
உனக்கு ஞாபகம்
இருக்கப் போவதில்லை
திசுக்களின் அணுக்கள் தோறும்
ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்
தேனிக்களாய்
உன் நினைவுகள்...
தேன்வதையிலே
துளித்துளியாய் சேமித்த
ஓராயிரம்
ஞாபகத் தேன்துளிகள்...
கணங்கள் எல்லாம்
கருமிபோல சேமித்து
கண்கள் போல பொத்திப்
பொத்திக் காத்து
உன் ஒவ்வொரு அசைவிற்கும்
உணர்வின் இடுக்குகளில்
ஆலாபனை நெய்து
வானம் தாண்டிப்பாய்ந்து
அங்கும் உன்னையே சேர்ந்து
மேகத்துணுக்குகளில் இழைந்து...
மழையெனவே பொங்கி....
ஒன்றுமே எனக்கு
மறக்கப்போவதில்லை
மூளை இழையங்களில்
ஒன்றித்துக்
கருக்கொண்ட நினைவுகள்
மௌனங்களெனும்
திராட்சைக் கனிகளாக
இன்னும் பல்கிப் பெருகிக் கொண்டே...
வாழ்வில் ஏதோ ஒன்று
எனக்குள் உன்னை
ஞாபகப்படுத்த
ஊற்றாய்க் கிளம்பிக்
காற்றாய்க் காதோரம்
கிசுகிசுக்க...
ஒவ்வொரு ஞாபகப்படுத்தலிலும்
கண்மூடிக் கிறங்கி
கிறுக்கி
மனதோரம்
இசைந்து இசைத்துக்
கசிந்து வடியும்
மௌன திராட்சை ரசம்
என்னுள்ளே
அதுவே கருக்கலைப்பாகிக்
குருதிச்சிவப்பாகும்
ஆதிப்புழலில் உள்நுழைந்த
நுண்ணிய எண்ணமாய்
நூலாகிப் பின்
போர்த்தும் ஆடையானேன்
பூவாகி உன்
தோள்களிலே மாலையானேன்
நிசப்தமான நடுநிசியில்
முடிவிலி நேசம் தைக்கும்
தனிமையில் உலகை
வியாபித்த இருளாய்...
பிரபஞ்சம் துரத்தும்
பகலும் இரவுமாய்
நான் இருப்பேன்
நீ அறிய வாய்ப்பில்லை
அன்பே
இப்போதும் எப்போதும்
மௌன திராட்சை ரசம்
வழிந்து கொண்டே....
Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை



0 Comments