Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-58


குறள் 722
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

மருமவன.. ஒருத்தன் நல்ல படிச்ச மேதாவியா இருக்கலாம். மெத்த படிச்சவங்க இருக்க அவை யில, அவங்க மனசுல நல்ல பதியுதமாதிரி, எடுத்துச் சொல்லணும். அப்படி இருந்துட்டாம்னா படிச்சவங்க எல்லாருக்கிடையிலும் அவந்தான் ஒசத்தியானவன் மருமவன.  

குறள் 725
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு

மாப்ள.. படிச்சவொ ரொம்ப இருக்க அரங்கத்துல பேசும் போது, எதிர்ல இருக்கவொ நெறைய கேள்வில்லாம் கேப்பாவொ. அதுக்குல்லாம் பயப்படவே கூடாது. ஒண்ணொண்ணுக்கும் சரியான வெளக்கம் கொடுக்கணும். இதையெல்லாம் எதிர்பாத்து மொதல்லியே எல்லாத்தியும் பத்தி நல்ல படிச்சு தெரிஞ்சிருக்கணும் மாப்ள. 

குறள் 726 
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

இந்த நோஞ்சாம் பயலுவொ இருக்கானுவொள்ளா. அவனுவொ கையில வாள் இருந்துச்சுன்னா, அந்த வாளால எந்த பயனாவது உண்டா மருமவன.?
அது மாதிரிதான் . பெரிய பெரிய அறிவாளிங்க இருக்க அவையில பேசுததுக்கு ஒருத்தன் அஞ்சுனாம்னா, அவம் படிச்ச படிப்புக்கு எந்த பயனும் கிடையாது மருமவன. 



குறள் 727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.

தம்பி... ஒருத்தன் என்னதான் நெறைய படிச்சிருந்தாலும், கூட்டத்துல பேசுததுக்கு  நடுங்குனாம்னா, அவன் படிச்ச படிப்பு இருக்கே அது எது மாதிரி தெரியுமா? 
போர்க் களத்துல பயந்து சாகுத ஒரு பேடி கையில இருக்க கூர்மையான வாள் மாதிரி தான் தம்பிடி பயன் இல்லாதது தம்பி.. 

குறள் 728
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.

மாப்ள.. மெத்த படிச்சவங்க இருக்க கூட்டத்துல, அவங்க மனசுல நிய்க்கமாதிரி பேசத் தெரிஞ்சிருக்கணும். அப்பிடி பேசத் தெரியலைன்னு வச்சுக்கோயேன், என்னதான் நெறைய படிச்சிருந்தாலும் அவன் ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாதவன் தான் மாப்ள. 

குறள் 729
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.

ஒருத்தன் நெறைய படிச்சிருக்கலாம். ஆனா பெரிய பெரிய ஆளுங்க இருக்க கூட்டத்துல பேச பயப்பட்டாம்னா, அவன் படிக்காத ஆளுங்களை விட மோசமானவன். 


Post a Comment

0 Comments