Ticker

6/recent/ticker-posts

Ad Code



உண்மைக் கவிஞன்!


பிரபஞ்சத்தைக் கரைசலாக்கி
பேனைக்குள் ஊற்றி வைத்திருக்கிறான் 
எழுமாறாயூறும் எண்ணங்களை 
உருமாறா எழுதிக் குவிப்பதற்கு

கண்கள் களவாடுகின்றவைகளையும்
காசுக்கு வாங்குகின்றவைகளையும்
இலவசமாய் வாங்குகின்றவைகளையும்
கொத்திப் பறிப்பவைகளையும்
கொட்டித் தீர்ப்பதற்கு

செவிகளுக்கு செல்பாய்ச்சியவைகளையும்
செந்தேன் ஊற்றியவைகளையும்
சிம்மாசனம் அமைத்தவைகளையும்
சேமித்து வைத்து
சிறுகச்சிறுகப் பகிர்வதற்கு

உயிருக்கு உரமூட்டியவைகளையும்
உணர்வுக்கு தீ மூட்டியவைகளையும்
உறவுக்கு கை கொடுத்தவைகளையும்
நேரம் வரும்போது பாரம் கொடுப்பதற்கு

இதயத்தை ஆட்கொண்டவைகளையும்
ஆட்டிப் படைத்தவைகளையும்
ஆணியறைந்தவைகளையும்
ஆசுவாசப் படுத்தியவைகளையும்
பேசு பொருளாக்குவதற்கு

மூளையை குழப்பியவைகளையும்
குதறிக் கிழித்தவைகளையும்
சலவை செய்தவைகளையும்
சங்கடப் படுத்தியவைகளையும்
இளைப்பாற்றியவைகளையும்
எடுத்தோதுவதற்கு

இன்னும்.....
ஆத்மாவை 
ஆரவாரப் படுத்தியவைகளையும்
அமைதிப்படுத்தியவைகளையும்
ஆவணப்படுத்துவதற்கு

மொத்தத்தில்
ஊற்றிய மையில்
ஒரு துளியையேனும்
உலகின் கையில் ஒப்புவிப்பதற்கு!


Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments