புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -134

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -134


நடுசாமம்! வலமைபோல்  புரோகோனிஷ் கிராமம்  நல்ல உறக்கத்திலிருந்தது!

அருகிலிருந்து வந்த சில நாய்களின் கதறல்களும், தூரத்திலிருந்து கேட்ட நரிகளில் ஊலைச் சத்தங்களும்  கிராமத்தவர்களின் நல்லுறக்கத்திற்குப் பங்கமிழைத்தன.

இடையில் தூக்கமறுந்த ரெங்க்மாவின் தந்தைக்கு,  செரோக்கி தன்னிடம் காட்டிய தன்  வாழ்நாளில் எப்போதுமே கண்டிராத அந்தத் தாள்கள்தான் நினைவில் வந்து போயின.

அவை தன் கைக்கு வந்ததும், அதனைத் தான் ஸ்பரிஸம் செய்தபோது, அதில் அவர் கண்ட  மென்மைத்தன்மையும், அதிலிருந்து வந்த அபூர்வமான வாசனையும்  இப்போது கூட அவருக்குள் அதிர்வலை செய்து கொண்டிருந்தது!

செரோக்கி அதனை வைத்து என்னதான் செய்யப்போகின்றான் என்பதில்  அவருக்குள் புதிர் அலையொன்று அடித்துக்கொண்டிருந்தது.

தூக்கம் வாரா நிலையில் விரிப்பில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்த அவர், எழுந்து உட்கார்ந்து கொண்டார்.

அப்பொழுதுதான் சூரியன், ஓங்கி வளர்ந்திருந்த மரங்களுக்கூடாக மெதுமெதுவாக எட்டிவருவது  சாளரத்தினூடே தெரிந்தது.

இப்போது விடிந்துவிட்டது! அவர் இனித் தூங்கப்போவதில்லை!

விரிப்புவிட்டெழுந்த அவர், தன் ஜாகையின் பின் பக்கம் சென்றபோது, அங்கு அடுப்பிலிருந்து வந்த நெருப்பு ஜுவாலை விட்டு எரிந்து, தும்மேசையின் மேல் பரப்பி வைக்கப்பட்டிருந்த மானிறைச்சியை வேகச் செய்து கொண்டிருந்தது!

காலாகாலமாக ஜாகையே தஞ்சமெனக் கிடக்கும் மானிறப்பூனைக் குட்டி, தும்மேசையிலிருந்தும்  சற்று ஒதுங்கியிருந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தது!

இது “ஹந்துந்திவியா!” - பூனைக் குடும்பத்தில் சிறிய இனமாகும். ஈரவலய மற்றும் உலர்வலயப் பகுதி  வனங்களில்மிக அரிதாகக் காணப்படும் இவ்வகையான பூனை இனத்தைக் கிராமத்துச் சூழலில் எவரும் இலகுவில் கண்டு கொள்ளமுடியாது!

அவர் எப்போதோ ஒருநாள்  வேட்டைக்குச் சென்றபோது வனத்திலிருந்து தன் மகளுக்காகப் பிடித்துவந்த பூனைக்குட்டி இது.

ரெங்க்மா, செரோக்கியைச் சந்திப்பதற்கு முன்னர்,   தனது சிறுபிறாயத்தில் அதிகமான நேரத்தை ஹந்துந்திவியாவுடனேயே கழித்தாள்.


தன் மகள் இப்பொழுது ஹந்துந்திவியாவை முற்று முழுதாக மறந்தேவிட்டாள்!

அதனை அவர் தூக்கி மெதுவாக அதன் தலையைத் தடவிக்கொடுத்தார்!
(தொடரும்)



 

Post a Comment

Previous Post Next Post