மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-50 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-50 (வரலாறு-பாகம்-2)


கலஹா 50
பேராதனை சர்வகலாசாலைச் சந்தியிலிருந்து மேற்காக முப்பத்திரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கலஹா ஆரம்பத்தில் தோட்டக் குடியாளர்களால் ஒத்தக்கடை என்ற பெயரில்  அழைக்கப்பட்ட ஒரு பட்டினமாகும்.  மலையகப் பிரதேசத்தில் பெருந்தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள கலஹா கடந்த இருநூறு வருட காலத்துக்கிடையில் ஒரு சந்தைப்பட்டினமாக வளர்ச்சியடைந்திருக்கின்றது.

 இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பயிராக விளங்கிய கோப்பிப் பயிர்ச்செய்கை 1880- 1885 காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, தேயிலைப் பயிர்ச்செய்கை பிரபல்யமடைய ஆரம்பித்தது. அக்காலை மத்திய மலைநாடெங்கும் கோப்பிப் பயிர்ச்செய்கையே பிரதான பணப்பயிராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.   1855ம் ஆண்டுகளில் 85,600 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கோப்பி, 1875ம் ஆண்டுகளில் 2,49,600 ஏக்கர் வரை வியாபித்திருந்தபோதும்,  கோப்பிப்பயிருக்கு ஏற்பட்ட நோய் காரணமாக மத்திய பிரதேசமெங்கும் பிரதான பணப்பயிராக தேயிலைப் பயிர்ச்செய்கை அபிவிருத்தி அடைய ஆரம்பித்தது.

 தேயிலைப் பயிர்ச் செய்கையின் பிதாமகனாகக் கொண்டாடப்படுபவர்  ஸேர் ஜேம்ஸ் டெய்லர் என்ற ஆங்கிலேயராவார். கலஹா - தெல்தோட்டைப் பிரதேசத்தில் கலஹாப் பட்டினத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள லூல்கந்தர தோட்டத்தில் 1840ம் ஆண்டுகளவில்  முதலாவது தேயிலைப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டின் பிரதான ஏற்றுமதிப்பயிராக  விளங்கும் தேயிலைக் கைத்தொழில் பதினைந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் சீவனோபாயத் தொழிலாக வளர்ச்சி யடைந்துள்ளது.

அக்காலை பிரதேசத்தின் பிரதான சந்தைப் பட்டினமாக கலஹா விளங்கியதாலேயே 1930ம் ஆண்டுகளுக்குப்பின் அறிமுகமாகிய அரசியல் தொகுதிகளுள் ஒன்றாக கலஹாவும் சேர்க்கப்பட்டிருந்தது.

இன்று மத்திய பிரதேசத்தில்  மூவின மக்களும்  ஐக்கியத்துடன் வாழும் முன்மாதிரியான பட்டினங்களுள் ஒன்றாக கலஹாவைக் குறிப்பிட முடியும்.  மூவினத்தவர்களதும் சமய வழிபாட்டுத் தலங்கள் பட்டினத்தை அலங்கரிக்கச் செய்வது சிறப்பானதாகும்.

பெருந்தோட்டத்துறையின் வளர்ச்சியால் உருவாகிய கலஹாப் பட்டினத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் முதலில் கால்பதித்தவர்கள் தென்னிந்திய தமிழ்,  முஸ்லிம் வர்த்தகக்குடிகளாவர். இன்றும் தென்னிந்திய வர்த்தகச் செல்வாக்கை  உறுதி செய்வதாக எஸ். கந்தசாமிப் பிள்ளைத் தாபனம் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்தின் பின் பதவிக்கு வந்த அரசாங்கங்கள்  கடைபிடித்த பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அதிகமான தமிழ்-, முஸ்லிம் வர்த்தகச் செல்வர்கள்  தாயகம் திரும்பியிருக்கின்றனர்

1875-1900 காலப்பகுதியில் சுமார் பதினைந்து முஸ்லிம் குடும்பங்கள் மாத்திரம் வாழ்ந்த கலஹாவில் தற்போது 350 முதல் 400 வரையான முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பட்டினத்தில் மட்டுமன்றி அதனைச் சூழவமைந்த முஸ்லிம் கொலனி, ஆறேக்கர், பதினெட்டாம் கட்டை, அன்னாசி வத்தை போன்ற பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விபரங்களிலிருந்து பட்டினத்தில் வாழும் முஸ்லிம்களது தொகை 830 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  அவர்களுள்  397 பேர் ஆண்களாவர். 

