மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-47 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-47 (வரலாறு-பாகம்-2)


உடுதெனிய மெடிகே மஸ்ஜித் 47
உடுதெனிய மெடிகே மஸ்ஜிதின் ஆரம்ப வரலாறு பற்றிய குறிப்புக்கள் ஆவணப்படுத்தப்படாதபோதும் அதன் வரலாற்றை 1850 -1900 காலப்பகுதிகளிலிருந்து ஆரம்பிக்க முடிவது  சிறப்பானதாகும்.  1900களுக்கு முதலில் அமைக்கப்பட்ட மஸ்ஜித் அமைந்திருந்த காணியைக் குடியிருப்பாளர்கள்  இன்றும் பழைய பள்ளி அமைந்திருந்த இடம் என நினைவு கூர்வதுண்டு. குடியிருப்பின் மத்தியில் அமைந்திருந்த மஸ்ஜிதின் நிலம் தற்போது மையவாடியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பழைய மஸ்ஜிதைக் கனவான் கலீபா லெப்பை என்ற பெரியார் நீண்ட காலமாக நிருவகித்ததாகக் கூறப்படுகின்றது.  கிடைத்திருக்கும் தகவல்களிலிருந்து 1908ம் ஆண்டு குடியிருப்பின் இரண்டாவது மஸ்ஜித் தற்போதைய மஸ்ஜித் அமைந்திருக்கும் புதிய இடத்தில்  நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.  அம்மஸ்ஜித் குறித்த ஆவணம் இன்று வரையும் பாதுகாக்கப்பட்டு வருவது பெருமைக்குரியது.  மஸ்ஜிதின் ஆரம்ப கர்த்தாக்களுள் காதிரிய்யாத் தரீக்காவின் ஆன்மிக வழிகாட்டியாக விளங்கிய அஷஷெய்க் ஸ{லைமானுல் காதிரி (ரஹ்) (ம.1908.09.15) குறிப்பிடப்பட வேண்டியவர்கள். அவர்களது அடக்கஸ்தலம் பரகஹதெனிய ஜாமிஉல் மஸ்ஜிதுல் அன்வர் முன்றவில் அமைந்திருப்பதைக் காணலாம்.

 மஸ்ஜித் 1930ம் ஆண்டுகளைத் தொடர்ந்து மீண்டும்  புனரமைப்புச் செய்யப்பட்டு முகப்பு நிர்மாணப்பணிகளும் நிறைவேறியிருக்கின்றன. அவ்வேளை மஸ்ஜித் பராமரிப்புப் பணிகளில் ஜமாஅத்தவர்களுடன் இணைந்து காத்திரமான பங்களிப்புச் செய்தவர்களுள்  முன்னாள் தபால் அமைச்சர்  ஸீ. ஏ. எஸ். மரிக்கார் அவர்களது தாய்மாமனாரான ஜனாப். முஹம்மத் ஸாலி குடும்பத்தவர்கள் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். 1952 - 1959 வரையுள்ள காலப்பகுதியில் கடுகண்ணாவைத் தேர்தல் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட இலுக்குவத்தை - கடுகண்ணாவையைச் சேர்ந்த அமைச்சர் ஸீ. ஏ. எஸ். மரிக்கார் அவர்களது தாயாரும் உடுதெனிய மெடிகேயைச் சேர்ந்தவராவர். 1952ம் ஆண்டு  குர்ஆன் மத்ரஸாவுக்காக  தனியான ஒரு பகுதியும் மஸ்ஜிதுடன் சேர்க்கப்பட்டிருக்கின்றது.  இன்று “ஜாமிஉல் அஸ்ஹர்” என்ற அழகிய  பெயருடன்  விளங்கும்  உடுதெனிய மஸ்ஜித் கடைசியாக 1978ம் ஆண்டு ஜமாஅத்தவர்களின் ஆதரவுடன் மீண்டும் புனரமைப்புச் செய்யப்பட்டிருக்கின்றது. புனரமைப்புப் பணிகளோடு எழுந்த மஸ்ஜித்  1985ம் ஆண்டு மே மாதம்  திறப்பு விழாக் கண்டிருக்கினறது.  திறப்பு விழாவின்போது சிறப்பு விருந்தினராகப்  பங்கு பற்றியவர் புரவலர் எம். ஐ. எம். நளீம் ஹாஜியார் அவர்களாவார். ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்துடன்  இணைந்ததாக  அல்குர்ஆன் ஹிப்ழு மத்ரஸாவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஜும்ஆ மஸ்ஜிதுடன் இணைந்ததாக  உடுதெனிய - தெல்தொட்டைப் பிரதான பாதையோரத்தில் “மஸ்ஜிதுத் தக்வா” என்ற பெயரில் புதிதாக ஒரு தக்கியாவும் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. தக்கியா அமைக்கப்படுதற்காக ஜனாப் முஹம்மத் தப்ஸீர் ஹாஜியார் தனது தகப்பனார் நெய்னா முஹம்மத் ஜெய்னுதீன் அவர்களது பெயரில் அக்காணியை அன்பளிப்புச் செய்துள்ளார். அது தவிர  உடுதெனிய முஸ்லிம் வித்தியாலய வளாகத்திலும் 2007ம் ஆண்டு முதல் ஒரு தக்கியாவும் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

