
அவளுக்கு குடும்பம் என்றால் என்னவென்று அறியாத வயது,
அம்மா அப்பா பேச்சே வேதவாக்கு....
அவர்கள் கூறியதை அச்சுப் பிறழாமல் செய்வதில் திறமைசாலி, அம்மாவின் மேல் அளவில்லாத அன்பு.....
முதல் குழந்தை என்பதால் முழுவதும் சுதந்திரம்... எடுத்தது கிடைக்கும், பிடித்தது கிடைக்கும்.
படிப்பில் சுட்டி அதற்குள் பிறந்துவிட்டனர் தங்கையும்,தம்பியும்..
நேரம் கூடிவிட்டது, பெற்றவருக்கு பாரம் கூடிவிட்டது... கிடைத்து விட்டான் மாப்பிள்ளை, சரி என்றான் தாய்மாமன் தலை ஆட்டியபடி. கண்ணீரில் அவள்....
அசைந்ததை விற்றுவிட்டார், அசையாததை வைத்துவிட்டார்
ஐம்பது பவுன் போட்டு அழகான ஓர் கல்யாணம்...
புது வீடு புது முகங்கள்.. அனைத்தும் நகர்ந்தது ஆரம்ப புன்னகையில்....
துணைவன் எல்லாம் அவன்..இடம் மனம் கொடுத்தான் உயிர் கொடுத்தான்..
அம்மைக்கும் மனைவிக்கும்......
போகப்போக சலிப்பு
புன்னகை அவ்வப்போது கடன்,கிடைக்காத சுகம் காரணம் வாங்கி வந்த வரம்...
அம்மை அப்பனாய் வந்தவர்கள் மாமனார் மாமியாராய் பிரதிபலித்தனர்....
உணவெல்லாம் விசமாகி போனது. கற்றுத்தேராத சமையலின் முன்னால் மாமியார் வார்த்தைகள், மௌனத்திலும் கொடுமையானது மாமனாரின் அமைதி...
கடந்து மிதந்து நகர்ந்தேறுகிறாள் அவ்வப்போது மன ஓடத்தில்.. கணவனின் ஆறுதல்களால்...
புகுந்த இடத்தில் புரியாத புதிராகி போகிறது எல்லாம்...
அமைதி முக்கியம்.....
அதிகமாக பேசாதே...
ஆசைகளை மற....
அனாவசிய பேச்சை துற....
ஆடைகளில் இயல்பை கொள்......
இதுதான் உலகமறி....
எல்லாம் கடந்து வந்த பிறகு கைக்கு கிட்டவில்லை இன்பமென்னும் ஓடம்.....
காலம் இப்படியே செல்லாது.....
நம்பிக்கையுடன் அவள்....
முதல் பெண்ணாம் மூதேவி.....
கவிஞர் சே கார்கவி
நாகப்பட்டினம்
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments