திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-32

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-32


குறள்: 90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

அனிச்சம் பூவைப் பத்தி தெரியும்லாடே! அதை மோந்து பாத்தன்னா, அந்தப் பூ சட்டுன்னு வாடிப் பொயிரும். 

அது மாதிரி தான்டே! வீட்டுக்கு யாராவது விருந்தாளு வந்துருக்கும்போது, நீ வாட்ல மொகத்தை உம்முன்னு தூக்கி வச்சுட்டு இருக்கக் கூடாது. 

விருந்தாளு அதைப் பாத்துட்டார்னா, அவரு மொவம் அப்டியே சுண்டிப் பொயிரும்டே. 

குறள் 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

எல்லார்கிட்டயும், அன்பாவும், பாசமாவும், இனிமையாவும் பேசுனம்னா, தும்பத்தை பெருசு படுத்துத வறுமை நம்மட்ட வரவே வராது மாப்ள. 

குறள் 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.

மாப்ள... நாம பேசும்போது எப்பவுமே நல்ல இனிமையா பேசணும். அதோட மத்தவொளுக்கு நல்ல வழி காட்டுத மாதிரியும் நம்ம பேச்சு இருக்கணும். 

இப்பிடி  நடந்தோம்னு வச்சுக்கயேன்.. நம்மட்ட  இருக்க எந்த கெட்டதும் வெளிய தெரியாம மறைஞ்சுறும். எல்லா நன்மைகளும் நம்மகிட்ட பெருகும் மாப்ள. 

குறள் 101.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மருமவன... நாம  ஒருத்தனுக்கு எந்த ஒதவியும் செய்யாம இருக்கும்போது, நமக்குத் தெரியாமலேயே, அவம் பாட்டுக்கு வந்து நமக்கு ஒரு ஒதவி செய்யிதாம்னா.. அவனுக்கு எவ்வளவு பெரிய மனசு இருக்கணும். பதிலுக்கு இந்த ஒலகம் முளுசையுமே அவம்பேர்ல எளுதி வச்சாக்கூட, அது பத்தாது மருமவன.

குறள் 104.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

மாப்ள... இந்த தெனை இருக்க.. அது பாக்கதுக்கு ரொம்ப சிறுசாத்  தான் இருக்கும். அந்த தெனை அளவுக்குத் தான் ஒருத்தரு ஒரு சின்ன ஒதவியை ஒனக்கு செஞ்சிருப்பாரு. அதுனால ஒனக்குக் கெடச்ச நன்மைய வச்சுப் பாக்கும்போது, அந்த சின்ன ஒதவி கூட ஓங் கண்ணுக்கு, பனை அளவுக்கு பெருசான ஒதவியாத் தான் தெரியும் மாப்ளை. 

குறள் 106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.

மாப்ள.. பத்தரை மாத்துத் தங்கம் மாதிரி இருக்கக் கூடியவங்களோட  ஒறவை எப்பமும் மறந்துறக் கூடாது. 

நமக்கு தும்பம் வந்த நேரத்துல கூட மாட நின்னு நமக்கு ஒத்தாசையா இருந்த சேக்காளிங்களை விட்டுட்டு வெலகிறக் கூடாது மாப்ள.(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post