கல்வி:
குடியிருப்பின் சமயக்கல்வி வரலாறு 1900களுக்கு  முன்பிருந்து ஆரம்பிப்பது போன்று  அதன் பாடசாலைக் கல்வி வரலாறும் 1939 ஜுன் 1ம் திகதி முதல்  ஆரம்பமாகின்றது. பாடசாலை ஆரம்பிக்கப்படுவதற்கு முதலில் குடியிருப்பாளர்களிற் பலர் மாரஸ்ஸன சிங்கள வித்தியாலத்தில் கல்வியைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகின்றது.  நாளடைவில்  கல்வியின் பெருமை  உணர்ந்த குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்குப் பெற்றுக்கொடுத்த காணியில்  தமிழ்ப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. எழுபத்தொரு மாணவர்களுடன்  ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் தற்போது 22 ஆசிரியர்கள் பணிபுரிவதுடன் 327 மாணவர்கள் கல்வியைத் தொடர்கின்றனர்.   பாடசாலையில் சேர்க்கப்பட்ட முதலாவது மாணவரின் பெயர் எஸ். எம். தாஹிர் என ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

கல்வி கலாசார நடவடிக்கைகளைப்போன்று மெடிகேக் குடியிருப்பாளர்கள் அரசியல், நிருவாக நடவடிக்கைகளிலும்   காத்திரமான பங்களிப்புச் செய்திருப்பதை அறியலாம்.  அவர்களது அரசியல் பிரதிநிதித்துவம்  ஹேவாவிஸ்ஸ கிராமசபiயிலிருந்து  ஆரம்பமாகின்றது.

Village committee members :
ஜனாப்கள்,

1. எச்.எல்.எம். ஷஹித்

2. எஸ் ஷாஹ{ல் ஹமீத்

3. நூர்தின் மீரா ஸாஹிப்

பிரதேச சபை அங்கத்தவர்கள்:
ஜனாப்கள்,

1. ஸுலைமான் முஹம்மத் ஹில்மி

2. அப்துல் மஜீத் துல்பி மரிக்கார்

விவாகப் பதிவாளர்கள்:
ஜனாப்கள்,
1. ஹஸன் ஸாஹிப்

2. அவரது புதல்வர் முஹம்மத் ஜெலீல்

3. எம். எம். முஷ்தால்

4. அஜீத் முஹம்மத் ஹாஷிம் 

உடுதெனிவில் முதலாவது :
ஹஜ் கடமையை நிறைவேற்றியர்:       
ஜனாப் அமீர்தீன்

மௌலவி:             
ஷாஹுல் ஹமீத் முஹம்மத் ராஸீக் 
(கலகெதரை)

ஆசிரியர்:              
மஹ்மூத் முஹம்மத் பாயிஸ் 
(கல்வி அதிகாரி)

ஆசிரியை:             
ஹாஜ்ஜா ஜுனைதீன் சித்தி றுவைதா

சமாதான நீதவான்:     
அப்துல் அஸீஸ் முஹம்மத் ராஸிக்

வைத்தியர்:             
Dr. முஷ்தால் காமிலா

சட்டத்தரணி:           
ஜனாப் ரஷீத் எம். இம்தியாஸ்

மௌலவியா:          
பாத்திமா பஹ்மியா பாரூக்

கல்விப் பணிப்பாளர்:   
ஜனாப் எம். எம். பாயிஸ்

நளீமிய்யாப் பட்டதாரி: 
அஷ்ஷெய்க் ரஷீத் முஹம்மத் பியாஸ்

(ii) பள்ளேகமை
தெல்தொட்டைப் பிரதேசத்தின் ஆரம்பக் குடியிருப்புப் பகுதியான பள்ளேகமை துரிதகதியில் அபிவிருத்திப் பாதையில் பயணஞ்செய்யும்  குடியிருப்பாக விளங்கி வருகின்றது. விரல் விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம் குடும்பங்களிலிருந்து ஆரம்பமாகிய பள்ளேகமையில் இன்று  சுமார் இருநூறு குடும்பங்கள் வாழ்ந்து வருவதோடு அங்கு வாழும் முஸ்லிம்களது எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியதாகும்.

ஆரம்பக் குடிப்பெயர்ச்சிகள் மொட்டாவ மலைப்பகுதியை  அண்மித்த பகுதியிலிருந்த  ஆரம்பமாகியிருக்க வேண்டும் எனக் கருதப்படுவதுண்டு. அதன் மஸ்ஜித் வரலாறும் சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளையும் கடந்ததாகும். மஸ்ஜிதின் ஆரம்ப கர்த்தாவாகப் புகழப்படுபவர் தென்னிந்தியா - கோட்டாறுபதியைச் சேர்ந்த அஷ்ஷெய்கு ஸ{லைமானுல் காதிரி (ரஹ்) அவர்களாவார். பிரதேசமெங்கும் இஸ்லாமிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பெரியார்களுள் ஒருவராக அன்னார் கொண்டாடப்படுவதுண்டு. இன்று கல்வி, விவசாயம், வர்த்தகம் ஆகிய பல துறைகளிலும் சிறப்புற்று விளங்கும் பள்ளேகமை ஈன்ற பெருமகன்களில் ஒருவராக ஜனாதிபதி விருது பெற்ற தேசகீர்த்தி அல்ஹாஜ் வை. எம். இப்றாஹீம் விளங்கி வருகின்றார். சுமார் எழுபது ஆசிரியர்களையும், துறைசார்ந்த பல நிபுணர்களையும் உருவாக்கிய பெருமை பள்ளேகமைக்கு உண்டு.
(தொடரும்)


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post