பாரியன்பன் நாகராஜன் - கவிதைகள்

பாரியன்பன் நாகராஜன் - கவிதைகள்


ஞானம் பெறவேண்டி
போதிமரத்தின் கீழ்
தவமிருக்கும்
புத்தன் தலையில் 
முளைத்திருக்கிறது
கிளைக் கிளையாய்க்
கொம்புகள்.

ரசம் சோறு
சாப்பிட வாய்த்தநாளில்
குழைந்திருந்து சோறு.
சாம்பார் சோறு
கிடைக்கப்பெற்றநாளில்
சாம்பாரில் உப்புத்தூக்கலாய்.
பொரியலோடு
சாப்பிட கிடைத்தநாளில்
பொரியல் கருகியவாடை.
எல்லாமும் சரியாய்
அறுஞ்சுவை உணவு 
வாய்த்தநாளில் பசியில்லை 
எனக்கு

புயலென வீசி
அனைத்தையும்
என் பலத்தால்
சோதித்து முடித்து
ஓய்விலிருக்கும்
அத்தருணத்தில்...
தென்றலாய் மிதந்து 
வந்து ஆறத்தழுவி
அடுத்த கட்ட 
ஆயத்த பணிக்கு
புத்துணவூட்டுகிறாய்
எனக்கு...!

பால்யம் போனால் 
வாலிபம் இருக்கிறது.
வாலிபம் போனால் 
முதுமை இருக்கிறது.
முதுமைப் போனால் 
போகட்டும்
இனிதே வரவேற்க 
மரணம் இருக்கிறது. 

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post