குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-92 (செந்தமிழ் இலக்கியம்)

குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-92 (செந்தமிழ் இலக்கியம்)


வாழ்க்கை கற்றுத் தரும் பாடம்
எல்லோருக்கும் அறிவுரை சொல்ல மனம் விரும்புகிறது. ஆனால், எதிலும் கற்றுக் கொள்ள மட்டும் மறுக்கிறது. விந்தையாக உள்ளது மனநிலை... நம்மை மீறிய ஒரு சக்தி, இயற்கை நமக்குக் கற்றுத் தருவதைச் சற்றே மனம் ஊன்றிக் கவனித்தால் போதும், புரிந்தால் போதும் நம் செயல்திறன் அதிகமாவதை உணரலாம். 

அப்போது, நம் பார்வை விரிவடையும், ஒரு வித வெற்றி உணர்வு நம்மைப் பற்றிக் கொள்ளும் தோல்வியும், துன்பமும் நம்மை விட்டு விலகும்... இல்லை ஓடிவிடும். இதனை வள்ளுவப் பேராசான் கூறும் போது,

இடும்பைக்கு இடும்பை படுப்பார் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். - (குறள் 623) என்பதன் மூலம், துன்பத்தைக் கண்டு கலங்காதவர்கள், அத்துன்பத்திற்கே துன்பம் தருபவராவார் என்கிறார். 

உண்மைதான் அத்தகையோர் இயற்கையை உணர்ந்தவர்கள்... உலகில் ஒரு சான்றாக மன நிறைவுடன் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்து காட்டியவர்கள்... புரிந்தால் நம் வாழ்க்கை நம்கையில் என்பதை உணர முடியும். தன்னம்பிக்கை துளிர்விடும்... இதோ இயற்கை காட்டும் சில, பல சான்றுகள்... நம்மால் முடியாதா? எனவினாத்தொடுக்கும் சாட்சிகள்.

பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து நிலத்தைப் பிளந்து முளைத்துக் காட்டுகிறது.!!
ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற

நிலையிலும் உயிர்வாழும் மான்கள் கூட பிரச்சனைகளைச் சமாளிக்கிறது!

பெரியமீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையில் இருக்கும் சிறிய மீன்களும் கூட கடலில் புலம்பாமல் வாழ்கின்றன!!

மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற ஓரறிவு உயிர் ஆன மரங்களும் கூட நிமிர்ந்து நிற்கின்றன!!

ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காகப் பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் கூட மனம்சலிப்படையாமல் முயற்சிசெய்கின்றன.

சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன...!! |

தண்ணீர் இல்லாத பாலைவனத்தில் உயிர்வாழ வேண்டிய நிலையில் இருக்கும் ஒட்டகங்களும் கூட எங்கும் ஓடிப்போகாமல் அங்கு வாழ்ந்து காட்டுகின்றன....

‘ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை ' என்ற நிலையிலிருக்கும் பலவகைப் பூச்சிகளும்கூட, அந்த ஒருநாளில் உருப்படியாக வாழ்கின்றன...!!

பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் நம்மால் வாழ முடியாதோ ! ஏன் மனிதா, இந்தத் தவிப்பு... வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமித்தாயின் மடியில்...

பிறந்துவிட்டோம்... மறையும் வரை எப்படியும் வாழ்ந்தே ஆக வேண்டிய வாழ்க்கை ... அதை ஏன் புலம்பிக் கொண்டு வாழ வேண்டும் !! அதை ஏன் வெறுத்துக் கொண்டு வாழ வேண்டும்? அதிலிருந்து ஏன் தப்பிக்கப் பார்க்க வேண்டும்? இல்லை. ஏன் அழுது கொண்டுவாழவேண்டும்?

மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்ந்து தான் பார்ப்போமே ! எவ்ளோ பண்றோம் ! இத பண்ண மாட்டோமா? இல்ல பண்ணத்தான் முடியாதா? எனத் துணிந்து நில்லுங்கள்... ஆம் அப்போது உங்களிடம் வந்த துன்பம் துன்பப்பட்டுப் போகும். வாழ்க்கை இனிக்கும். மிச்சம் இருப்பது ஆனந்தம் தவிர வேறென்ன ? ஆகவே, இயற்கையில் இருந்து கற்போம்! இயற்கையாய்வாழ்வோம்!உலகிற்கு ஒரு சான்றாக...!

முயற்சி, உழைப்பு இவற்றின் துணைக் கொண்டுநம்பிக்கை எனும்கை கொண்டு வாழ்வில் உயர்வோம், நலம் பெற்று வளமுடன், மகிழ்வுடன் நீடு வாழ்வோம்!.(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post