மோகத்தின் விலை - 39

மோகத்தின் விலை - 39


அந்த நர்சின் விபரம் தாருங்கள் என்று கெஞ்சியதில் ஒரு நோட்டில் இருந்து விலாசத்தை எடுத்துக் கொடுத்தார் அந்தப் பெரியவர். 

எப்படியோ இருவரும் அவர் குறிப்பிட்ட அந்த விலாசத்தை தேடி விரைந்தனர்.  ஆனாலும் மிகவும் இருட்டி விட்டதால் இருவரும் விடுதி ஒன்றில் தங்க முடிவு செய்து ஒரு அறையினை வாடகைக்கு எடுத்தனர்.

பெற்றவளை பார்க்க இயலுமா என்ற வேதனையில் கண்ணீருடன் கண்ணனும், என்னவென்றே அறியாத மனக் குழப்பத்தில் வேலவனும் அன்றைய இரவை கழித்தனர்.

அதிகாலை எழுந்ததும் அவசரமாக காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, உணவருந்தியதும் இருவரும் தாதி ஜோசபின் இல்லிடம் நோக்கி கிளம்பினர்.

விலாசத்தை மிக இலகுவாக கண்டு கொள்ள முடிந்தது. அனேகமாக அவ்விடம் வசித்த அனைவருக்குமே ஜோசபினை தெரிந்து இருந்தது.  அமைதியும், நல்ல குணமும் கொண்ட அந்த வயதான தாதி இருவரையும் வரவேற்றார். 

அவர்கள் வந்த விபரம் கேட்டறிந்ததும் ஜோசபின் உடைய முகத்தில் சோகம் தெரிந்தது.  கண்ணன் காட்டிய புகைப்படத்தை பார்த்து இன்னாரைப் பற்றித்தான் கேட்கின்றார்கள் என்று உறுதியாக தெரிந்த பின் ஜோசபின் “பாவம் அந்தப் பெண்.  கடைசி நிமிடத்தில் கூட தன் பிள்ளையைப் பற்றித்தான் உருகிக் கொண்டிருந்தார்.  

அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என்றார் சோகமாக,திடுக்கிட்ட இருவருமே நிமிர்ந்து உட்கார்ந்தனர்.  “அம்மா.. என்ன சொல்கின்றீர்கள்?” என்றனர் இருவருமே குரல் நடுங்க.

தேவகி கடைசி மூச்சை ஆசுபத்திரியில் விட்டதையும், அந்த நிமிடம் வரை கண்ணன், சிவா என்ற இருவர் பெயரை மட்டுமே உச்சரித்ததும் ஜோசபின் சொல்ல சொல்ல கண்ணீரில் மிதந்தான் கண்ணன். உடன் வந்திருந்த பெரியவர் கண்களை துடைத்துக் கொண்டார். பின், ஜோசபினின் உதவியுடன் தேவகி அனுமதிக்கப் பட்டிருந்த ஆசுபத்திரியை அடைந்தனர்.

ஆசுபத்திரியில் இருந்த ஒவ்வொரு படிக்கட்டும், தூண்களும் தேவகியை பற்றிய தகவல்களை இருவர் காதிலும் கிசிகிசுத்தன. 

‘அம்மா இங்கே அமர்ந்திருந்தாளோ, இங்கே நடை பயின்றாளோ’ என்றெல்லாம் எண்ணி உருகிப் போனான். தன் தாய் சுவாசித்த மென்மையான காற்றின் தலை வருடல், தன் தாயே தன் தலையை வருடி விட்டாற்போல் உணர்ந்தான் கண்ணன். தேவகி தற்போது உயிருடன் இல்லை என்ற உறுதியான தகவலால்  தன்னிலை மறந்து பேச்சில்லாமல் நின்றிருந்தார் பெரியவர். 

(தொடரும்)


Post a Comment

Previous Post Next Post