கண்கெட்ட பின்பு சூரியன் உதித்த பெரும்பான்மை மக்கள் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை முஸ்லிம்களுக்கு சாதகமா பாதகமா...! ( ஓர் ஆய்வு )

கண்கெட்ட பின்பு சூரியன் உதித்த பெரும்பான்மை மக்கள் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை முஸ்லிம்களுக்கு சாதகமா பாதகமா...! ( ஓர் ஆய்வு )


இந்தத் தலைப்பானது ஒரு சிலருக்கு ஒரு வித்தியாசமான சிந்தனையை ஏற்படுத்தினாலும்,  இதனுள் இருக்கும் 
யதார்த் தத்தை நாம் புரிந்து வைத்திருப்பது சாலச் சிறந்ததாகும்.

அதாவது,  நாடு தற்போது எதிர் கொண்டுள்ள நெருக்கடியான நிலமையிலிருந்து நாட்டை பாதுகாத்து கட்டியெழுப்புவது இலங்கை நாட்டில் உள்ள, வெளி நாட்டில் உள்ள இலங்கை குடிமக்கள், ஒவ்வொரு இனத்தினதும்,  ஒவ்வொரு சமூகத்தினதும் கட்டாயக் கடமையாகும். அதில் மாற்றுக்கருத்தில்லை.


அதேவேளை  நடப்பு அரசாங்கம் ஆட்சியை, அதிகாரத்தை கைப்பற்ற கைக்கொண்ட ஒரு ஆயுதம் இனவாதமாகும். 

இந்த அரசாங்கம் இனவாத அத்திவாரத்தின் மேல் ஜொலிக்கும் ஒரு மாளிகை யாகும். இவ்வாறான அரசாங்கங்களுக்கு ஆயுள் மிகவும் அற்ப மானதாகும்.

அண்மைக்கால உலக வரலாற்றை நாம் எடுத்து ஆராயும் போது, முன்னை நாள் அமெரிக்க அதிபரை தலை கீழாக புரட்டிப் போட்ட முதல் காரணி அவரால் கைக்கொள்ளப்பட்ட இனவாதம், நிறவாதம் போன்றவையேயாகும். 

ஒரு நாட்டில் இனவாதம், மதவாதம் ஓங்குமாக இருந்தால், அந்த நாட்டின் அழிவுக்கு அதுவே போதுமான ஒன்றாகும். சின்னாபின்னமாகிப் போன பல உலக நாடுகளின் வரலாற்றுகளில் இருந்து இதை  நாம் படிக்க முடிகின்றது.

இந்த வகையிலான ஒரு நாடாகவே நம் நாட்டினதும் தற்போதைய அரசியல் கலாச்சாரம் மாறியுள்ளது. 

1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா அவர்களால் ஆற்சியை கைப்பற்ற அமல்படுத்தப்பட்ட தனிச் சிங்கள அரச மொழிக் கொள்கை முதல்,அளுத்கமை,  திகன வரையில் நாட்டை ஆட்டுவித்த இனவாதம், மக்களின் விலை மதிக்க முடியாத உயிர்கள்,  உடமைகள், போன்றவற்றை இனவாதத் தீ பொசுக்கி எப்பம் விட்டது.

அன்று தொடக்கம் காலத்துக்கு காலம் இலங்கையில் பதவி வகித்த அரசாங்கங்கள் மறைமுகமான,  வெளிப்படையான இனவாதத்தின் அடிப்படையிலே ஆட்சிகளை அமைத்தது.

அந்த வகையில் தற்கால கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், ஆரம்பம் முதல் இனவாதத்துக்கு அடித்தளங்களை இட்டு வந்தது. இதை பெரும்பான்மையின மக்கள் கண்டு கொள்ளவில்லை.

சத்வதேச ரீதியில் உதவிகள் இன்றி கைவிடப்பட்டுள்ள நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். 

ஒரு நாட்டின் ஜனாதிபதி என்பவர் ஒரு கும்பத்திற்கு தந்தை போன்றவர் . அவர் சகல இன மக்களினதும் ஜனாதிபதியாவார் . தேர்தல் காலங்களில் அவர் ஒரு கட்சி வேட்பாளராக இருந்தாலும். வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவி ஏற்றால், அவர் நாட்டின் சகல இனத்திற்கும் பொதுவானவர் . 

இதுவே ஜனநாயகத்தின் அழகிய பண்புகளில் ஒன்றாகும்.

ஆனால் பதவியேற்கும் போது அவர் தான் ஒரு இனத்தின் வாக்குகளால் தான் தெரிவு செய்யப்பட்டேன் எனக் கூறுவது  கவலைக்குரிய விடயமாகும். 

இவ்வாறு இனவாதத்தின் மூலம், பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்துவதன் மூலமும்  அதற்கான அத்தனை வழி வகைகளையும் இந்த அரசாங்கம் கச்சிதமாக கைக் கொண்டது. 


