நசீமா அக்கா, இவருடன் சில நிமிடங்கள் பழகியவர்களும் அத்தனை எளிதில் அவரை மறந்துவிடமாட்டார்கள்.
எனில், ஆண்டுகணக்கில் பழகியவர்களின் நிலைப் பற்றி தனியாகச்சொல்ல வேண்டியதில்லை.
வாழ்வில் தன்னை எதிர்நோக்கி வந்த அத்தனை சவால்களையும் இடதுகையால் ஒதுக்கி தள்ளிவிட்டு தன்னம்பிக்கையுடன் பீடுநடைபோட்டவர்.
அவருடைய வாழ்வில் தான் எத்தனை ஏமாற்றம்.
அப்பாவிலிருந்து துவங்கி இறுதியாய் மகன் வரைக்கும் அது வெகுநீளப்பட்டியல்.
ஆனால் அக்கா ஒரு வகையில் அதிர்ஷ்டசாலியும் கூட.
இறுதியாய் வெளிநாட்டில் இருந்தாலும் தன் பேரப்பிள்ளையுடன் வாழ்வை அனுபவித்துக்கொண்டாடியவர்.
மனிதனுக்கு எத்தனை தன்னம்பிக்கை இருந்தாலும் உடல்நலம் குன்றிப்போனால் ஒரு கட்டத்திற்கு மேல் அது நம்மை முடக்கிப்போட்டுவிடும். நசீமா அக்காவின் நம்பிக்கையையும் தகர்த்தது இந்த நோய்தான்.
வித்தியாசாகர் சாரும், குவைத்தில் இயங்கிவரும் உதவும் கரங்கள் குழு நண்பர்களும் தொடர்ந்து அவரை சந்தித்து அவர் தேவைகளை நிறைவேற்றி வந்தார்கள். இவர்களால் தான் அக்கா தனிமையை உணரவில்லை.
இறுதியாய் அக்காவுடன் பேசிய போது வலியால் துடித்துக்கொண்டிருந்தார். நாம் பேசுவதே அவருக்கு தொல்லை என்று தோன்றியதால் பிறகு பேசவில்லை.
அக்காவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம். இங்கு செய்யும் நல்லது கெட்டது அத்தனைக்கும் ஒருநாள் இறைவனிடம் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அவரை குவைத்தில் உள்ள தமிழர்கள் அத்தனை பேருக்கும் தெரியும். அவர் கேமராவுக்குள் அடங்காத முகங்கள் இல்லை எனும் அளவுக்கு அவர் பிரபலம்.
அவர் எடுத்த புகைப்படங்களைக் கூட தன் பெயரில் போட்டுக்கொண்ட நல்லவர்கள் சூழ் உலகு இது.
இனி அவர்களுக்கு அத்தகையதொரு வாய்ப்பு அமைய போவதில்லை.
நான் குரான் வாசிக்க விரும்புகிறேன் என்பதை அறிந்து அதை வாங்கி எனக்கு பரிசாகத்தந்தவர்.
இன்னும் என்னுடைய முதல் புத்தக வெளியீட்டு விழாவுக்கு காரணமாய் இருந்தவர். அவர் இல்லையென்றால் நிச்சயமாய் என்னுடைய "போர்க்களத்தில் ஒரு திருமணம்" நூல் குவைத்தில் வெளியாகி இருக்க வாய்ப்பில்லை.
அக்கா என்னுடைய அன்பிற்குரியவர் மட்டுமல்ல என்னுடைய நன்றிக்குரியரும்தான்.
அக்காவுடைய ஆசைகளில் ஒன்று குவைத்தில் மரித்து அங்கேயே அடக்கம் பண்ணப்பட வேண்டும் என்பது. அதை அவர் தொழும் அல்லாவே நிறைவேற்றிக்கொடுத்திருக்கிறான் என்றே தோன்றுகிறது.
மண்ணில் பிறந்த அனைவரும் ஒரு நாள் மரணத்தை எதிர்கொண்டே ஆக வேண்டும்.
அதற்குமுன் நாம் வாழ்ந்த காலத்தில் எதை செய்திருக்கிறோம்? யாரையெல்லாம் சம்பாதித்திருக்கிறோம் என்கிற ஒன்று இருக்கிறதில்லையா?
அக்கா நூற்றுக்கணக்கான நல்ல உள்ளங்களை சம்பாதித்திருக்கிறார்.
அவர் எடுத்த புகைப்படங்களினூடே, அவர் எழுதிய கவிதைகள், கதைகளினூடே நம் உள்ளங்களில் என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.
கொல்லால் எச். ஜோஸ்
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments