Ticker

6/recent/ticker-posts

சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-24


இறைவனிடம் வஞ்சகமில்லை!
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த இறைப்பேராற்றல் மனித குலத்திற்கு வேண்டிய அனைத்தையும் வாரி வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. 

நாம் தான் அதை அறிவதும் இல்லை ; புரிவதும் இல்லை ;உணர்வதுமில்லை ; 

குறை நம்மிடம் தான்... இறையாற்றலிடம் வஞ்சகம் இல்லை ... 

இதனை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் திருவள்ளுவப் பேராசான் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். 

இதோஅவர் கூற்று 
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு. (குறள் 354) 

இதன்பொருள். ஐம்புலனறிவு தெளிவாகப் பெற்று இருப்பினும், தன்னையறியும், தன்னை உணரும் தன்மை இல்லாதவர்களுக்கு ஒரு பயனும் இல்லை... என்னே! ஒருதீர்க்கதரிசனப்பார்வை. நமக்கு நல்ல சரீரம், நல்ல மனம், புத்தி, பார்க்க கண்கள், கேட்க செவி பேச வாய், உழைக்கக் கைகள், நடக்கக் கால்கள், குறைபாடற்ற உள்ளுறுப்புகள் அனைத்தும் இறையாற்றல் நமக்குக் கொடுத்தவையே ! நாமனைவரும் அதற்குக் கடன்பட்டவர்களே ! 

அந்த நன்றியறிதலை உணராமல் பல சமயங்களில்நாம் குறைபட்டுக் கொள்கிறோம். 

இதோ ஒரு சம்பவம்... 

ஒரு வயதான பாட்டி படுத்திருந்த திண்ணையில் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள்அவரது பேத்தி. திடீரென வானில் மேகம் சூழ்ந்து, மழை கொட்டத் தொடங்கியது. 

இதைக்கண்ட பாட்டி, பேத்தியிடம், அடியே, எவ்வளவு தண்ணீர் வீணாய்ப் போகிறது. அண்டாவை முற்றத்தில் கொண்டு வந்து வச்சு மழைத் தண்ணீரை நிரப்புடி என் ராசாத்தி....” என்றாள். "போ பாட்டி, நான் மாட்டேன் என மறுத்தாள் பேத்தி, 

அடியே, அடுக்களையில் இருக்கிற பாத்திரத்தை அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வைக்கிறது ஒரு பெரிய வேலையா? இதைக் கூட செய்யமாட்டாயா? போ, போய் அந்த அண்டாவைக் கொண்டு வந்து அப்படியே வை...என அதட்டி உத்தரவிட்டாள் பாட்டி... 

வெறுப்பாய் ஓடி, பாட்டி சொன்னதைச் செய்துவிட்டுத் திரும்பினாள் பேத்தி. அரைமணி நேரம் மழை சோ வெனக் கொட்டித் தீர்த்தது. 

இந்நேரம் அண்டா நிரம்பி இருக்கும் என ஆனந்தமடைந்த பாட்டி, திண்ணையை விட்டு எழுந்து முற்றத்துக்குப் போனாள். பகீர் என்று ஆனது பாட்டிக்கு... ஆம். அண்டாவில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை...” 


அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வை என்று பாட்டி சொன்னதை, வேதவாக்காக எடுத்துக் கொண்டு, கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த அண்டாவை கவிழ்த்த வண்ணமே கொண்டு வந்து மழையில்வைத்துவிட்டாள் பேத்தி. 

மழை என்னவோ வஞ்சனை இல்லாமல் தான் பெய்தது. ஆனால், பாத்திரம்தான் கவிழ்ந்து கொண்டு தண்ணீரை ஏற்க மறுத்துவிட்டது.

கடவுளின் அருளும், அப்படித்தான் ! இயற்கைப் பேராற்றலாக வஞ்சனையின்றி அது பொதுவாகவே அனைவருக்கும் கொட்டுகிறது. என்ன செய்வது ! கவிழ்த்து வைத்தவர்களின் மனங்கள் தான் அதில் ஒரு துளி கூட, சொட்டு கூட ஏந்துவதில்லை . திறந்த மனத்துடன் பிரபஞ்சத்துடன் இயற்கையுடன் தொடர்பு வைத்துக் கொண்டால் பஞ்ச பூதங்களும் நமக்குச் சாதகமாகவே இருக்கும். பணிவிடை செய்யும்... இதை அறிந்தவர்கள் உணரலாம். நம் மனங்களைத் திறந்து இறையாற்றலைப் பெற்று நலமுடன், வளம் பெற்றுநீடு வாழ்வோம்! 
(தொடரும்)

Post a Comment

0 Comments