
ஈருலக நாதர் இரசூல் நபி(ஸல்)அவர்களின் இனிய தோழர்கள் கூடி,
ரஸுலின் இனிய உபதேசத்தை இதயமேற்றிக்கொண்டிருந்தனர்.
அந்தப் புனித சபையில், "மக்களே! பூமியில் உள்ளவைகளில் இருந்து ஹலாலானவைகளை உண்ணுங்கள்" என்று பொருள்படும் திருமறையின் திருவசனம் ஓதப்பட்டது.
செவி தாழ்த்தி கேட்டுக் கொண்டிருந்த ஸஹாபா பெருமக்களில் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு கூட்டத்திலிருந்து எழுந்து, "நாயகமே யாரஸுலல்லாஹ்! எனது துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவனாக நான் ஆக வேண்டும். அதற்காக நீங்கள் எனக்கு துஆ செய்யுங்கள்" என்று வேண்டியதும்,பெருமானார் அவர்கள் "உம்முடைய உணவை ஹலாலானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த உலகில் யாரெல்லாம் தன்னுடைய துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையே என புலம்புகின்றார்களோ, அவர்கள் அனைவருக்குமான பெருமானாரின் பதில் இதுதான்,எப்பொழுது ஒருவனின் உடை, உணவு, வசிப்பிடம் போன்ற அனைத்தும் ஹராத்தில் நின்றும் பாதுகாப்பு பெறுகின்றதோ, அப்பொழுது எத்திரைகளும் இன்றி அவனின் துஆக்கள் இறைவனிடத்தில் ஒப்புக்கொள்ளப்படும். பெருமானார்(ஸல்) அவர்கள் ஏவிய இறை கட்டளைக்கு செவி தாழ்த்திய ஸஹாபாக்களின் பேணுதல்,ஒருமுறை அன்புத்தோழர் அபூ பக்கர்
ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வேலையாள், தனக்கு கிடைத்த ஒரு தின்பண்டத்தை கொண்டு வந்து அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்தான்.
பசியுடன் இருந்த அவர்களும் உடனே வாங்கி சாப்பிட்டு விட்டார்கள்.
சாப்பிட்ட பின்னர் தான் அந்த உணவு அவனுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது பற்றிய எண்ணம் தோன்ற அதைப் பற்றி விசாரித்தார்கள்.
அதற்கு அவன்,
"நான் உம்மிடம் வேலை பார்ப்பதற்கு முன்னர் ஒரு கோத்திரத்தாருக்கு ஜோசியம் பார்த்துச் சொல்பவனாக இருந்தேன். அவ்வாறு ஒரு முறை நான் பார்த்த ஜோசியம் பலித்து விட்டது.
அதன் காரணமாக சந்தோஷமடைந்த அவர்கள், எனக்கு ஏதேனும் அன்பளிப்பு தர நினைத்தும் அச்சமயம் அவர்களிடம் எதுவும் இருக்கவில்லை.
எனவே மீண்டும் ஒருமுறை அந்தப் பக்கம் வருமாறும் அவர்கள் ஏதேனும் தருவதாகவும் கூறியிருந்தார்கள்.
இன்று என்னைக் கண்டு அவர்கள் தந்த தின்பண்டங்கள் தான் இவை" என்று கூறினான்.
வாழ்நாள் முழுக்க தன் உடலில் ஒரு அணுவளவேனும் ஹராம் கலந்து விடாமல் பேணுதலாய் வாழ்ந்தவர்கள் அவர்கள்."தவறான தொழிலின் வாயிலாக கிடைத்த உணவையா நான் சாப்பிட்டு விட்டேன்!!!" என்று பதறிய அவர்கள் உடனே தன் இரு விரல்களையும் வாய்க்குள் விட்டு வாந்தி எடுக்க முயற்சித்தார்கள். வாந்தி வரவில்லை.
அந்த உணவை எப்படியேனும் வெளியேற்றி விட வேண்டும் என்பதற்காக தொண்டை குழி நிரம்பும் வரைக்கும் தண்ணீர் குடித்தார்கள். பின்பு தன் இரு விரல்களையும் விட்டு வாந்தி எடுத்தார்கள்.
அதன் பின்னர் தான் அவர்களின் மனம் நிம்மதி அடைந்தது.அதன் பின்னர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்
"ஒரு உணவு பருக்கை கூட ஹராமாகாத நிலையில் தான் நான் என் இறைவனை சந்திக்க விரும்புகின்றேன்"என்ற அன்னவரின் கூற்று மூலம் அவர்களின் பேணுதல் எவ்வளவு மேன்மையானது என்பதை சிந்திக்க வேண்டும்.மேலும், பெருமானார்(ஸல்) அன்னவர்களின் திருவாய் வழியாக வந்த இந்த ஹதீஸை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.
அவர்கள் கூறுகின்றார்கள்,
"பிற்காலத்தில் ஒரு காலம் வரும்.அந்த காலத்தில் ஒருவன் தன்னுடைய சம்பாத்தியம் ஹலாலா? அல்லது ஹராமா? என்ற விடயத்தை அவன் பொருட்படுத்த மாட்டான் அத்தகைய ஒரு காலம் வரும்"என்று முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
பெருமானார்அவர்கள் அறிவிப்புச் செய்த அக்கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் இந்த விடயத்தில் பேணுதலாய் இருந்து நம்முடைய ஈமானை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
1 Comments
அல்-ஆலீமா, நிப்லா இம்தியாஸ் அவர்களின் ஆக்கங்கள் யாவும் கற்பனையில்ல சம்பவங்களாக இருப்பதைக்கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் அத்தோடு வேட்டை மின்னிதழ் மிளிர்வதும் உங்களின் தொடரான பங்யாற்றல் என்பதில் ஐயமில்லை இன்ஷா-அல்லாஹ் தொடரட்டும் ஒத்துழைப்பு.
ReplyDelete