
மனசே! மனசே! ரிலாக்ஸ் பிளீஸ்
நோய் நொடியின்றி நலம் பெற்று, மகிழ்வுடன் நீடு வாழ்க ! வாழ்கவே !! அட்டா... இவ்வாறு வாழ்த்தும் போது, நோயின்றி வாழ வள்ளுவப் பேராசான் உரைத்த குறளின் குரல் என் செவிகளில் ஒலிக்கிறது. இதை உங்களுடன் பகிர்ந்து, சிந்தனைக்கு விருந்தளிக்கவிரும்புகின்றேன். இதோ அக்குறள்...
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். (குறள் 948)
இதன் பொருள்
நோய், அதற்குரிய காரணம், அதைத் தீர்ப்பதற்கான வழி இவையறிந்து அதை நீக்குவதற்கான மருத்துவம் செய்ய வேண்டும் என்பதாகும்.
ஆனால், இக்குறளில் அழகிய வாழ்க்கைத் தத்துவம் அடங்கி உள்ளது. சற்று குறளின் உள்ளே பயணம் செய்தால் புரியும்... உடம்பும். மனசும் இரண்டும் சரியாக இருந்தால் தான் மனிதன் மகிழ்ச்சியாக, மனநிறைவாக, ஆனந்தமாக வாழ முடியும். இவைகளில் எதில் ஒன்று குறைபட்டாலும் வாழ்க்கை பாழ்தான்.
வாழ்க்கையை உண்மையில் நிறைவாக வாழ்ந்து பார்ப்பவர் எத்தனை பேர்?... விடை தேடினால் எண்ணிச்சொல்லிவிடலாம்.
உடல் நோய் என்றால் வயிற்றுவலி... கால் வலி... தலைவலி... என அதை நோயாளியே சொல்ல முடியும். அதை சரி செய்ய எத்தனையோ வழிகள், வசதிகள் உண்டு. ஆனால் மனநோய் என்றால்?... இது வெளியே தெரியாது. மனவியாதி உள்ளவர். அவராகவே வந்து மருத்துவரிடம் எனக்கு மனநோய் வந்திருக்கு, அதுக்கு மருந்து கொடுங்க... என்று கேட்டுக் கொண்டிருக்கமாட்டார்.
மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே சிக்கலான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். முதலில் பயம், கவலை, துக்கம், சோர்வு, பிரச்சனை, சோகம், ஏமாற்றம், கோபம், வெறுப்பு, தீச்சொல், அருவருப்பு இப்படி... அடுக்கிக் கொண்டே போகலாம்.
அட்டா.... இவையெல்லாம் நம்மிடமே உள்ளனவே... என்று எண்ணத் தோன்றுகிறதா? நண்பர்களே ! உஷார் இவையெல்லாம் நம் மனத்திற்குப் பிடித்த நோய்கள். ஒட்டிக் கொண்டிருக்கும் வியாதிகள். தயவு செய்து களையெடுங்கள். இது முற்றினால் நாம் பைத்தியம் என்ற கட்டத்திற்குச் சென்றுவிடுவோம். பிறகு எப்படி நாம் ஆனந்தமாக வாழ்வது?
இன்று நம்மிடையே வாழும் மனித ரகங்கள் இதோ, மனந்திறந்து பேசாதவர், பிறருக்குத் துன்பம் ஏற்படுத்தும் மனநிலையில் மகிழ்பவர், வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர். தாழ்வு மனப்பான்மை கொண்டவர். உள் மனக்காயம் கொண்டவர். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதவர் தற்கொலைக்கு முயற்சிப்பவர், மதுவுக்கு அடிமையானவர் போன்றோர் மன நோயாளிகளே! |
இந்த அளவீடு கொண்டு பார்த்தால் நாம் ஏதோ ஒருவகை மன நோயாளிகளோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இது சரியா? ஏன் இந்த சுமையான வாழ்க்கை ? வாழ்வை சுவையாக்கிக் கொள்ள வேண்டாமா?... ஆகவே, குறை களைந்து, வாழ்வைப் புரிந்து, ஆனந்தமாக வாழ, இப்போது குறளை மீண்டும் படியுங்கள். வாழ்க்கை இனிக்கும்! நலம் பெற்று நீடுவாழ்க! (தொடரும்)
(23.9.2021 அன்று கோவை வானொலியில் ஒலிபரப்பான சான்றோர் சிந்தனைப்பதிவு)


0 Comments