நான் கடந்த 5 வருடங்களாக கொலஸ்ட்ரோல் நோய்க்காக மருந்துகள் பாவித்துக் கொண்டிருக்கின்றேன். கொலஸ்ட்ரோல் மாத்திரைகளைத் தொடர்ந்து பாவிப்பது சரியில்லை என கூறப்படுகிறது. இதில் ஏதும் உண்மை உண்டா? இதற்காக ஏதும் யுனானி மருந்துகள் உண்டா? அவ் வாறாயின் யுனானி மருந்துகளிலும் பக்க விளைவுகள் உண்டா?
எமது உடம்பின் தொழிற்பாட்டுக்கு காபோஹைதரேட், புரதம் போன்றவைகள் எவ்வாறு அவசியமோ அதே போன்று எண்ணெய்த் தன்மை கொண்ட கொலஸ்ரோலும் உடம்பின் தொழிற்பாட்டுக்கு மிக மிக முக்கியம். உடம்பில் கொலஸ்ரோல் இன்றி உயிர் வாழ முடியாது. ஆனால் இதே கொலஸ்ரோல் அளவுக்கு அதிகமானாலும் அவை இரத்த நாடிகளில் படிந்து அதன் விட்டத்தைக் குறைப்பதன் மூலமும் உடம்பின் பல உறுப் புக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதில் இருதயம், மூளை, நரம்புத் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதி போன்ற உறுப்புக்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகின்றன. இதன் விளைவு நெஞ்சு வலி, ஆண்மைக் குறைவு, ஞாபக மறதி, கைகால்களில் விறைப்பு போன்ற நோய் அறிகுறிகள் ஆரம்பத்தில் ஏற்படும்.
எனவே கொலஸ்ரோல் எனப்படும் இப்பதார்த்தத்தை உடம்பில் சமநிலையில் வைப்பதன் மூலமே சுகதேகியாக வாழலாம். அதிகளவு கொழுப்புச் சத்துடைய இறைச்சி வகைகள், அதிகளவு சீனி உட்கொள்ளல், மதுபானம் மற்றும் புகைத்தல், நார்ச்சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளாமல் இருத்தல். தேகப்பயிற்சியின்மை போன்ற காரணிகளினால் கொலஸ்ரோலின் அளவு கூடும்.
அதிக மிருகக்கொழுப்பு வகைகளை உட்கொள்வது எனக் குறிப்பிடும் போது நாம் நினைக்கக் கூடிய ஒரு விடயம்தான் "எமது முன்னோர்கள் எம்மை விடவும் அதிகளவு மாமிசம் சாப்பிட்டார்கள் எனவும் ஆனால் தற்போது பரவலாகிக் கொலஸ்ரோல் நோய் இருப்பதைப் போன்று எமது முன்னையவர்களுக்கு இருக்கவில்லையே " எனவும் வியப்புடன் நாம் கேட்கிறோம்.
ஆனால் எமது முன்னோர்கள் மாமிச வகைகளுடன் அதிகமாக நார்ச்சத்துள்ள உணவு வகைகளை உட்கொண்டதோடு தற்போதைய சந்ததியினரை விடவும் அதிக உடற்தொழிற்பாட்டுடன் கூடிய வேலைகளிலும் ஈடுபட்டார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
அத்துடன் இறைச்சியைப் பழுதடையாமல் பாதுகாப்பதிலும் ஒரு வித்தியா சமானதும் சுகாதாரமானதுமான முறையையே கையாண்டார்கள். இன்று நாம் குளிர்சாதனப் பெட்டிகளிலேயே இறைச்சியை வைத்துப் பாதுகாக்கிறோம்.
ஆனால் எமது முன்னோர்கள் இறைச்சியை நெருப்பில் சுட்டுக் காயவைத்துத்தான் பழுதடையாமல் பாதுகாத்தார்கள். இவ்வாறு நெருப்பில் சுடும் போது இறைச்சியில் உள்ள கொழுப்பு உருகி வடிவதனால் காய்ந்த இறைச்சியில் கொழுப்பின் அளவு மிக மிக குறைவாகவே இருக்கும். எனவே காய்ந்தவாகவே இருக்கும். எனவே காய்ந்த இறைச்சியை உட்கொள்ளும் போது கொலஸ்ரோல் அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் குறைவாகவே உள்ளன.
எமது உடம்பில் கொலஸ்ரோல் திடீரென உற்பத்தியாவது இல்லை. இது சிறு வயதிலிருந்து கொடுக்கும் உணவிலேயே முக்கியமாகத் தங்கியுள்ளது.
அத்துடன் தொடர்ச்சியான உடற்பயிற்சியும் மன அழுத்தமற்ற வாழ்க்கையும் கொலஸ்ரோலைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கெடுக்கின்றன.
அதிக கொலஸ்ரோல் தொடர்ந்தும் குருதியில் இருக்கும் போது அவை குருதி நாடிகளில் படிந்து அதன் விட்டத்தைக் குறைப்பதன் மூலம் பல உடல் உறுப்புக்களுக்கான குருதியோட்டம் குறைந்து அல்லது முற்றாகத் தடைப்பட்டு அவ்வுறுப்புக்களுக்கான ஒக்சிஜனும் சத்துப் பொருட்களும் தடைப்படுகின்றன.
இவ்வாறு பாதிக்கப்படும் உறுப்புகளில் இருதயமும் மூளையும் மீள முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இருதயத்திற்கான இரத்த நாடி தடைப்படுவதன் மூலம் மாரடைப்பும் மூளைக்கான இரத்த நாடி தடைப்படுவதன் மூலம் பாரிசவாதமும் ஏற்படுகின்றன.
எனவே கொலஸ்ரோல் அதிகரிக்காமல் தடுப்பதன் மூலம் மேற்கூறிய பாதிப்புகளில் இருந்து எம்மைப் பாதுகாக்கலாம். எனவே இறைச்சி வகைகள் பட்டர் மதுபானம் அதிகளவு சீனி அல்லது இனிப்பு வகைகள் உட்கொள்ளல் போன்றவைகளைத் தவிர்த்து அதிக நார்ச்சத்துள்ள மரக்கறி வகைகள் பழவகைகள் தானிய வகைகள் போன்றவைகளை அதிகமாக உட்கொள்வதன் மூலம் கொலஸ்ரோலின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
அத்துடன் நடத்தல், நீந்துதல், சைக்கிள் ஓட்டம் போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதும் மன அழுத்தமற்ற வாழ்க்கை முறையினைக் கடைப்பிடிப்பதும் மிக மிக முக்கியமாகும். ஒருவருக்கு அதிக கொலஸ்ரோல் இருப்பதை ஊர்ஜிதம் செய்ய வேண்டுமெனில் இரத்தப் பரிசோதனை செய்தல் வேண்டும். அவ்வாறு அதிக கொலஸ்ரோல் என ஊர்ஜிதம் செய்யப்பட்டால் ஆரம்பத்திலேயே உணவுக் கட்டுப்பாட்டுடன் போதியளவு தேகப்பயிற்சியில் ஈடுபட்டு மன அழுத்தமற்ற வாழ்க்கையையும் மேற்கொண்டால் மாத்திரைகள் இன்றியே இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
வைத்தியர்கள் கூட இந்நோய் நிர்ணயிக்கப்பட்டதும் உடனடியாக மாத்திரைகளைக் கொடுக்காமல் நான் மேற்கூறியவைகளையே சிபார்சு செய்வார்கள். காரணம் இந்நோய்க்குரிய மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்ளும் போது ஏற்படுகின்ற பக்க விளைவுகளைத் தவிர்ப்பதற்காகவேயாகும். அதிக கொலஸ்ரோலிற்குப் பாவிக்கப்படும் மாத்திரைகளைத் தொடர்ந்து பாவிக்கும்போது ஈரலின் தொழிற்பாட்டுக்குப் பாதிப்பு ஏற்படுவதோடு ஒரு சிலருக்கு ஆண்மைக் குறைவு தொடர்ச்சியான உடம்பு வலி போன்றவைகளும் ஏற்படலாம்.
ஆனால் அல்லாஹ் இயற்கை மூலிகைகளைக் கொண்டே இந்நோய்க்குரிய சிகிச்சையை வைத்துள்ளான். மூலிகைகள் மூலம் தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் உடம்பில் கொலஸ்ரோலைக் குறைப்பதோடு பக்க விளைவுகளை உண்டாக்குவதற்குப் பதிலாக மேலும் பல நன்மை களை ஏற்படுத்துகின்றன. இம் மருந்துகள் கொலஸ்ரோலைக் குறைப்பதோடு ஈரலில் படிந்திருக்கும் கொழுப்பைக் கரைப்பதோடு ஆண்மைச் சக்தியையும் கூட்டுகின்றன.
எனவே கொலஸ்ரோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பக்க விளை வுகளற்ற யுனானி மருந்துகளைப் பாவித்து 1 மாதத்தின் பின்பு இரத்தப் பரிசோதனை செய்து தாங்களே அதன் பிரதிபலன்களைத் தெரிந்து கொள்ளலாம்.
இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக இரத்தத்தில் அதிக கொலஸ்ரோல் இருப்பதென்பது கலப்படம் செய்யப்பட்ட பெற்றோல் ஒரு வாகனத்தினுள் இருப்பதற்குச் சமனாகும். இவ்வாகனம் எந்நேரத்திலும் செயலிழக்கலாம் அல்லவா?
அதேபோன்று அதிக கொலஸ்ரோலினால் பாதிக்கப்பட்டவர்களும் எந்நேரத்திலும் மாரடைப்பு பாரிசவாதம் போன்ற நோய்களினால் பாதிக்கப்படலாம்.
DR.NASEEM
0 Comments