Ticker

6/recent/ticker-posts

மோகத்தின் விலை -51


வெற்றியைப் பற்றியும் தன் எஜமானியைப் பற்றியும் நினைக்கும்  போதெல்லாம் ஆறுமுகத்தின் முகம் கலை  இழந்திருக்கும்.  அதனை அடிக்கடி கவனித்த ஓவியா ஒரு நாள் “அப்பா. எப்போதும் எதையோ இழந்தது போல் சோகத்துடன் இருக்கின்றீர்களே, என்ன காரணம்?” என்றாள். 

கண்ணன் மட்டுமே உலகம் என்று இருந்த ஆறுமுகத்துக்கு அவள் அப்பா என்று அழைப்பது மனதுக்கு மிக உகந்ததாகத் தான் இருந்தது.

“ஒன்றும் இல்லையம்மா, கொஞ்சம் களைப்பு மட்டுமே.  வேறொன்றும் இல்லை” என்றான் ஆறுமுகம்.

“ஒரு வேலையும் செய்ய வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டேன் என்கின்றீர்கள். தோட்ட வேலையைப் பார்க்க இருந்தவனையும் நீக்கி விட்டீர்கள். நான் கண்ணனிடம் சொல்லி தோட்டத்தை பார்த்துக் கொள்ள யாரையாவது நியமித்துக் கொள்ளலாம்”  என்றாள் ஓவியா உரிமையுடன்.

“இல்லை.. வேண்டாம் அப்படி எதுவும் செய்ய வேண்டாம்” என்றான் பதட்டத்துடன் ஆறுமுகம். 

“உயிரோடு இருந்தவரை ஐயா தோட்டத்தில் இருக்கும் செடி கொடிகளை எல்லாம் மிகவும் நேசித்தாரம்மா.  அவரும் போய் கண்ணனும் விடுதியில் என்றான பின் என்னுலகமே இந்த மரங்களும் செடிகளும் தானம்மா ஒருவருமே இல்லாமல் தனிமையில் நான் இருந்த போது இந்த செடிகளுடனும் மரங்களுடனும் பேசிக் கொண்டிருப்பேன்.  அவைகளும் எனக்கு பதில் சொல்லும்.  என் கண்ணில் நீர் வழிந்தால்,  கிளைகள் என் தலை வருடும்.  இதமான காற்றாய் என் கண்ணீர் துடைக்கும்.  இதெல்லாம் உனக்கு சொன்னால் புரியாது.  என்னை அவற்றை கவனிப்பதை மட்டும் நிறுத்த சொல்லாதே...”  என்றான் கரகரத்த குரலில்.

ஓவியா மிகப் பரிவுடன் ஆறுமுகத்தை பார்த்தாள்.  இத்தனை மென்மையான உள்ளம் கொண்ட ஆறுமுகத்தை பார்க்கவே அவளுக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது.

அவளின் தந்தைக்கு வேளாவேளைக்கு மருந்து தரும் பணியைக் கூட விடாமல் தானே செய்வதும், தந்தையின் தனிமைக்கு மிகத் துணையாக அவன் இருப்பதும் அவளுக்கு மனதில் ஆறுமுகத்தை மிக உயர்ந்த இடத்தில் வைக்கத் தூண்டியது.

தந்தையிடம் மிக அன்பாக நடக்கும் கணவனும், துணையாக ஆறுமுகமும் கிடைத்ததை எண்ணி அவள் இறைவனுக்கு நன்றி சொன்னாள். 

நிமிடங்கள், மணித்தியாலங்கள், நாட்கள், மாதங்கள் என வருடம் இரண்டும் பறந்தோடி விட்டது. கண்ணனின் பெயர் சொல்ல இன்னும் ஒரு குழந்தை இலையே என்ற ஏக்கம் ஓவியாவை வாட்டத் தொடங்கியது.  மனதில் மேக மூட்டமாக எண்ணங்கள் அலை பாய்ந்தாலும் அதைப் பற்றி வாயே திறக்காமல் காலத்தை ஒட்டிக் கொன்டிருந்தான் கண்ணன்.

(தொடரும்)



Post a Comment

0 Comments