Ticker

6/recent/ticker-posts

கோகிலமே!


வாசல் தெளித்த 
மிச்ச நீரால்
கால் நனைத்துக் கொள்ளும் போது
உன் கொலுசுகளிடும்
சப்தத்தில் சங்கீதம் 
பிறக்கிறது......!!

செடி பூக்கும் முன்னே
வாசல் பூத்தது உன்னால்....!!

நேர் புள்ளியிட்டு
வளைத்து வளைத்து 
கோலமிடுமுன் அசைவுகளில் உருவாகிறது
நிரையசையில் ஒரு கவிதை.....!!

வண்ணமிட்ட கையோடு
கூந்தலொதுக்கும் போது
சற்று ஒளிர்ந்தது 
உன் பிறை நுதல்....!!

கோலங்களில் 
பூ பூக்க வைத்த நீயே
மாலையானதும் 
நீரூற்றி அழித்துவிடுகிறாய்....!!

சூரியன் வருகைக்கு முன்னே பூத்தது
முற்றத்தில் தாமரை....!!
நிலவின் குளிருக்கு
முன்னே மலர்ந்தது
முன் வாசல் அல்லி....!!
சந்திர சூரியன் 
நீயாகி போனாதாலோ.....!!

நீர் தெளிக்கும் சப்தம்
நீ கொடுக்கும் அலாரம்
விடியல் கொண்டு
வானம் தேடும் 
சிறு பறவைகள் கூட்டம்....!!

கம்பி கோலமிட
வளைத்து இடும்
மாவின் வெண்மை
உன் பற்கள்
நிலவின் தன்மை
உன் கண்கள்.....!!

தினம் தினம்
கோலமிடும் கோகிலமே
கோடை பூ வனமே....!!

யாரோ ஆகிய நீ
எனதாகிய கவிதையில்
நீ ஆகி வந்தாய்....!!



Post a Comment

0 Comments