மியன்மாரில் கொத்துக்கொத்தாக முஸ்லிம்களை கொன்றொழித்த விராது என்னும் பயங்கரவாதிக்கு,
இலங்கையில் செங்கம்பள வரவேற்பும், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. தற்கால அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறுவதற்கு நட்டப்பட்ட முதலாவது கல் இதுவாகும்.

திட்டமிடப்பட்ட சதிகளின் மூலம் இனவாதத் தீ இலங்கையில் கொழுந்துவிட்டு எரிந்தது.

ஒரு இனத்துக்கு நடக்கும் அநியாயத்தில் இன்னொரு இனம் திருப்திப்படும் அளவில் அவர்களின் சிந்தனைகள் மாற்றப்பட்டன.

இதன் காரணமாக  நடப்பு அரசாங்கத்திடம் பெரும்பான்மையின மக்கள் எதிர்பார்த்த ஒன்றே ஒன்று,சிறுபான்மையின் ஒடுக்கு முறையாகும்.

தேர்தல் காலங்களில் ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களை சந்தித்தபோது,  அவர்கள் ஆட்சியாளர்களிடம் வைத்த ஒரே கோரிக்கை "சிறுபான்மை இடமிருந்து நாட்டைப் பாதுகாத்துத் தாருங்கள் என்பதாகும்". அந்த அளவுக்கு சிறுபான்மையினர் பற்றிய ஒரு வெறியும்,  குரோத எண்ணமும் அவர்களின் சிந்தனையில் விதைக்கப்பட்டது.

அவர்களால் கூலிக்காக அமர்த்தப்பட்ட இனவாதிகள்,மத குருக்கள் பெரும்பான்மை மக்களிடம்கொடுத்த வாக்குறுதி, சிறுபான்மை அடக்குவோம், நாட்டைவிட்டுவிரட்டுவோம், மியன்மாரை போன்று முஸ்லிம் மக்களை அழித்து ஒழிப்போம் என்பதாகும்.

இந்த ஒரு வாக்குறுதிக்காகவே 69 லட்சம் மக்கள் வாக்குகளை நடப்பு அரசாங்கத்திற்கு வாரி இறைத்தனர். இதைத்தவிர பெரும்பான்மை மக்கள் ஆட்சியாளர்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.  நாட்டின் எதிர்காலம், நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம் போன்ற எந்த விதமான கோரிக்கைகளையும் அவர்களிடம் முன்வைக்கவில்லை.

ஆனால் காலப் போக்கில் ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களுக்கு வாக்களித்தபடி, சிறுபான்மை இனத்திற்கு அநீதி இழைப்பதில் நடைமுறை சிக்கல்கள், சர்வதேச தலையீடுகள் போன்ற காரணங்களால் அநியாயங்களை செய்ய முடியாது போனாலும், அவ்வப்போது சிறுபான்மை மக்களின் மனதை புன் படுத்தும் வகையில் செயற்பாடுகளை கைக் கொண்டனர்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்தல்,ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையில் முஸ்லிம்களின் உரிமைகளைப் பறித்தல், முஸ்லிம் மக்களின் மதஸ்தளங்கள். மதரஸாக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தல், போன்ற நடவடிக்கைகளின் மூலம் பெரும்பான்மை மக்களின் திருப்தியை வென்றனர்.

இவ்வாறு அவர்களின் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஆட்சியாளர்கள் நாட்டை வெற்றிகரமாக சூறையாடினார்கள்.


உண்மையில் நாடு இவ்வாறான ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதால் தான் ஒருவகையில் 
இன்று முஸ்லிம்கள் நிம்மதியாக இந்த நாட்டில் தற்போது மூச்சு விடுகின்றனர் என்பதே முறைமுகமான உண்மையாகும்.

நாடு நெருக்கடியை எதிர் நோக்காமல் சுமுகமான ஒரு நிலையில் சென்றிருந்தால், தேர்தல் காலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அவர்கள் பெரும்பான்மை மக்களுக்கு அளித்த வாக்குறுதியை, அதாவதுஅவர்களின் வழமையான போக்கை அவர்கள் கை கொண்டு இருப்பார்கள் என்பதே உண்மையாகும்.

இன்று அத்தியாவசிய தேவைக்காகவும், வாழ்கைச் செலவுகளுக் காகவும், முஸ்லிம் மக்களும் வரிசைகளிலும்  ஏனைய இடங்களிலும் கஷ்டப்பட்டாலும், நாட்டில் இவ்வாறன நிலை இல்லாமல், உயிகளையும் உறவுகளையும், உடைமை களையும், நாட்டையும் இழந்து  குட்டி மியன்மாராக முஸ்லிம் மக்கள் கஷ்டப்படுவதை விட, தற்போதுள்ள கஷ்டங்கள் மேலானது என்றே கூற வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து மக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டபோதே பெரும்பான்மை மக்கள் இதை சிந்திக்கத் தலைப்பட்டனர்.