மஸ்ஜித்
கலஹாப் பட்டினத்தின் மத்தியில் கம்பீரமாகக் காட்சியளிக்கும்  ~மஸ்ஜிதுல் அக்ரம்| மஸ்ஜிதின் ஆரம்ப வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலிருந்து பேசப்படுவதுண்டு.  தென்னிந்திய முஸ்லிம் வர்த்தகச் செல்வர்களது முயற்சியில் தோன்றிய இம்மஸ்ஜித் 1870களைத் தொடர்ந்த தசாப்தங்களில் உருவாகியிருக்க வேண்டுமென மூத்த குடியாளர்கள் உறுதி செய்கின்றனர்.  1915ம் ஆண்டு நிகழ்ந்த  சிங்கள-முஸ்லிம்  இன வன்முறைகளின்;போது சேதப்படுத்தப்பட்ட அல்லது முற்றாக அழிக்கப்பட்ட 103 மஸ்ஜிதுகளில் கலஹா மஸ்ஜிதும் சேர்த்துப் பேசப்படுவதுண்டு.

தற்போது அழகுறக் காட்சியளிக்கும் புதிய மஸ்ஜிதுக்கு  முன் பக்கமாக ஆரம்பகால மஸ்ஜித் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்நிலப்பகுதியில் மஸ்ஜிதுக்குச் சொந்தமாக விளங்கும்  கடைத்தொகுதி அமைக்கப்பட்டிருக்கின்றது.  1930ம் ஆண்டுகளிலிருந்து மஸ்ஜித் பராமரிப்புப்பணிகள்   ஜமாஅத்தவர்களது ஆதரவுடன் கனவான் நெய்னா முஹம்மத் என்ற பெரியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும்,  1933ம் ஆண்டு மஸ்ஜித் அல்லாப் பிச்சைக் கணக்குப் பிள்ளை அவர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு. காலத்துக்குக் காலம்  நிர்வாகிகள் பலரால்  பராமரிக்கப்பட்ட மஸ்ஜித் 1980ம் ஆண்டுகளைத் தொடர்ந்து பட்டினத்தைச் சேர்ந்த முஸ்லிம் வாலிபர் இயக்கத்தின் பெருமுயற்சியில் வர்த்தகச் செல்வர்கள், ஜமாஅத்தார்கள், கொடைவள்ளல்கள் பலரின் பேராதரவுடன் சிறப்புற புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.

மஸ்ஜிதின் நிர்வாக எல்லையுள் அமைந்த முஸ்லிம் கொலனியிலும் சமீபத்தில் ஒரு தக்கியா அமைக்கப்பட்டிருக்கின்றது. பட்டினத்தில் முஸ்லிம் பாடசாலை இல்லாததன் காரணமாக குடியிருப்பாளர்களது அதிகமான பிள்ளைகள் கலஹா ராமகிருஷ்ணா மகாவித்தியாலயத்திலும், சிங்களப் பாடசாலையிலும் கல்வியைத் தொடர்கின்றனர். குறிப்பிட்ட சில மாணவர்கள் கம்பளை ஸாஹிராக் கல்லூரிக்கும் செல்வதாக அறிய முடிகின்றது.

விசாலமான தெல்தொட்டைக் குடியிருப்பு பற்றித் தகவல்களைத் தந்துதவிய ஆசிரியத்தந்தை ஜனாப் முஹம்மது அபூபக்கர் ஸெய்னுல் ஆப்தீன், குவாஸி நீதிபதி ஹஸன் முஹிதீன் முஹம்மது இல்யாஸ், ஜனாப் முஹம்மது முஹ்தீன் முஹம்மது அப்பாஸ் ஆகியோருக்கு நன்றிகள் உரித்தாகுக!

கல்வி
பட்டினத்தைச் சேர்ந்த அதிகமான மாணவர்கள் கலஹா ராமகிருஷ்ணா மகா வித்தியாலயத்திலும் சிங்களப் பாடசாலையிலும் கல்வியைத் தொடர்ந்தாகக் கூறப்படுவதுண்டு. தமிழ் மகா வித்தியாலயத்தைப் போற்றி வளர்ப்பதில் பட்டினத்தைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தக சமூகத்தவர்களும் பிரமுகர்களும் பள்ளிவாசல் நிருவாகமும் காத்திரமான பங்களிபுச் செய்ததாக பிரதேச மக்கள் இன்றும் நன்றியோடு பேசுவதுண்டு. பட்டினத்தில் முஸ்லிம் பாடசாலை இல்லாத குறை நீண்ட காலமாக உணரப்பட்டபோதும் அதற்கான ஆரம்ப முயற்சிகள் 1910ம் ஆண்டுகளைத் தொடர்ந்து உருவாகியமை வரலாறாகும். ஆம்முயற்சியின் பிரதிபலனாக பட்டினவாசிகள் பெருமனம் கொண்டு “Model School” என்ற பெயரில் ஒரு முஸ்லிம் பாடசாலையை ஏற்படுத்த முன்வரலாயினர். 

