புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -104

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -104


குளக்கரையில் நீருக்குள் படர்ந்திருந்த தாமரை இலைகளை ஆளுக்கொன்றாகப் பறித்துவரும்படி ரெங்க்மாவின் தந்தை குறிப்பிட்டுவிட்டு, தான் சுமந்து வந்த- தானே வேட்டையாடிய  மிருகத்தை  ஓரித்தில் இறக்கி வைத்து விட்டு, அதனைக் கூறுபோடுவதில் தன்னை ஈடுபடுத்தலானார்!

இலைகளைப் பறித்து வந்தவர்கள் அவற்றைக் குளக்கரையின் மணல் நிலப்பரப்பில் வரிசைப்படுத்திப் பரப்பி வைத்தனர். பகுதி பகுதியாகக் கூறுபோடப்பட்ட மிருகத்தின் மாமிசத்தை அவர் ஒவ்வோர்  இலைகளிலும்  வைத்துக்கொண்டிருக்க மற்றவர்களும் அவருக்கு உதவினர்.

மிருகத்தின் கழிவுகளை அவர்கள் குளிதோண்டிப் புதைத்துவிட்டு  தத்தமது பங்குகளை எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடரலாயினர்.

கும்மிருட்டினுள் காததூர நடையின் பின்னர், புரோகோனிஷ் கிராமத்துக்குள் அவர்கள் நுழைந்ததும், தத்தமது ஜாகைகளை நாடிச்சென்றனர். செரோக்கியும் ரெங்க்மாவும் தமது மனைக்குள் நுழைய, இர்வின்  குகைக்குள் நுழைந்தான்.

இர்வின் அங்கிருந்த விரிப்போன்றை உதறியே எடுத்து தரையில் விரித்து இளைப்பாறிக்கொண்டிருந்தபோது செரோக்கி குகைக்குள்  நுழைந்து, குகைச்சுவற்றில் சாய்ந்தவாறு அதே விரிப்பில் அமர்ந்து கொண்டான்.

இர்வினின் நினைப்பிலிருந்தும் இலேசில் மறைந்துவிடாதிருந்த  ‘குள்ளர்கள்’ பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம்  அவனை  செரோக்கியிடத்தில் மெல்லக் கதையைத் தொடங்கவைத்தது.

அப்பொழுதுதான் செரோக்கிக்கு  தான் மறைத்து வைத்திருந்த புராதன நூல் அடங்கிய பை நினைவுக்கு வந்தது. குகையின் உட்பகுதிக்குள் நுழைந்து கல்லிடுக்கினுள் மறைத்துவைத்திருந்த  அதனை எடுத்துவந்து இர்வினிடத்தில் கொடுத்தான்.

ஏற்கெனவே செரோக்கிக்குத் தெரியாமல், தான் பார்த்திருந்த அந்தப்பையை அவன் திறந்தபோது நூலும் அதனோடு சேர்ந்து பணக்கட்டும் அங்கு பத்திரமாக இருப்பதைக்  கண்டான்.  நூலை மட்டும் வெளியில் எடுத்தவன், அதன் பக்கங்களை மேலோட்டமாகப்  புரட்டிவிட்டு,  அங்கு நான்கு பக்கங்கள் கொண்ட இரண்டு தாள்கள் கலட்டப்பட்டுள்ளதை செரோக்கியிடத்தில் சுட்டிக் காட்டினான்.

பக்கங்கள் இருந்தது பற்றியோ, அவை இல்லாமற்போனது பற்றியோ செரோக்கிக்கிக்கு எதுவுமே தெரியாது. அதனால் அவன் அதுபற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை!

ஆனால் நூலின் பக்கங்கள் மறைந்துபோன  இரகசியத்தைத் தெரிந்து அறிந்து கொள்ளும் நோக்கில் இர்வின், அது பற்றி செரோக்கியிடத்தில் கிளறமுற்பட்டான்.

“அன்று வந்த குள்ளர்கள் இங்குதான் தங்கினார்கள்... இல்லையா? ஏன் அவர்கள் இதிலிருந்தும் சில பக்கங்களைக் கலட்டி எடுத்திருக்கக் கூடாது? அவர்கள் தாம் கலட்டி எடுத்த அந்தப் பக்கங்களுக்காகத்தான் உனக்கு இந்தக் கட்டுப்பணத்தைத் தந்திருக்க வேண்டும்!” என்று குறிப்பிட்ட இர்வின், ‘அவர்களுக்கு அந்தப் பக்கங்களினால் என்னதான் பிரயோசனம் இருக்கப்போகின்றது’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டவனாக,

“அவர்கள் பற்றிய ஏதாவது தடயங்கள் உன்னிடம் இருக்கின்றதா?” என்று செரோக்கியிடத்தில் வினவினான். ஏதோவொன்று  நினைவுக்கு வந்த செரோக்கி, எந்தப் பதிலும் சொல்லாமலே  தன் மனை நோக்கி விரைந்து செல்லலானான்! 
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post