சிறார்களுக்கு அடிக்கடி ஏற்படும் கால் வலி

சிறார்களுக்கு அடிக்கடி ஏற்படும் கால் வலி


கேள்வி: எனது மகனுக்கு 9 வயது. உடற்பருமனும் சற்று அதிகம். தினமும் கால்வலி என்று கூறுகின்றார். விளையாட்டுக்களில் ஈடு பட்டால் நோவு அதிகம். பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை . ஏதும் தீர்வு உண்டா ?
ஜெஸ்மின், கொழும்பு 12

சிறு பிள்ளைகளுக்கு கால்வலி ஏற்படுகின்ற நிலை இன்று அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதற்கு நீங்கள் வழங்கிய முக்கிய தகவல்தான் அதி உடற்பருமன். இது நாம் எமது பிள்ளைகளுக்குச் சிறு வயதிலிருந்து கொடுக்கின்ற உணவின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. வலி என்பது ஒரு நோயல்ல. அது பல நோய்களின் அறிகுறியாகும். கால் வலி என்பது முக்கியமாக எமது எலும்புத் தொகுதியுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகும். எலும்புகள் ஏதாவது ஒரு காரணத்தினால் அதன் உறுதித்தன்மையை இழக்கும் போது வலி ஏற்படுகிறது. காரணம் எமது முழு உடம்பையும் தாங்கி நிற்பது கால் எலும்புகளே.

இந்த எலும்புகள் பல மாடிக்கட்டிடங்களைத் தாங்கி நிற்கும் கொங்கிறீட் தூண்களுக்குச் சமனாகும். எனவே கொங்கிரீட் தூண்களுக்குத் தேவையான இரும்பு, சீமெந்து, மணல் போன்றவைகள் திறமாக இல்லாவிட்டால் கட்டிடங்கள் உடனடியாகவோ அல்லது காலம் தாமதித்தோ இடிந்து விழக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.

இதேபோன்று ஒரு குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலைக் கொடுக்காமல் அல்லது அதன்பின்பு தேவையான இயற்கையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் இருந்தால் காலப்போக்கில் எலும்புகள் பலவீனமடைந்து அதன் ஒரு அறிகுறியாக வலி ஏற்படுகின்றது.

ஒரு குழந்தை பிறந்தது முதல் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் வரை தாய்ப்பால் கொடுக்கும்படி புனித குர்ஆனில் வலியுறுத்தியிருப்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாய்ப்பால் என்பது இலகுவாகவும் மலிவாகவும் கிடைக்கக் கூடிய குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட ஒரு நிறை உணவாகும். அத்துடன் குளிர்காலத்தில் ஓரளவு சூடாகவும், வெப்ப காலத்தில் ஓரளவு குளிராகவும் பிள்ளைகளின் உடலுக்குச் செல்லக்கூடிய ஒரு அற்புதமான உணவமாகும். இந்த உண்மை தெரியாமல் இன்று எமது தாய்மார்கள் பல காரணங்களைக் கூறி தாய்ப்பாலைக் கொடுக்காமல் பசும்பாலினால் தயாரிக்கப்பட்ட பாலையே கொடுக்கின்றனர்.

பசும்பால் என்பது நான்கு கால்களைக் கொண்ட பசுவினால் தமது எதிர்கால சந்ததியினரும் நான்கு கால்களினால் திடகாத்திர மாக நிற்க வேண்டியதற்குரிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள முதல் உணவாகும். இதை இரண்டு கால்களினால் உடம்பைத் தாங்கக்கூடிய எமது பிள்ளைகளுக்கு முதன்மை உணவாகக் கொடுத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளில் ஒன்றுதான் இங்கு கேட்கப்பட்ட கேள்வியும் என நினைக்கின்றேன்.

