு கொடுத்திருக்கிறார்கள்! தங்கமெடல் வேறு! இந்த ஏமாற்று வேலையில் ஜனாதிபதிக்கும் பங்கு உண்டு. தேசிய நலனுக்கு இதில் குந்தகம் ஏற்பட்டுள்ளது. தேசநலனை அவமதித்துவிட்டனர். ஜனாதிபதி ராஜினாமா செய்யவேண்டும். ரப்பர் மூக்கன் கொல்லப்பட வேண்டும்!”
இதற்கு ஜனாதிபதி கோபமாக எதிர்வினை செய்தார். ஒரு நாள் காலை ராணுவமும் டாங்கிகளும் நமது பாவப்பட்ட நீளமூக்கனின் வீட்டைச் சுற்றி வளைத்தது. அவனைக் கைது செய்து கூட்டிச்சென்றனர்.
கொஞ்ச காலத்துக்கு நீளமூக்கனைப் பற்றி எந்தச் செய்தியும் வரவில்லை. அவனுடைய இருப்பை மக்கள் மறந்தும் போயினர். பிறகுதான் அணுகுண்டின் விளைவுகளைப் பற்றிய செய்தியுடன் புது செய்தி வந்தது. என்ன நடந்தது தெரியுமா? எல்லாவற்றையும் மக்கள் மறந்திருந்த அந்த சமயத்தில்தான் ஜனாதிபதியின் அந்த அறிக்கை வந்தது : “மார்ச் 9ஆம் தேதி நீளமூக்கர்களின் தலைவனின் வழக்கு நடைபெறும். 48 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மருத்துவ நிபுணர்கள் அவரைப் பரிசோதிப்பார்கள். உலகின் அனைத்து பத்திரிக்கைகளின் கரஸ்பாண்டெண்டுகளும் அதில் கலந்துகொள்வர். நடப்பதனைத்தும் படமெடுக்கப்பட்டு உலகின் உடனடி பார்வைக்கு வைக்கப்படும். மக்கள் அமைதி காக்க வேண்டும்”
மக்கள் எப்போதுமே மக்கள்தான். அவர்களால் அமைதியாக இருக்க முடியாது. மாநகரத்துக்கு பெருமளவில் அவர்கள் வந்து சேர்ந்தனர். தங்கும் விடுதிகளை முற்றுகையிட்டனர். பொதுமக்களுக்கான வாகனங்களுக்குத் தீ வைத்தனர். காவல் நிலையங்களை எரித்தனர். அரசு கட்டிடங்களை உடைத்து அழித்தனர். வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டன. நீளமூக்கனுக்கான இந்த போராட்டத்தில் பல ஆண்களும் பெண்களும் கொல்லப்பட்டு தியாகிகளாயினர்.
மார்ச் 9. காலை பதினோறு மணி. ஜனாதிபதி மாளிகைக்கு முன்னிருந்த சதுரவடிவ இடம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. லௌடு ஸ்பீக்கர்கள் அலறின. “மக்கள் அமைதி காக்க வேண்டும். பரிசோதனை ஆரம்பித்து விட்டது”
ஜனாதிபதி மற்றும் அவரது காபினட் அமைச்சர்கள் முன்னிலையில் மருத்துவர் குழு கூடி நீளமூக்கனைச் சுற்றிவளைத்தது. ஒரு டாக்டர் அவனது மூக்குத் துவாரத்தினை மூடினார். உடனே அவன் தன் வாயை விரியத்திறந்தான். இன்னொரு டாக்டர் ஒரு ஊசியை எடுத்து அவன் மூக்கு நுனியில் குத்தினார். அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அவனது மூக்கின் நுனியிலிருந்து ஒருதுளி ரத்தம் வந்தது.
டாக்டர்கள் தங்களது ஒருமித்த தீர்ப்பை வழங்கினர் : “இந்த நீளமூக்கு ரப்பரால் ஆனதல்ல. இது உண்மையானதுதான்.”
நீளமூக்கனது காரியதரிசினிகளில் ஒருத்தி அவனது மூக்கின் நுனியில் முத்தமிட்டாள்.
“தோழர் நீளமூக்கர் நீடூழி வாழ்க! நீளமூக்கர்களின் தலைவர் நீடூழி வாழ்க! நீளமூக்கரின் மக்கள் முன்னேற்றக் கழகம் நீடூழி வாழ்க !”
இந்த ஆரவாரமும் ஆனந்தமும் முடிந்தபோது, ஜனாதிபதி இன்னொரு தந்திரவேலை செய்ய நினைத்தார். பாராளுமன்ற உறுப்பினராக நீளமூக்கனைத் தேர்ந்தெடுத்தார் ! நீளமூக்கன் கதையின் முடிவு அதுதான்.
ஆனால் நீளமூக்கன் உறுப்பினராகாத கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஐக்கிய முன்னணி என்ற அமைப்பைத் துவக்கின. “மந்திரிசபை ராஜினாமா செய்ய வேண்டும். பொய்மை எப்படி தொடர்கிறது என்று பாருங்கள்! மக்கள் சிந்தனையில் குழப்பம் உண்டாகாதா? பாவம் இந்த அறிவுஜீவிகள் என்ன செய்வார்கள்?” என்று முழங்கத் தொடங்கின.
நன்றி;ஆபிதீன் பக்கங்கள்
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments