திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-34

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-34


குறள் 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.

மாப்ள... நீ நெறைய சொல்லலாம்.  அப்படிச் சொல்லுததுல ஒரு சொல் கெட்டதா இருந்துட்டா போதும் மாப்ள. அதுனால வரக்கூடிய தும்பம், நீ சொன்ன மத்த நல்ல சொல் எல்லாத்தியும் பாழாக்கிரும் மாப்ள. 

குறள் 135 
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு.

மாப்ள... அடுத்தவனுவொ மேல எப்பமும் பொறாமை பட்டுக்கிட்டே இருப்பானுவொள்லா.. அவனுவொ வாழ்க்கை சிறப்பாவே இருக்காது. அது மாதிரி, நல்ல ஒழுக்கம் இல்லாதவனுவொளோட வாழ்க்கை ஒசத்தியானதா இருக்கவே இருக்காது மாப்ள. 

குறள் 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

நல்ல ஒழுக்கத்தோட வாழ்ந்தோமுன்னா
எப்பவுமே மகிழ்ச்சியா காலத்தை ஓட்டிறலாம் மாப்ளை. 

கெட்ட பழக்க வழக்கம் எதும் வந்துட்டுதுன்னா, நீ வேணா எழுதி வச்சுக்க மாப்ள... எப்பவுமே தீராத தும்பந்தான். 

குறள் 140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.

மாப்ள.. நீ பெரிய படிப்புல்லாம் படிச்ச மேதாவியா இருக்கலாம்.. ஆனா ஒலகத்துல இருக்க மத்தவங்களோடு அனுசரிச்சு போகத் தெரியலைன்னு வச்சுக்க... நீ அறிவில்லாத ஒருவன் தான் மாப்ளை. 

குறள் 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

மாப்ள… கடப்பாரை, மம்புட்டில்லாம்  வச்சு எப்பிடி வெட்டித் தோண்டுனாலும், பூமி தன்னை வெட்டுதவனையும் சேத்து தாங்கிப் பிடிக்கும். 

இது மாதிரி தான் மாப்ள... யாரும் ஏசி அவமதிச்சாவொண்ணா, அதை பொறுத்துக்கிடுத நல்ல மனசு ஒருத்தனுக்கு இருக்கது ரொம்ப பெருசு மாப்ள.

குறள் 155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

மாப்ள.. நமக்கு தீங்கு செஞ்ச ஒருத்தனை, பழி  வாங்கி, பாடாப் படுத்துனோம்னு வச்சுக்க.. அப்பம் ஊர்ல உள்ள ஒருத்தனும் நம்மை மதிக்க மாட்டானுவொ. ஆனா, கெடுதல் செஞ்சவனுவொள மன்னிச்சு விட்டுட்டோமுன்னு வச்சுக்க மாப்ள.. அப்பம் இந்த ஒலகம்,  நம்மை தலை மேல வச்சு கொண்டாடும்.(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post