அதற்கு அடுத்தபடியாக நாம் எமது பிள்ளைகளுக்கு -ஆவது மாதத்தில் ஏனைய உணவுகளைக் (weaning) கொடுக்க ஆரம்பித்தால் இயற்கை உணவுகளுக்குப் பதிலாகச் செப்பனிடப்பட்ட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கின்றோம். இவ்வுணவுகளில் உடற்பருமனைக் கூட்டக்கூடிய மாப்பொருள்களும், சீனிச்சத்தும் அதிகமாக இருக்கின்றதே தவிர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இல்லை. நாகரிக உலகம் எனக் கூறப்படும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் பெற்றெடுத்த தாய் மனிதனாகவும், ஆரம்ப உணவு ஊட்டும் தாய் பசுவாகவும், பின்பு ஓரளவு பருவமடைந்த பிள்ளைகளின் உணவு ஊட்டும் தாய் பேக்கரிகளாகவும் இருப்பதுதான் இன்றைய பிள்ளைகளை தாக்கும் கொடிய நோய்களுக்குக் காரணமாகும். 

எனவே உங்களது பிள்ளைகளின் கால் வலி மற்றும் அதி உடற்பருமன் போன்றவற்றிற்கு மேற் கூறியவைகளே காரணங்களாக இருக்கலாம். கால் வலி ஏற்படும்போது Pain Killer எனப்படும் மாத்திரைகளைக் கொடுத்து வலியைக் குறைப்பதல்ல இதற்குரிய பரிகாரம். அத்துடன் இதற்குரிய சரியான சிகிச்சைய ளிக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் பல பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம். உணவுச் சத்துக்குறைவு மாத்திரமின்றி வேறு பல காரணங்களினாலும் மூட்டு வீக்கத்துடன் கால்வலி வருவதற்கான பல காரணங்கள் உள்ளன. இதை இரத்தப் பரிசோதனைகள் மூலமாகக் கண்டறியலாம்.

இதற்காக வேண்டி இயற்கையான, அதிக சத்துக்கூடிய, குறைந்த கலோரியைக் கொண்ட உணவுகளைக் கொடுப்பதோடு அல்லாஹ்வினால் எமக்கு இயற்கையாகத் தந்த பக்க விளைவுகளற்ற மருத்துவக் குணமுள்ள உணவுகளையும் மற்றும் ஊட்டச் சத்துக்களைக் கொண்ட மருந்துகளையும் கொடுத்து நோயைக் குணப்படுத்த முயற்சிக்க வேண்டும். இதையே உலக சுகாதார நிறுவனமும் பரிந்துரைக்கிறது. அதன் பின்பு மாற்று வழிகளைப் பார்க்கலாம்.

யூனானி மருத்துவம் என்பதும் இஸ்லாமிய அடிப்படையுடன் உருவான ஒரு இயற்கை வைத்திய முறையாகும். இம் மருத்துவத்தில் இங்கு கேள்வியில் குறிப்பிட்டுள்ளது போன்ற நோய்களுக்கு பல நூற்றாண்டு காலமாக பாவிக்கப்பட்டு பக்கவிளைவுகள் இல்லை என நிரூபிக்கப்பட்ட சிறந்த மருத்துவக் குணமுள்ள உணவுகளும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மருந்துகளும் மற்றும் சிகிச்சை முறைகளும் உள்ளன. ஆகவே நீங்கள் நன்கு தேர்ச்சி பெற்ற யூனானி மருத்துவப் பட்டதாரி வைத்தியர் ஒருவரை கலந்தாலோசிக்கவும்.

இறுதியாக சகல தாய்மார்களுக்கும் ஒரு செய்தியாகக் கூறுவது என்னவென்றால் உங்களது பிள்ளைகளுக்கு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும்வரை தாய்ப்பால் கொடுப்பதோடு, சிரமம் பாராது இயற்கை உணவுகளைச் சமைத்துக்கொடுத்து இயற்கை வைத்திய முறைகளைக் கையாண்டு நோய்களைக் குணமாக்க முயற்சி செய்து எதிர்கால சந்ததியினரை திடகாத்திரமான, நோயற்ற சமுகமாக உருவாக்குமாறு வேண்டுகிறேன்.

வேட்டை 
E-mail; vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post