இவ்வாறான ஒரு நிலை, இலங்கையில் ஏற்படாமல் இருந்திருந் தால் முஸ்லிம்களின் நிலை ஒரு மியன்மாராக மாறியிருக்கும் என்பதே  உண்மையாகும்.

இதற்கான சிறந்த உதாரணமாக முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் போதும், மதஸ்தலங்கள் அழிக்கப்படும் போதும், பெண்களின் உடை உரிமை கூட  தடுக்கப்படும் போதும், இன்று இனவாதம் வேண்டாம், சகோதரர்களாய் வாழ்வோம், இனவாதத்தை ஒழித்து கட்டுவோம், இனவாத ஆட்சியாளர்களை விரட்டி அடிப்போம், என இன்று கூக்குரல் இடும் பெரும்பான்மை இனம் அன்று இதை ஆட்சியாளர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றும் போதும் ,கண்டு கொள்ளவில்லை.

முஸ்லிம் மக்கள் அந்த நாட்களில்" நாம் பயங்கரவாதிகள் அல்ல,  இந்த நாட்டின் எதிரிகள் அல்ல, இந்த நாட்டின் துரோகி அல்ல, எம்மை பயங்கரவாதிகளாக நோக்க வேண்டாம், எமது பள்ளி வாசல்களில் நீங்கள் நினைப்பது போன்று பயங்கரவாதம் 
போதிக்கப்படவில்லை , எம்மை அநியாயமாக பழிவாங்க வேண்டாம், எமது வியாபார மற்றும் உயிர் உடைமைகளை அளிக்க வேண்டாம்  "எனக் கதறிய போதிலும், அது சம்பந்தமாக பெரும் பான்மையின மக்களின் காதுகளில் எட்டியதாக தெரியவுமில்லை, 

ஆட்சியாளர்கள் அதை கண்டு கொள்ளவுமில்லை.

எனவே இவ்வாறான ஒரு கஷ்டமான  நிலை நாட்டில் ஏற்படாமல் இருந்திருந்தால்,  பெரும்பான்மை மக்கள் ஆட்சியாளர்களின் இனவாதத்தை பற்றி சிறிதளவேனும் சிந்தித்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

எவ்வாறாயினும், நம் தாய் நாடு என்ற வகையில் நாம் இந்த நாட்டை கட்டியெழுப்ப நமது முழுமையான பங்களிப்பை செய்ய வேண்டும் அதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் யதார்த்தத்தை நாம் அறிந்து வைத்திருப்பது சாலச்  சிறந்ததாகும். 

ஆரம்பத்திலிருந்து ஆய்வு ரீதியாக இதை நாம் நோக்கும் போது நெருக்கடிகளால் நாமும் கஷ்டப்பட்டாலும், இவ்வாறான ஒரு நெருக்கடி பெரும்பான்மை மக்களை சிந்திக்க வைத்து, அவர்களின் சிந்தனைகளில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பெருங்கொண்ட அநியாயங்களில் இருந்தும், அழிவுகளிலிருந்தும் முஸ்லிம் சமூகத்தை இந்த நாட்டின் நெருக்கடி மறைமுகமாக பாதுகாத்து உள்ளது என்பதே உண்மையாகும்.

அந்த வகையில் பெரும்பான்மையின  மக்களுக்கு கண்கெட்ட பின் சூரியன் அஸ்தமித்தாலும், அந்த காலம் கடந்த அஸ்தமனம்  முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமாகவே அமைந்தது என்றே கூறவேண்டும் .

காலம் கடந்து பிறந்த ஞானத்தில் ஞானிக்கு பயன் இல்லாவிட்டாலும்,தொடரும் சந்ததிக்கு அதில்படிப்பினையுண்டு . 

எனவே ஒரு நாட்டில் நடக்க் கூடாதது நடந்ததனால் இதன் விழைவை இனிவரும் காலங்களில் பல சந்ததிகள் சந்தித்துத்  தான் ஆளவேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 

நமது பிள்ளைகளாவது இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழட்டும்.

தேடிவந்த உறவுகளை
தொலைத்திடாமல்
பாத்திடுவேம்
தவித்து நிற்கும்
தாய் நாட்டை
தாங்கி நின்று காத்திடுவோம்
அழியட்டும் இனவாதம்
விழையட்டும் தாய் பூமி
ஓங்கட்டும் ஒற்றுமைகள்
ஒலிக்கட்டும் ஒற்றுமை கீதம்
வாழட்டும் இனி
வரும் சந்ததிகள்
தேடிவந்த உறவுகள்
தேனாய் இனிக்கட்டும் 

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post