திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-31

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-31


குறள் 70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

ஒரு மவன், தன்னோட அப்பன் அம்மைக்கு செய்ய வேண்டிய கைமாறு என்னன்னு தெரியுமா மாப்ள... 

இப்பிடிப்பட்ட நல்ல புள்ளையை பெத்தது, இவன் அம்மையைம் அப்பனும்  பெற்ற பெரும் பேறு ன்னு மத்தவொ புகழ்ந்து சொல்லும்படி நடக்கதுதான். புரியுதா மாப்ள.. 

குறள் 72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

மாப்ள.. மத்தவொங்க கிட்ட அன்பு காட்டாம இருக்கவங்கள்லாம், எல்லாப் பொருளுக்கும், உரிமை கொண்டாடுவாங்க. ஆனா, எல்லார் கிட்டயும் அன்பா இருக்கவொள்லாம், தங்களுக்கு உரிமையுள்ள எல்லாத்தியுமே, மத்தவொளுக்கு உரியதுன்னு நெனைய்ப்பாங்க. 

குறள் 77
என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.

மாப்ள.. எலும்பு இல்லாத ஒடம்போடு இருக்க புழுவை வெயில் வறுத்து எடுத்துரும். அதுமாதிரி தான் மாப்ள.. அன்பு இல்லாத மனுசங்களை அறம் வாட்டி எடுத்துரும்.

குறள் 78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று.

மனசுக்குள்ள அன்பே இல்லாம, ஒரு வாழ்க்கை வாழ்ந்தா... என்ன மாப்ள வாழ்க்கை அது.?

அந்த வாழ்க்கை எப்பிடி இருக்கும் தெரியுமா ?  பட்டுப் போன மரம் ஒண்ணு, நல்ல இறுகின கல் பாறையிலயும், தண்ணி இல்லாத பாலை வனத்திலயும், தளிர்ப்பது மாதிரி தான் மாப்ள. 

குறள் : 82
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

யோவ்.. நல்ல கேட்டுக்கிடும்யா... ஒம்ம வீட்டுக்கு ஒரு விருந்தாளு வந்துருக்காரு.  இதச் சாப்புட்டா சாக்காலமே வராதுன்னு எல்லாரும் நம்புத அந்த அமிர்தமே ஒமக்குக் கெடச்சாக்கூட, அதுல கொஞ்சத்தை விருந்தாளுக்குக் குடுக்காம நீரு மட்டுமே திய்ங்கக் கூடாதுய்யா. 

குறள் 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

குளுந்த மனசோடவும் முகத்துல மகிழ்ச்சியோடவும், வீட்டுக்கு வந்த விருந்தாளுங்களை வரவேற்கவங்க இருப்பாங்கள்லா மாப்ள. அப்பிடிப்பட்டவங்க வீட்டுல, திருமகள் மகிழ்ச்சியோட தங்கி இருப்பாள்.(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post