புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா- 133

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா- 133


தனது மேசை மீதிருந்த தொலைபேசியின் ரிசீவரை தூக்கிய இர்வின், தனது குறிப்பிலிருந்து எடுத்த சில இலக்கங்களை, சுழற்றினான்! பலமுறை சுழற்றியபோதிலும் பெருனரிடத்தில் தொடர்பு அடைவதாயில்லை. தொலைபேசி பரிமாற்ற நிலையத்திலிருந்து “தங்களது வாடிக்கையாளரை அடைய முடியவில்லை” என்பதாகவே பதில் வந்தது கொண்டிருந்தது.

அவன் தனது கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டான். மணி ஐந்தாவதற்கு இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன.  இனிமேல் முயற்சிப்பதில் பயனில்லை என்று நினைத்தவன், இறுதியாக ஒரு முறை... ஒரே ஒரு முறை முயற்சித்துப் பார்த்துவிடலாமென்று நினைத்தவனாக மறுபடி எண்களைச் சுழற்றலானான்.

அழைப்பு மணி தொடர்பாகி, அடுத்த முனையில் மணியடித்தபோதிலும், எவரும் ரிசீவரை எடுப்பதாக இல்லை.

தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்த மணி திடீரென நின்றதும், அங்கிருந்து “ஹலோ” என்ற வசீகரமான குரல் அவனது காதுக்குள் நாதமெழுப்பியது!

அதே குரல்.... சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு அநாமேதயமாகத் தகவல் தந்த அந்தக் குரல்...

“ஹலோ... நான் இர்வின்... அமேசனிலிருந்து பேசுகின்றேன்” என்றான் அவன்.

“ஆம்... நான் நுண்ணுயிர் மையத்திலிருந்து பேசுகின்றேன்... உங்களுக்கு எம்மால் எண்ண ஆக வேண்டும்?” மிகவும் பணிவாக அந்தக் குரலுக்குரியவள் கேட்டாள்.

“சில வாரங்களுக்கு முன் அமேசான் சஞ்சிகையில் பிரசுரமாயிருந்த அட்டைப்படச் செய்தி பற்றி உங்களிடமிருந்து அழைப்பு வந்து, திடீரென இணைப்பு அறுந்துவிட்டது. நீங்கள் என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும். உங்களது தொலைபேசி இலக்கத்தை எமது இணைப்பு மையத்திலிருந்து பெற்றுக்கொண்டேன். அந்த நபர்கள் மூவரில்  யாராவது ஒருவரிடம் பேசுவதற்கு ஒழுங்கு பண்ண முடியுமா..?” இர்வின் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான்.

“அவர்கள் பயிற்சி முடிந்து தமது நாட்டுக்கே போய் விட்டனர்.. அங்குள்ள ஆய்வு மையத்துடன் தொடர்பு கொண்டால் அவர்களை அணுகலாம்” என்று கூறிய அவள், அவர்கள் எந்த நாட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுவிட்டு தொலைபேசியைத் துண்டித்து விட்டாள்.
அந்தக் குள்ளர்கள் திருடிச் சென்ற புராதன நூலின் நான்கு பக்கங்களையும் எப்படியாவது திரும்பப் பெறவேண்டுமென்ற திடமான நம்பிக்கையைத் தனக்குள் கொண்ட இர்வின், அடுத்த கட்ட செயற்திட்டத்தை மேற்கொள்ள ஒரு எண்ணத்தைத் தனக்குள் கொண்டவனாக ... தனது அலுவலகத்திலிருந்து வெளியேற ஆயத்தமானான்.
(தொடரும்)


 

Post a Comment

Previous Post Next Post