திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-25

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-25


குறள் 981
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

மாப்ள.. நீ செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் நல்லா உணர்ந்து சிறப்பா செய்யணும். இதுக்காக நீ எடுக்கக் கூடிய முயற்சிகள் எல்லாமே நல்ல கடமைகள் தான் மாப்ள. 

குறள் 1025
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

மாப்ள .. ஒருத்தன் குத்தஞ் சொல்ல முடியாதபடி நடந்துக்கிறானா? மக்கள் நலனுக்காக பாடு படுதானா? அப்படிப்பட்டவனை பொதுமக்கள் தங்களது சுற்றத்தாரா நெனச்சு கொண்டாடுவாங்க மாப்ள.. 

குறள் 1027
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.

மாப்ள.. ஒரு போர்க் களத்துல படையைத் தலைமை தாங்கி வழி நடத்தக் கூடிய வாய்ப்பு திறமை உள்ளவர்களுக்குத் தான் கிடைக்கும்.. 

இது மாதிரி தான் நாட்டுல இருக்கக்கூடிய மக்களைக் காப்பாற்றி அவர்களை உயர்வடையச் செய்யும் பொறுப்பும், அவர்களுக்குள் காணப்படும் ஆற்றல் மிக்கவர்களுக்குத் தான் உண்டு மாப்ள. 

குறள் 1028 
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.

மாப்ள.. பொது வாழ்க்கைக்கு வந்த பொறவு, நான் எம்புட்டு பெரிய ஆளு. அவன் என்னைப் போயி  இப்பிடி மோசமா பேசிட்டான. தரக் கொறைவா பேசிட்டானன்னு  மனசு ஒடைஞ்சு பொயிரக்கூடாது.
நல்லது செய்யதுக்கு நேரம் காலம்லாம் பாக்கக் கூடாது. சுணக்கம் காட்டுனா, மக்களுக்கு நல்லது செய்யமுடியாம பொயிரும் மாப்ள. 

குறள் 1029.
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.

மாப்ளை.. தலைமைப் பொறுப்புல இருக்கவொ, தங்களை நம்பி இருக்கவங்களைக் காப்பாத்த உயிரைக் குடுத்து உழைப்பாவொ. மக்களுக்கு எந்த கேடும் வந்துரக்கூடாதுங்கதுல கண்ணும் கருத்துமா இருப்பாவொ. இதைப் பாக்கிற மக்கள் எல்லோருமே அவொளோட ஒடம்பு சங்கடங்களை மட்டுமே தாங்கதுக்காக படைக்கப் பட்டதோன்னு  நெனைப்பாங்க மாப்ள. 

குறள் 1030
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.

மாப்ள.. தும்பம் வந்து நம்மை தாக்கும் போது, கூட இருந்து அதை சமாளிக்கக் கூடிய திறமைசாலி நம்ம பக்கத்துல இருக்கணும். அப்படி இல்லாட்டா தும்பம் நம்ம குடியை வெட்டிச் சாய்க்கக் கூடிய கோடாரியா ஆயிரும். 
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post