Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஓருயிரும்...!


தளிர் முற்றி இலையாக 
வாழ்ந்து பழுத்துச் 
சருகாய்க் காய்ந்து 
கிளையிலிருந்து
கீழே விழக் காத்திருப்பதை 
போல் காத்திருக்கிறேன்.
வாலிபக் குருதியை 
அள்ளிக் குடித்ததின் 
அடையாளமாய்
ரோமங்களில் நரையும் 
சரீரத்தில் சுருக்கங்களும்.
இசை மீட்டி ஓய்ந்த வீணையின்
தளர் தந்தி போல் 
உடலில் உயிர்.
பால்யத்திலிருந்து 
பாடையில் 
பவானி போகும் 
காலம் வரை 
ஒரு வழிப்பாதையாய் 
கணக்கிட்டுத் 
திரும்பும் ஞாபகங்கள்.
வேரறுத்த நிகழ்வுகளும் 
நீரூற்றிய தடங்களும் 
விடையில்லா 
கேள்வியாய் நினைவில் 
வந்து போகும்.
மகிழ்ச்சியும் 
மன்னிப்பும் கோரி
நெஞ்சுக்குள் மன்றாடி 
புழுங்கியழுது 
வெம்பித் தீர்த்தும்
காலனின் கணக்கிலிருந்து 
எஞ்சுவதில்லை ஓருயிரும்.


Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments