Ticker

6/recent/ticker-posts

ஐரோப்பாவின் நாகரீகத்தை உருவாக்கியோர் “மினோஆன்ஸ்”களே!


ஐரோப்பாவில் நாகரீகத்தை உருவாக்கியோர் அனடோலியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்த “மினோஆன்ஸ்” (Minoans) சந்ததியினரே. இவர்கள் ஐரோப்பாவின்  நாகரீகத்தைக் கட்டிஎழுப்பிய மூதாதயர் என்றும், இவர்கள்தான் உண்மையான “ஐரோப்பியர்” என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது!

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாகரீகத்தைக் கட்டியெழுப்ப  உலகில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த மனிதர்களே  காரணமாக  இருந்தனர் என்ற  கருத்து தவறானது  என்பது தற்போது நிரூபணமாகியுள்ளதாக இதுபற்றி ஆய்வுகள் செய்துவரும் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த “மினோஆன்ஸ்” சந்ததியினர் எகிப்திலிருந்து வந்தவர்கள் எனக் கருதப்பட்டு வந்தபோதிலும், நான்காயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த  எலும்புக்கூட்டுத் தொகுதியிலிருந்து பெறப்பட்ட  மரபணு  மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தி  இக்குழுவினர்  மேற்கொண்ட ஆய்வுகளின்படி அனடோலியாவிலிருந்து வந்தவர்கள் என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.

இந்த மரபணுக்கள்  ஐரோப்பாவிலும் ஆபிரிக்காவிலும் பண்டைய காலத்தில் வாழ்ந்த  மற்றும்  தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும்  மனிதர்களின் மரபணு  இயல்புகளுடன்  ஒத்துப்போவதாக அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

‘அவர்கள் தற்போது மத்திய  தரைக்கடல் பகுதியில்  – கிரேக்க  நாட்டின்  தெற்குப்பகுதியில் அமைந்துள்ள  “கிரிடி” (Crete)  தீவில் வாழும் மனிதர்களைப் போன்று உள்ளனர்’ என்று  வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் மனித மரபுகள் பற்றிய ஆய்வுத்துறைப் பேராசிரியர் ஜோர்ஜ் ஸ்டெமடொயன்னோபோயுலஸ் குறிப்பிட்டுள்ளார்.

8450 சதுர மீட்டர்கள் பரப்பளவைக் கொண்ட கிரிடி (Crete or Kriti) தீவில் தற்பொழுது 144,442 பேர் வாழ்கின்றனர். இத்தீவு கிரேக்கத்துடன் 1913ல் இணைந்து கொண்டது.

கிரிடியில்தான் “மினோஆன்ஸ்” நாகரிகம் தோன்றியுள்ளது.  இந்நிகழ்வு            கி. மு. 2700-1420  காலப்பகுதியில் நடந்துள்ளது.  “சென்டோரினி” தீவிலுள்ள “தேரா” எரிமலை  வெடித்துச் சிதறியதனால் இந்த நாகரீகம் அழிந்திருக்கலாம் என்று சிலரும், “மைசீனியன்” படையெடுப்பால்  அழிவடைந்திருக்கலாம் என்று மேலும் சிலரும் குறிப்பிடுகின்றனர்.

க்நோசொஸ் (Knossos)ல் தற்போது எஞ்சியுள்ள “மினோஆன்ஸ்” அரண்மனை  உள்ளிட்ட இதர கட்டடங்களை  சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர்  பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த தொல்லியலாளர் ஸர் ஆர்தர் வென்ஸ் கண்டுபிடித்தபோது, அவர்  மினோஆன்ஸின் ஓவியங்கள்  எகிப்தின் பிரமிட் ஓவியங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளமையை அவதானித்துள்ளார்.  அதனால் மினோஆன்ஸ் நாகரிகம்   எகிப்து – லிபிய நாடுகளிலிருந்து  வந்திருக்கலாம் என்ற கருத்தினை அவர் முன்வைத்தார். அன்று முதல் இன்றுவரை இக்கருத்தே நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“மிநோஆன் சந்ததியினர் ஆபிரிக்காவுடன் சிறந்த நட்புறவினைக் கொண்டவர்களாக இருந்துள்ளனர். “க்நோசொஸ்” அரண்மனையிலும்  எகிப்திலும் உள்ள பிரமிட் ஓவியங்களிலும்  ஒன்றுக்கொன்று ஒத்த இயல்புகளைக் காண முடிகின்றது” என்று பேராசிரியர் ஜோர்ஜ் ஸ்டெமடொயன்னோபோயுலஸ் குறிப்பிடுகின்றார்.

இதன்படி பண்டைய அனடோலியாவிலிருந்து வந்தவர்களே  “மினோஆன்ஸ்” என்பது நிரூபணமாகின்றது. துருக்கியின் ஆசியப்பகுதியில் வாழ்ந்தவர்கள்  ‘அனடோலியன்ஸ்” Anatolians  என்பது  குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஆராய மரபணுப்பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்று  இந்த ஆய்வுகளில் தொடர்புபடாத  கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின்  “மெக்டோனல்ட்” தொல்லியல்  நிறுவனத்தின்  ஆய்வாளர் கொலின் ரென்ப்ரச் குறிப்பிடுகின்றார்.


Post a Comment

0 Comments