கலஹா பட்டின வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்நிகழ்வுக்கு முழு ஆதரவையும் வழங்கிய பெருமை மத்தியமாகாண முதலமைச்சர் திரு. சரத் ஏக்கநாயக தெல்தொட்டைப் பிரதேசத்தின் பிரபல சமூக சேவையாளர் தேசபந்து விருதுபெற்ற தன்னே வளவ்வே ஐதுறூஸ் முஹம்மது நிஜாம் ஆகியோரைச் சாரும் என பட்டினவாசிகள் பெருமையோடு நினைவு கூர்வதுண்டு. இப்பெரும் பணிக்காக ஜமாஅத்தவர் களுடனும், பள்ளி நிருவாகத்துடனும் இணைந்து செயல்பட்ட மர்ஹ_ம்களான ஏ. எம். முக்தார், ஜெய்னுத்தீன், ஆசிரியர் முஹம்மது இல்யாஸ் ஆகியோர் குறிப்பிடப் பட வேண்டியவர்களாவர். 

ஆரம்பத்தில் மஸ்ஜித் மார்க்கபோதனை மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட பாடசாலை கண்டியின் வர்த்தகச் செல்வர்களான முஹம்மது ரியாழ் ஹாஜியார், முஹம்மது வபா ஹாஜியார்  ஆகியோரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பெருமதி மிக்க நிலத்தில் பாடசாலைக்கான கட்டடம் நிருமாணிக்கப்படலானது. இந்நிரந்தர தர்மத்தில் பெருமனம் கொண்டு நிதியுதவி செய்த கண்டியின் பிரபல வர்த்தகர் இஸ்மாயீல் ஹாஜியாரையும் ஊர்க் கனவான்களையும் பிரதேச நன்கொடையாளர்களையும் வர்த்தக சமூகத்தவர்களையும் பிரதேச மக்கள் நன்றியுணர்வோடு பாராட்டுவதுண்டு. பத்து மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் இன்று சுமார் இருநூற்றைம்பது மாணவர்கள் கல்வியைத் தொடர்வது அதன் ஒரு தசாப்தகால பயணத்தில் பெரும் வெற்றி எனலாம். பாடசாலையின்  முதலாவது அதிபராகப் பணியேற்றவர் தெல்தொட்டையைச் சேர்ந்த ஜனாப் ஏ. எச். எம். நஸார் ஆவார்.

மத்திய பிரதேச முஸ்லிம்களின் புராதனத் தொழில்கள் (கி. பி. 1500 முதல்)
01. சேனைப்பயிர்ச்செய்கை
02. விவசாயம்
03. கால்நடை வளர்ப்பு
04. வேட்டையாடுதல்
05. படகுச்சேவை
06. சிறு ஏற்றுமதிப் பயிர்ச் செய்கை
   (மிளகு, கிராம்பு, கறுவா போன்றவை)
07. வைத்தியர் சேவை
08. தவளம் போக்குவரத்து
09. ஈரோட்டு வியாபாரம்
10. வெற்றிலை பாக்கு வியாபாரம்
11. புடைவை வியாபாரம் (பொட்டணி)
12. சில்லறை வியாபாரம் (மலிகை)
13. மீன் பிடித்தல்
14. மணிப்பெட்டி வியாபாரம்
15. முட்டை வியாபாரம்
16. மேசன்வேலை (கொத்தனார்)
17. தச்சுவேலை
16. கடை வியாபாரம்
18. மணப்பொருள் வியாபாரம்
   (அத்தர், சந்தனக்கூறு, சாம்பிராணி)
19. தையற்றொழில்
20. பஞ்சுத்தொழில்
21. செங்கட்றொழில்
22. தும்புத்தொழில்
23. வைக்கோல் வியாபாரம்
24. தோல் பதனிடல்
25. இனிப்புப்பண்டங்கள் உற்பத்தி செய்தல்
   (மிட்டாய், கருப்பட்டி)
26. வலைகள் பின்னுதல்
   (மீன் பிடி வலைகள், வேட்டை வலைகள்)
27. மாட்டுவண்டி ஓட்டுதல்
28. பின்னல் வேலைப்பாடுகள் (கதிரை, கட்டில் பின்னுதல்)
29. குடிசைக் கைத்தொழில்கள் (பன்பெட்டி, பாய்)
30. இறைச்சிக்கடை

அலங்காரக் கலைகள்:
1. தோரணம் அதை;தல்
2. பந்தல் அமைத்தல்
3. வானவேடிக்கைகள்
4. பட்டுக்குஞ்சம் தயாரித்தல்
5. மேல்கட்டி சோடனைகள்
  (திருமணப்பந்தல், மௌலிது மஜ்லிஸ் அலங்கரிப்பு)
6. மரப்பட்டைகளைக் கொண்டு நிறச்சாயம் தயாரித்தல்
7. அலங்காரப்பாய்கள் பின்னுதல்
8. ஜரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை  தயாரிப்பு
 (முற்றும்)

 Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post