குறள் 730
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
மாப்ள.. மேடையில பேசும்போது, ஒருத்தன் தான் படிச்சு தெரிஞ்சதையெல்லாம், கேட்கவங்க ரசிக்கும் படி பேசணும். இது தெரியாம கூட்டத்தை பாத்து நடுங்குனாம்னா, அவன் உசுரோடு இருந்தாலும், செத்த சவம் மாதிரிதான் மாப்ள..
குறள் 736
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.
மாப்ள... எந்த வகையான கெடுதல்களையும் அறியாத நாடா இருக்கணும். அப்படியே கெடுதல் வந்தாலும், அதை சரி செய்யுத அளவுக்கு, நல்ல வளமா இருக்க நாடா இருக்கணும். அது தான் மாப்ள மிகச் சிறந்த நாடு.
குறள் 741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
ஏல மாப்ள.. இன்னொரு நாட்டையோ ஆளையோ தாக்கப் போனோ, நம்மோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம் டே. அதை மாதிரி தான் நம்ம நாட்டையோ, நம்மளையோ வேற யாரோ தாக்க வந்தாலும், நம்மோட பாதுகாப்பு முக்கியம் மாப்ள.
குறள் 743
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
மருமவன.. ஒரு அரண்மனை நல்ல பாதுகாப்பா இருக்கணும்னா அதைச் சுத்தி இருக்க கோட்டைச் சுவரு எப்படி இருக்கணும் தெரியுமா? மொதல்ல நல்ல ஒசரமா இருக்கணும். அடுத்தாப்ல நல்ல அகலமா இருக்கணும். பொறவு நல்ல உறுதியாஇருக்கணும். எல்லாத்துக்கும் மேல எதிராளிகளால அழிக்க முடியாத அமைப்புல கட்டி இருக்கணும் மருமவன.
குறள் 744
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
மாப்ளை.. ஒரு கோட்டை எப்பிடி இருக்கணுந் தெரியுமா? உள்ள இருக்க எடம் நல்ல பெருசா இருக்கணும். பாதுகாக்க வேண்டிய இடம் சிறுசா இருக்கணும். இதெல்லாத்தியும் பாத்துட்டு,,தாக்க வார பகைவர்கள் மலைச்சு போகணும் மாப்ள.
குறள் 745
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
மாப்ள.. ஒரு நல்ல கோட்டைங்கிறது
பகைவர்களால கைப்பற்ற முடியாததா இருக்கணும்.
எல்லாருக்கும் போதுமான உணவு இருப்பு இருக்கணும்.
பகைவர்களோடு போர் புரிய எளிதா இருக்கணும்.
இப்படில்லாம் இருந்தாத்தான் அது கோட்டை மாப்ள..
(தொடரும்)
Tags:
செந்தமிழ் இலக்கியம்