கண்ணோரம் வழிந்த கண்ணீர் அவன் சட்டையை நனைத்து. “என்னை மன்னித்து விடு என் தேவதையே” என்ற வரிகளை எழுதிவிட்டு விழிகளை மூடிக் கொண்டான். அடிவான சூரியன் மெதுவாக மேலே எழும்பிக் கொண்டிருந்தது.
திருமணம் முடிந்து முதன் முதலாக தேவகி அவ்வீட்டில் காலடி வைத்த நேரத்தை நினைந்து கொண்டான். தலை நிறைய மலர்களுடனும், மனம் நிறைந்த குதூகலத்துடன், சிவாவின் கனவான வீட்டில் முதன் முதலாக காலடி வைக்கின்றாள் தேவகி. இறுகப் பற்றிய அவனின் கரங்களை பற்றிக் கொண்டு காதலுடன் கணவனை நோக்குகின்றாள்.
“சிவா, இறப்பும் எம்மைப் பிரிக்கக் கூடாது” என்கின்றாள். அவளின் மெத்தென்ற கன்னத்தை தட்டியவாறே, “இந்த நல்ல நேரத்தில் சாவைப் பற்றி என்ன பேச்சு?” என்கின்றான் சிவா.
சிறு பிள்ளை போல் வீட்டையே வளைய வருகின்றாள் தேவகி. ஆசிரம வாழ்க்கையும், அதன் கட்டுப் பாடுகளும், பின்னர் ஹாஸ்டல் வாசமும் என்று ஒரே வட்டத்துக்குள் வாழ்ந்த வாழ்க்கை. இன்று அவளுக்கென்று ஒரு வீடு. அவளுக்காக உருகும் அன்பான கணவன், பெயர் சொல்ல ஓர் பிள்ளை அத்துடன் அவள் விரும்பிய வாழ்க்கை. பின் சந்தோசத்துக்கு என்ன குறை.
தனியாக உட்கார்ந்திருந்த சிவா பெருமூச்சுடன் முன்னால் இருந்த தோட்டத்தை நோக்குகின்றான். இனிய காலைப் பொழுதில் மலர்களை வட்டமிடும் வண்ணத்துப் பூச்சுகளுக்கு மத்தியில் தேவகி தோன்றுகின்றாள். படபடவென இமைகளை மூடித்திறந்து புன்னகையுடன் பட்டாம் பூச்சுகளுடன் பேசுகின்றாள். அவள் பேசுவது அந்தப் பட்டாம் பூச்சுகளுக்கு புரியுமோ இல்லையோ, அவற்றை அக்கறையோடு நோக்கி சிறு பிள்ளை போல் அவற்றிற்கு ‘குட் மார்னிங்’ சொல்கின்றாள். அவை அவள் சொன்னதை கேட்டனவோ என்னவோ, அவள் முகத்தை சுற்றியும் வட்டமிடுகின்றன. கலகலவென சிரித்து விட்டு, சிவாவை நோக்கி “எனக்கு பிடிச்சிருக்கு” என்கின்றாள்.
வீட்டின் கூரையின் விட்டத்தில் அணில்கள் ஜோடியொரு கூப்பாடுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அக்கறையோடு அவைகளை பார்த்தவள் நாணத்துடன் கண்களை தாழ்த்திக் கொள்கின்றாள். “வெட்கமில்லை இந்த அணில்களுக்கு” என்கின்றாள். அவளின் சிவந்த கன்னங்களைப் பார்த்து அவன் சிரிக்கின்றான்.
ஆற்றின் கரையோரம் அவளும் அவனுமாக நடக்கின்றார்கள். இறுகப் பிடித்த அவன் கரங்களுடன், அவனுடன் இணைந்து நடக்கும் இனிமையை அனுபவித்தவளாக அவன் தோளில் தலை சாய்கின்றாள்.
“சிவா... உன்னை நான் சந்தித்து என் பாக்கியமே” என்கின்றாள் கண்கள் கலங்க. தன் உணர்வுகளை என்றும் வெளிக்காட்டத் தெரியாத சிவா, அப்பாவியாக சிரிக்கின்றான். கைகளைப் பற்றி இருந்த விரல்களை விலக்கி, அவளை ஆதரவாக தன் கரங்களுள் அணைக்கின்றான். அந்த மாலைப் பொழுதும், ஆற்றங்கரையின் இனிமையும், அவளின் அருகாமையும் பாரதியின் கனவு தனக்கே அமைந்ததாய் எண்ணி இறுமாப்புக் கொள்கின்றான்.
இரவின் அணைப்பில் உலகம் உறங்க, நிலவின் நிழலில், தோட்டத்தில் இலேசான குளிர் காற்றில், சிவாவும் தேவகியும் மட்டும் விழித்துக் கொண்டு இருக்கின்றனர். உறங்கும் எண்ணம் கூட இன்றி காதலில் இலயித்தவர்களாக, எதிர்காலக் கனவுகளைப் பற்றி உரையாடியவர்களாக..
(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments