பிரிய மனமில்லாமல் மாலைச் சூரியன்-(தன்முனைக் கவிதைகள்)

பிரிய மனமில்லாமல் மாலைச் சூரியன்-(தன்முனைக் கவிதைகள்)


இயைந்து வாழ
ஆசை வருகிறது
உலகத்தின் மாசில்லா
இயற்கையின் குடிலில்

செயற்கைக் கண்கள்
ஒளிரத் தொடங்குகின்றன
உலகம் ஆதவனைத்
தொலைத்த வேளையில்

மறைந்தும் தெரிந்தும்
மெல்ல விடைபெறுகிறான்
பிரிய மனமில்லாமல்
மாலைச் சூரியன்

ஒளிச்சிறகினை அசைத்தபடி
ஒய்யாரமாகச் செல்கிறது 
ஒற்றையடிப் பாதையில்
இரவு ஊர்தி

சிரித்து சிலிர்த்து
மகிழ்ச்சியில் குதூகலிக்கின்றன
மழையின் விசிறலில்
மரஞ்செடி கொடிகள்

மந்தார மழைக்காலம்
விழாக்கோலம் காண்கிறது
சூரிய ஒளி பிரிகையில்
தோன்றுதே சுந்தர வானவில்

வெள்ளைப் போர்வை
விரைவாகப் போர்த்துகின்றன
பச்சை மரங்கள்
பனி பொழிகையிலே

பஞ்சுக்குவியல்கள்
எங்கும் நிறைந்திருக்கின்றன
பாதையெல்லாம் படிந்த
பனிப்பொழிவு

வளரும் செடியோ
பூவாக மாறுகிறது
புலரல் வேளையில்
பூம்பனி பொழிய

அடுக்கிய முத்துக்கள்
அழகாய்ப் பளபளக்கிறது
அதரங்களின் உள்ளே
அவளின் பல்வரிசை

கூடு சேரும் பறவைகளாய்
இதயம் வந்து சேர்கின்றன
அந்தி நேரத்தில்
உந்தன் ஞாபகங்கள்

இதயப் பாதாளம்
நோக்கித் தாவுகின்றன
மாயக்குதிரைகளோ?
உன் கண்கள்

வானக் கூரையிலிருந்து
விழப் பார்க்கிறதோ?
ஒரு துளி நீராய்
மேகத்திற்குள்ளே பாதிநிலவு

உன் வெறுப்பை உறிஞ்சிக் 
கொள்வதில் பூமியாகிறேன்
அன்பைத்தருவதிலோ
ஆழிப்பேரலையாகிறேன் நான்

இரு வரிக்கவிதையை
மறைத்துக்கொண்டிருக்கிறது
உன் முகத்தில் புரளும்
கார் குழல் வரிகள்

திரைக்குப் பின்னால்
தீவிர சம்பாஷணை நடக்கிறது
யாரென்று தெரியாமலே
பெருகுது இணையத் தொடர்பு

தூக்கி எறியப்பட்ட இடத்தில்
தைரியமாய்ச் சாதிக்கிறது
உயிர்ப்பு மிகுந்த
சிறுவிதை ஒன்று

உனை அர்ச்சிக்கும் கவிதைகள்
ஆக்ராக்கள் ஆகின்றன
வீற்றிருக்கும் எழுத்துக்கள் எல்லாம்
உனக்கான தாஜ்மஹால்கள்

நொடிக்கொரு தடவை
திசையை மாற்றிக்கொண்டு 
இருக்கிறது கிளையில் அமர்ந்து
வாலை ஆட்டும் சிட்டுக்குருவி

மழையாக வந்து
என்னில் பொழிகிறாய்
மயங்கி வீழ்ந்து கிடக்கிறேன்
மண்ணில் மாம்பிஞ்சாக

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post