Ticker

6/recent/ticker-posts

சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-23


உனக்கு நிகர் நீயே!
உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு . ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே! எல்லையற்ற எதிர்காலம் உனக்காக உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. 

உன்னுடைய ஒவ்வொரு சொல்லும், செயலும், சிந்தனையும் அதற்கு ஏற்ற பலனைத் தரும் என்பதை நீ எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனையுடன் வாழ்வியல் சிந்தனை மலர்கிறது... உண்மைதான். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி 1 மக்களின் மனங்களில் நிறைந்தவர் யார்? எனும் தற்காலக் கவிஞனின் கவிதை வரிகள் இங்கு நிழலாடுகின்றது. ஆம்... எத்தனையோ ஞானிகள், துறவிகள், மகான்கள், வாழ்ந்த பூமியிது. 

அவர்களைநினைவுகூறும்போது... இதோ வள்ளுவர் கூற்று...

" நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்" (குறள்-28) என்பதன்மூலம்.
ஒழுக்கமுடைய ஞானிகள், மகான்கள், துறவியரின் வாய்ச்சொற்கள் அவர்களது பெருமையைக் காட்டும் மந்திரச் சொற்களாகும் என்று கூறுகிறார். 

உண்மை தான்... இல்லறத்தில் வாழும் மகான்களே 1 இந்த பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை ஞானிகளும், மகான்களும், யோகிகளும், அவதார புருஷர்களும் குறைவில்லாமல் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

ஆனால், நாம் தான் அவர்களைத் தவறவிட்டுக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் நாம் உணர்வதற்கு ஒரு வழிகாட்டியாகவே இருக்கிறார்கள். நாம் உணர்வதற்கே 1 நமக்கு உணர்த்துவதற்கே காலமெல்லாம் வாழ்கிறார்கள்...

அவர்கள் எப்பொழுதும் தன்னை வணங்கவேண்டும் என்றோ, தான் சொன்னதை அப்படியே திருப்பிச்சொல்லுங்கள் அப்போது தான் மோட்சம் கிடைக்கும் என்றோ ஒருபோதும்சொன்னது இல்லை.

அவர்கள் வந்த வேலையை அவர்கள் செய்தார்கள். ஆனால், நீங்கள் தான் அவர்களை வணங்கவும், அவர்கள் கூறியதைத் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டும், அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இறக்கிவிட முடியாமல் உங்களைத் தொலைத்துவிட்டீர்கள். உங்களின் இந்த பைத்தியக்காரத்தனத்தை அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை.

நாம் இப்படித்தான் செய்வோம் என்பதைத் தெரிந்துதான், தான் சொல்வது தான் பின்பற்றப்பட வேண்டும் ; தன்னைப் பின்பற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து தன்னை முழுமையாக மறைத்துக் கொண்ட மகான்தான் நபிகள் நாயகம்... நம் வள்ளலாரும் இதைத்தான் கூறினார். 

இயேசுவும், புத்தரும் கூட இதைத்தான்கூறினார்கள்.

ஞானிகள், யோகிகள், மகான்களுக்கும் நமக்கும் ஒரே வித்தியாசம்... அது என்னவென்றால் அவர்கள் தெளிந்தவர்கள் : விழித்துக் கொண்டார்கள். ஆனால் நாம் இன்னும் தெளிவின்றி, தூங்கிக் கொண்டு இருக்கிறோம்.அவ்வளவே!

நாமும் விழித்தே ஆகவேண்டும். அதை இப்போதே செய்துவிடுவது நலம்! ஒருவரால் விழித்துக்கொள்ள முடியும் எனில், அது அனைவராலும் சாத்தியமானதே ! அதுவே இயற்கையின் நியதி. என்ன! நாம் விழித்துக் கொள்ள இன்னமும் சரியாக முயற்சிக்கவில்லை அவ்வளவே!

இயற்கையில் யாரும் சிறியவரோ, பெரியவரோ இல்லை, அனைவரும் புனிதர்களே! அனைவரும் தனிச்சிறப்பு வாய்ந்தவர்களே ! நம்மைப்போல் வேறொருவரை இயற்கை படைத்தது இல்லை ; இனிமேல் படைக்கப் போவதுமில்லை. இதை உணர்ந்தாலே நாம் எத்தனை தனித் தன்மையானவர் என்பதை அறிய முடியும். மகத்தான பிறவிகள் நாம் என்பதை அறியலாம். அக்கணமே நம்மிடம் ஒரு பரிமாற்றம் நிகழும். அப்போது நாம் விழித்துக் கொள்வோம். அப்போது நம் செயல்களும், பேச்சும், எழுத்தும் நம் சுயத்தில் இருந்துவருவதை உணரலாம்.நமக்கு நிகர் நாமே!என்பதை உணரலாம்.

இயற்கையை உணர்ந்து ஒழுக்கநெறி நின்று நலம் பெற்று நீடு வாழ்வோம்!
(தொடரும்)

Post a Comment

0 Comments