“எனக்கென்னவோ, அந்த ஆளைப் பார்க்கவே பிடிக்கவில்லை” என்று இலேசாக முணுமுணுத்த ஆறுமுகம், ‘சரி’ என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான்.
பொழுது விடிந்ததுமே ஆபிசுக்கு கிளம்பினான் கண்ணன். இன்னும் தூக்கத்திலேயே இருந்த பெரியவரை எழுப்ப வேண்டாம் என்று ஆறுமுகத்திடம் சொல்லிவிட்டு வெளியேறினான்.
‘எஜமானியம்மாவைப் பற்றி என்ன தகவல் கொண்டு வந்திருப்பார்? அதுவும் இத்தனைக் காலத்துக்குப் பின்?’ என்றெல்லாம் தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்ட ஆறுமுகம் அவர் உறக்கம் கலைந்து எழும் வரை காவல் இருந்தான்.
பைக்கை பார்க் பண்ணிவிட்டு அலுவலகத்தை நோக்கி நடந்தான் கண்ணன். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அவனின் கம்பனி வாசலில் நின்றிருந்தாள் அந்தப் பெண். அவனைக் கண்டதுமே அவசரமாக கைப்பையை திறந்தவள், “உள்ளே வரலாமே” என்ற அவனின் அழைப்பை தவிர்க்க இயலாமல் உள்ளே வந்து கண்ணன் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.
“அன்று நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றி சார். பார்மசியில் உள்ள ஒருவர் மூலமாகத் தான் உங்கள் விலாசம் அறிந்து கொண்டேன்.” என்றவாறே பணத்தை நீட்டினாள்.
“நீங்கள் யார், என்ன செய்கின்றீகள்? உங்கள் பெயர் என்னவென்றாவது சொல்ல மாட்டீர்களா?’ என்றான் கண்ணன்.
அவள் கொஞ்சம் தயக்கத்துடன் “ஆதவன் இன்ஸ்டிட்யூட்டில் குழந்தைகளுக்கு தட்டச்சும், தமிழும் சொல்லிக் கொடுக்கின்றேன்” என்றாள்.
அவள் நீட்டிய பணத்தை அவன் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்ற குழப்பத்துடன் “சார், இதை திருப்பித் தர வேண்டும் என்றே நான் வந்தேன்” என்றாள் தயக்கத்துடன்.
“உங்கள் பெயரை சொல்லுங்கள் எடுத்துக் கொள்கின்றேன்” என்றான் கண்ணன். என்றும் எல்லை மீறி எந்தப் பெண்ணிடமும் கண்ணன் பேசியது இல்லை. ஏனோ இவளுடன் பேசலாம் என்று தோன்றிய அசாத்திய தைரியமே அவனை பேசத் தூண்டியது.
மேக்கப் என்ற செயற்கையான அலங்காரம் ஏதுமின்றி தலையில் சூடிய மலர்களின் சுகந்தத்துடன் கட்டிய காட்டன் சேலையில் தேவதையாகவே தோன்றினாள் அவள்.
“என் பெயர் ..” என்று சிறிது தயங்கியவள் “ஓவியா” என்று சொல்லி விட்டு “நான் கிளம்பனும் சார்!” என்றாள்.
அவளுக்கு மிகவும் பொருத்தமான பெயர் தான் என்று உள்மனதில் நினைத்துக் கொண்டே அவளின் திருப்திக்காக பணத்தை பெற்றுக் கொண்டான் கண்ணன்.
(தொடரும்)
E-mail; vettai007@yahoo.com
0 Comments