
தனது பொதியைத் தோளில் மாட்டிக்கொண்ட பணியாள், தன்னைப் பின் தொடர்ந்துவரும்படி செரோக்கிக்கும் ரெங்மாவுக்கும் சைகை காட்டியதும், அதனைப் புரிந்துகொண்ட அவர்கள் இருவரும் அந்தப் பணியாளைத் தொடர்ந்து நடந்து, மறுபடியும் 'லிப்ட்' என்றழைக்கப்படும் அதே இரும்புக் கூண்டுக்குள் நுழைந்தனர்.
பணியாள் அங்கிருந்த 'ஜீ பட்டன்'னை
அழுத்தியதும், அந்தக்கூண்டு தன் போக்கில் வேகமாகக் கீழ் நோக்கி நகர்ந்து தரை தட்டியதும், அதற்குள்ளிருந்து மூவரும் வெளியேறினார்.
சற்றுத் தூரம் நடந்து சென்றதும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 'ட்ரக்கு' ஒன்றின் பொதித்தட்டிற்குள், பணியாள் தான் சுமந்துவந்த பொதியை வைத்துவிட்டு, செரோக்கியும் ரெங்க்மாவும் ஏறிக்கொள்ளவதற்காக, ட்ரக்கின் பின்புறக் கதவைத் திறந்துவிட்டான்.
வண்டியின் முன் கதவைத்திறந்து அவன் ஏறிக்கொண்டதும், வண்டி 'மனாஸ்' வீதியில் காற்றை ஊடறுத்தவாறு வேகமாகச் சென்று மரவேரடிக்குச் சற்று தூரத்தில் நின்றது.
வண்டியிலிருந்து இறங்கிய பணியாள், செரோக்கியும் ரெங்க்மாவும் இறங்கிக்கொள்ளவதற்காக கதவைத் திறந்துதந்துவிட்டு, தட்டுக்குள்ளிருந்த பொதியை எடுத்துத் தன் தோளில் சுமந்து கொண்டு, செரோக்கியையும் ரெங்மாவையும் தன்னைப் பின்தொடரும்படி சைகை காட்டினான்.
சிறிது தூரம் நடந்து சென்ற அவர்கள், அங்கிருந்த கம்பிவேலியைக் கடந்து, மரவேரடியை அடைந்தனர். தன் சுமையை இறக்கி வைத்துவிட்டு, வேர் ஒன்றில் உட்கார்ந்தான் அந்தப் பணியாள்.
பின்னர் உடைகளை மாற்றிக்கொள்ளும்படி பணியாள் குறிப்பிட்டதும், தாம் வேருக்குள் மறைத்து வைத்திருந்த, உடைகளை எடுத்துச் சென்று, அதே மரத்துக்கு மறைந்துகொண்டு இருவரும் தம் கானகத்து உடைகளை மாற்றிக் கொண்டதும் அவர்கள் வனவாசிகளாயினர்.
அவர்கள் வரும்வரைக்க்கும் பணியாள் தான் சுமந்துவந்த பொதியைத் திறந்து, மூன்று கால்கள் கொண்ட படக்கருவி தாங்கியை நீட்டி நிமிர்த்தி, படமெடுப்பதற்குத் தயாரானான்.
படக்கருவி தாங்கியைக் கண்டதும் ரெங்க்மாவுக்குத் தன்னை ஓரினாகோ ஆற்றிலிருந்து காப்பாற்றிவிட்ட குள்ளமனிதர்கள் நினைவுக்கு வந்தனர்.
அவர்களும் இப்படியான ஒன்றை வைத்தே அன்று நிழற்படமொன்றை எடுத்துத் தந்தனர்.
அந்தப்படம் கூட இப்பொழுது அவள்வசமில்லை.
வனவாசிகலான அவர்கள் இருவரையும் அந்த மரவேரில் ஒருசேர நிறுத்தியும், இருத்தியும் பல படங்களை எடுத்த பணியாள், மறுபடி அவர்களை நகரத்து உடைகளை மாற்றிக்கொள்ளவைத்து, வண்டியில் ஏற்றிச் சென்று அடுக்குமாடி அலுவலகத்தில் விட்டான்.
இர்வின் அவர்களை 'டொராபிகா ரெஸ்டோரண்ட்'க்கு அழைத்துச் சென்று பகற்போஷனத்தை உண்ணச் செய்து, தன்னைக் காண வந்தமைக்கு நன்றி செலுத்தி அவர்களின் பயணத்தைத் தொடர ஆசி கூறியதும்தான், தாம் எதற்கு வந்தோம், ஏன் வந்தோம் என்ற நினைப்பே செரோக்கிக்கு வந்தது!
(தொடரும்)

.gif)




0 Comments