மணிமேகலை

மணிமேகலை


சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும் தமிழில் தோன்றிய ஐம்பெருங் காப்பியங்கள் ஆகும். 

அவ்வைந்தினுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும்.இரட்டைக் காப்பியங்களான இவ்விரண்டும் கதை நிகழ்ச்சியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. சிலப்பதிகாரம் இளங்கோவடிகளாலும் மணிமேகலை சீத்தலைச் சாத்தனாராலும் பாடப்பட்டவை. சமண சமயச் செய்திகளைச் சிலப்பதிகாரமும், பௌத்த சமயக் கொள்கைகளை மணிமேகலையும் கூறுகின்றன.

இந்நூல், கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகின்றது.காப்பிய இலக்கணத்திற்கோ இலக்கியச் சுவைக்கோ முதன்மை தராமல் பௌத்த சமயக் கருத்துகளை விளக்குவதிலே இந்நூல் முன்னிலை வகிக்கின்றது.

மாதவியின் மகளான மணிமேகலை உலக இன்ப நாட்டத்தினை அறவே வெறுத்துப் பௌத்த மதத் துறவியாகிச் சிறப்புப் பெற்றதனைச் செந்தமிழ் நலம் சிறக்கச் சாத்தனார் பாடியுள்ளார்.

பௌத்த மதக் கோட்பாடுகள், ஒழுக்க நெறி, அரச நெறி, பசி போக்கும் அற மாண்பு இவற்றுடன், சிறைக் கோட்டங்களை அறக்கோட்டமாக மாற்றி அமைத்தல், கள்ளுண்ணாமை, பரத்தைமையை ஒழித்தல் போன்ற சீர்திருத்தக் கருத்துகளையும் சமுதாய மேம்பாட்டையும் வலியுறுத்திக் கூறுகின்ற நூலாக மணிமேகலை விளங்குகிறது.

பசி என்பது ஜீவராசிகளுக்கு குறிப்பாக மனிதர்களுக்கு இயற்கை. அது தீர்க்கப்பட வேண்டும். உணவு கொடுக்கப்பட வேண்டும்.பசியும் அதைத் தீர்க்கும் வழியும் மணிமேகலையில் நன்கு கூறப்பட்டுள்ளன.பசிப்பிணியின் கொடுமையை பற்றி தீவதிலகை மூலம் அறிகிறோம்.

"குடிப் பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் பசிப்பிணி என்னும் பாவி"
அது தீர்த்தோர் புகழை என் நாவினால் சொல்ல இயலாது.

"மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
உலகினில் உணவு அளிப்பவரே உயிரளித்தவர் ஆவார்.
என்று பசிப்பிணி போக்குதல் பற்றி மணிமேகலை குறிப்பிடுகிறது.

ஐம்பெருங் காப்பிய நூல்களையும் தமிழன்னையின் ஐந்து அணிகலன்களாக ஆன்றோர்கள் கற்பித்துள்ளனர். அவற்றுள் இம்மணிமேகலை மேகலை என்னும் இடை அணி ஆகும் பெருமையுடையதாகத் திகழ்கின்றது.



Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

Previous Post Next Post