
முன் பின் தெரியாத அந்த மனிதர் கண்ணனின் அறைக்குள் பிரவேசித்தார். முகம் மறைத்த தாடியுடன், கண்ணில் சோர்வுடன் தென்பட்டார் அந்த மனிதர். கிட்ட தட்ட ஐம்பதை எட்டும் தோற்றத்துடன் இருந்த அந்த பெரியவரை பணிவுடன் வரவேற்று அமரச் செய்தான் கண்ணன்.
வந்தவர் சிறிது நேரம் அமைதியாய் உட்கார்ந்திருந்தார். பின் “தம்பி. என் பெயர் வேலவன்”. என்றார். எதை எங்கிருந்து தொடங்குவது என்ற குழப்பம் அவர் முகத்தில் அப்பிக் கிடந்தது.
“சொல்லுங்கள் ஐயா! என்னால் ஏதும் ஆக வேண்டுமா?” என்று மிகப் பரிவுடன் கேட்டான் கண்ணன்.
அம்மனிதர் கண்கள் கலங்க “எனக்கு ஒரு தங்குமிடம் வேண்டும். மனதுக்கு அமைதி வேண்டும். உடன் நான் செய்த பாவங்களை தொலைக்க வேண்டும்” என்றார் குரல் தழுதழுக்க.
அந்த வயதானவரை எங்கோ எப்பொழுதோ பார்த்தது போல் ஒரு உணர்வு எழுந்தது கண்ணனுக்கு.
“ஐயா! உங்களை யாரென்று எனக்குத் தெரியவில்லை. என்றாலும் ஏதோ தாளாத சோகத்தில் இருக்கின்றீர்கள என்று தெரிகின்றது. எதுவாயிருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள். என்னால் முடிந்ததை செய்கின்றேன்” என்றான் கண்ணன்.
“தம்பி, உங்கள் அம்மாவைப் பற்றிய சில விடயங்களை என்னால் உங்களுக்கு கூற இயலும்,” தயக்கத்துடன் சொன்னவர் கண்ணோரம் எட்டிப் பார்த்த கண்ணீர் துளியை மறைக்க முயன்றார்.
“அம்மா” என்ற வார்த்தையைக் கேட்ட கண்ணன் நிமிர்ந்து உட்கார்ந்தான். எத்தனை காலமாக தன்னைப் பெற்றவளைப் பற்றிய எந்த தகவலும் அறியாமல் தவித்திருப்பான்.
“சொல்லுங்கள் ஐயா! அம்மா எங்கே இருக்கின்றார்கள்? எப்படி இருக்கின்றார்கள்? அவர்களை நான் பார்க்க முடியுமா? நான் சிறு வயதாக இருக்கும் போது அப்பாவுடன் கோபித்துக் கொண்டு எங்கோ போய் விட்டார்கள் என்று தாத்தா சொன்னார்” என்று பரபரத்தான் கண்ணன்.
அவர் தன்னை ஆசுவாசப் படுத்தி பேச நாழிகையாகும் என்றுணர்ந்த காண்ணன், “சில நாட்களாக நீங்கள் வருவதும் செல்வதுமாயிருக்கிண்றீர்கள் உங்களுக்கு அவகாசம் வேண்டும் என்றால், என்னுடன் என் வீட்டுக்கு வாருங்கள்., வீட்டில் விருந்தினர் அறை எப்போதுமே தயாராகவே இருக்கும். ஆறுதலாக அம்மாவைப் பற்றி உங்களுக்கு தெரிந்த விடயங்களை சொல்லுங்கள்” என்றவன் உதவியாளரை அழைத்து விருந்தாளிகள் அறையில் தற்காலிகமாக அவர் ஓய்வு எடுக்கவும் சாப்பாட்டுக்கும் வழியமைத்தான்.
வேலைகளை முடித்துக் கொண்டு வந்தவரை பார்க்கவென்று விருந்தினர் அறைக்குள் எட்டிப் பார்த்தவன் அங்கே யாருமில்லாததைக் கண்டு அதிர்ந்தான்.
(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com



0 Comments