முகவுரை
அண்ணலாரின் தோழர்களான ஸஹாபா பெருமக்கள் அண்ணலாரிடம் கேட்ட கேள்விகளையும், அதற்கு அறிவு எனும் பெரும் கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களான அவர்களது தெளிவான பதில்களையும், இத்தொடர் மூலம் இனி வரும் பதிவுகளின் வழியாக அறிந்து நம் வாழ்வை செம்மை பெறச் செய்யலாம் இன்ஷா அல்லாஹ்.
மாபெரும் அறிஞர் ஸுப்யான் அஸ்ஸவ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள், கல்வியின் படித்தரங்கள் 5.
அதில் முதலாவது பிரயோஜனமான கேள்விகளை கேட்பது.
அதாவது யார் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாரோ, அது அவர் அறிவை தேடும் பாதையில் செல்ல ஆரம்பித்ததன் அடையாளமாகும்.
கேள்விகள் கேட்கும் பொழுது மூன்று விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1.நாம் கேட்கும் கேள்விகள் நமக்கும் பிறருக்கும் பிரயோஜனம் அளிப்பதாக இருக்க வேண்டும்.
2.கேள்வி கேட்பதன் நோக்கம் தெளிவு பெறுதலே அன்றி மற்றவரை பரீட்சித்துப் பார்க்கும் தீயஎண்ணமாக இருக்கக் கூடாது.
3.நாம் யாரிடம் கேட்டு தெளிவு பெறுவது சிறந்தது என்பதை கவனத்தில் கொண்டு கேட்க வேண்டும்.
அறியாதவைகளை பிறரிடம் கேட்டு அறிந்து கொள்வதின் அவசியம்.
புனித மார்க்கம் இஸ்லாம் மக்களிடையே சென்றடையும் ஆரம்ப கால கட்டம்.அந்த கால கட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற சிலரில் ஒருவருக்கு குளிப்பு கடமையாகி விட்டது. அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவர் எவ்வாறு குளிப்பது என்ற குழப்பம் எழ, ஏனையவர்கள் காயம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் கடமையான குளிப்பை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று கூற,
அவரும் தண்ணீரைக் கொண்டு குளித்து விட்டார்.
பலத்த காயத்துடன் இருந்த அவர் கடமையான குளிப்பை நிறைவேற்றிய மறு கணமே மரணித்து விட்டார்.
இந்நிகழ்ச்சி பெருமானாரை சென்றடைய, அந்த மனிதரை குளிக்குமாறு சொன்ன தோழர்களை பார்த்து "நீங்கள் அவரை கொன்று விட்டீர்கள்" என்று மூன்று முறை கூறினார்கள்.
எந்த ஒரு விடயம் நமக்குத் தெரியாது என்றாலும் அதை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மாறாக நீங்களாக ஒன்றைக் கூறி அவரை குளிக்கச் சொல்லி இப்பொழுது அவர் மரணம் அடைந்து விட்டார்" என்று கூறிய அண்ணலார்(ஸல்) அவர்கள் அறியாமையின் விபரீதத்தை அவர்களுக்கு உணர்த்தினார்கள்.
அறியாமை என்ற நோய்க்கு மருந்து கேள்வி கேட்பதுதான்.அதன் வழியாக கிடைக்கும் தெளிவான அறிவைக் கொண்டு அந்த நோயை குணப்படுத்த முடியும்.
கடமையான குளிப்பை நிறைவேற்ற நீர் இல்லை என்றிருந்தால், அல்லது நீரை உபயோகிப்பது தீங்கு விளைவிக்கும் என்றிருந்தால், மண்ணைக் கொண்டு தயம்மம் செய்து தொழுவதற்கு அனுமதி உண்டு!
மேலும் இன்றைய காலகட்டத்தில் மார்க்க அறிவு மங்கிய நிலையில் இருப்பதினால் தான் அதிக அளவிலான தவறுகள் இடம் பெற காரணமாகின்றது.
அற்புத ஆசான் அண்ணல் நபி(ஸல்)அவர்கள்,
ஒரு சிறந்த ஆசானுக்கு அடையாளம் நல்ல கேள்விகளை கேட்பதை அனுமதிப்பது.
அந்த வகையில் நற்குணத்தின் தாயகம் தாஹா நபி(ஸல்)அவர்கள்,
ஒரு அற்புதமான ஆசான். அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை உம்மத்துகளுக்கு வழங்குவதுடன், கேள்வி கேட்பவர்களை ஊக்கப்படுத்தவும் செய்வார்கள்.
ஸஹாபா பெருமக்களில் அதிகமாக கேள்வி கேட்பவர்களில் முதலிடம் அன்னை ஆயிஷா.
அடுத்த படியாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு.
இதன் காரணத்தால் தான் அதிகமாக ஹதீஸ்களில் அறிவித்தவர்களின் பட்டியலில் இவர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள்.
சில சமயங்களில் இவர்களை பார்த்து பெருமானார்(ஸல்) அவர்கள்,
"இந்த உம்மத்தில் முதன்முதலாக நீர் தான் இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள்" என்று பாராட்டவும் செய்வார்கள்.
நமக்கும், பிறருக்கும் பிரயோஜனம் அளிக்கும் கேள்விகளை கேட்டு மார்க்கத்தை அறிந்து கொள்வதை பெருமானார்(ஸல்) அவர்கள் பெருமளவில் போற்றியுள்ளார்கள்.
எனவே,பெயரளவில் முஸ்லிமாக வாழ்ந்து மரணிப்பதை விட, முஸ்லிம்களாக எம்மை பிறக்கச் செய்து பேரருளை பொழியும் வல்ல நாயன் அல்லாஹ்வை அடையும் வழிகளை அறிந்து எம் வாழ்வை வளம் பெறச் செய்வோம்!!!
0 Comments