Ticker

6/recent/ticker-posts

வரலாறு பேசும் பெண்மையின் புகழ்-15

அன்னை அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா தள்ளாடும் வயதிலும் தன் முதுகு புறத்தில் ஒரு சிறு கத்தியை சொருகி வைத்துக் கொண்டிருப்பார்கள்...

இதைப் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்ட பொழுது,

"எவனாவது ஒருவன் என்னிடத்தில் திருட எண்ணி வந்தால், இந்த கத்தியால் அவனது வயிற்றை கிழித்து விடுவேன்" என்று பதில் சொன்னார்கள்..

அன்னையின் இந்தத் துணிச்சலும் வீரமும் மார்க்கப்பற்றும்,
அவர்களது பிள்ளைகளையும் அவர்களைப் போலவே துணிவானவர்களாக வளர்த்து ஆளாக்கியது...

இஸ்லாமிய மார்க்கம் தந்த இறை நம்பிக்கை மூலம் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா எந்த அளவு துணிவும் தைரியமும் கொண்டிருந்தார்களோ, அதே அளவு மார்க்கத்தின் மீது மதிப்பும் அதைப் பற்றிய தேடலும் கொண்டிருந்தார்கள்...

ஒருமுறை அன்னை அஸ்மா பெருமானார்ﷺ அவர்களிடத்தில், "நாயகமே யாரசூலல்லாஹ்! தாங்கள் பெண்களை நரகத்தில் அதிகமாக பார்த்தேன் எனவே பெண்களே! அதிகமான தர்மங்களை செய்து பாதுகாப்பு பெறுமாறும், நீங்கள் அணியும் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள் என்றும் வலியுறுத்தி கூறியுள்ளீர்கள்...

நாயகமே! என்னுடைய கணவர் குடும்ப செலவிற்காக என்னிடம் தரும் பணத்தை தவிர எனக்கு என்று எதுவும் இல்லை அப்படி இருக்க நான் எவ்வாறு தர்மம் செய்ய முடியும்?" என்று கேட்டார்கள்...

அதற்கு பெருமானார்ﷺ அவர்கள்,

"அஸ்மா! உங்களுடைய கணவர் தரும் பணத்திலிருந்து நீங்கள் சேமித்து வைக்க வேண்டாம்... அதில் கஞ்சத்தனம் காட்ட வேண்டாம்...

உங்களுக்கு இயன்ற அளவு அதிலிருந்து தர்மம் செய்யுங்கள்.

நீங்கள் தர்மம் செய்வதை விட்டு விட்டால், உங்களுடைய வீட்டின் அபிவிருத்தி துண்டிக்கப்பட்டு விடும்.."என்று எச்சரித்தார்கள்...

எனவே பெருமானாரின் இக்கருத்து மூலம் பெண்கள் தர்மம் செய்வது எந்த அளவு முக்கியமானதோ அதே அளவு அவர்கள் தர்மம் செய்வதற்குரிய வாய்ப்பு வழிகளை அமைத்துக் கொடுப்பது அவர்களின் பொறுப்பாளிகளுக்கு கடமையாகும் என்பதையும் சிந்திக்க வேண்டும்... 

இவ்வாறு ஒவ்வொரு சந்தேகங்களையும் கேட்டு, அதற்கு தெளிவுரைகளையும் பெருமானாரின் மூலமாக பெற்று பல  தியாகங்களை செய்த  ஸஹாபா பெருமக்களில் ஸஹாபிப் பெண்மணிகளுக்கும் முக்கிய இடமுண்டு...
(முற்றும்)




Post a Comment

0 Comments