புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -136

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -136


புரோகோனிஷ் கிராமத்தின் பழங்குடி வாலிபர்களால்  ஆரம்பிக்கப்பட்ட வருட இறுதிநாள் கொண்டாட்ட ஊர்வலம், சுற்றியுள்ள ஊர்களுக்கெல்லாம் சென்று, அடுத்த நாள் களியாட்டத்திடலில் நடக்கப்போகின்ற தீ மூட்டு விழாவுக்கான  அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர், ஒவ்வொருவராகத் தத்தமது ஜாகைகளுக்குச் செல்லலாயினர்.

வாயும் வயிறுமாக இருக்கும் ரெங்மாவைக் கவனிப்பான்வேண்டி செரோக்கியும் இடையில் தன் மனைநோக்கிச் சென்றுவிட்டான்.

ஊர்வலத்தில் இறுதிவரை சென்ற மங்கு, அலவத்தையைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரிடத்தில் சோகம் கலந்த நிலையில் சிலர் கூடி நின்றிருப்பதைக் கண்டான்.

விசாரித்துப் பார்த்ததில் நீண்டகாலமாக  குழிக்குள் வாழ்ந்துவந்த அறுகிவரும்  ஓரினத்தின் இறுதி மனிதன் இறந்துபோயுள்ளதையும், சடலத்தைத் தகனம் பண்ண, அந்த இனம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த குழுவொன்று  எடுத்துச் செல்லப்போகும் செய்தியையும் அறிந்துகொண்டான்.

ஊர்வலத்திலிருந்தும் விரைந்து  கழன்ற மங்கு, செரோக்கியின் மனை நோக்கி ஓடினான்!

வேர்க்க விறுவிறுக்க  ஒடிவந்து, தன் மனைக்கருகில் நின்று குரல் கொடுத்த மங்குவைக் கண்டதும் செரோக்கி திடுக்கிட்டான்!

மங்குவின்  குரலிலிருந்த பதட்டம், செரோக்கியையும் ஒரு கணம்  பதற வைத்துவிட்டது.  மங்கு சொன்ன செய்தி செரோக்கிக்கு மேலும்  பேரதிர்ச்சி தருவதாக இருந்தது.

தாமதிக்காமல் இருவரும் சடலம் இருக்கும் இடம்வரை   ஓட்டமும் நடையுமாகச் சென்றனர்.

ஆதிக்குடிகளின்  இனமொன்றின் கடைசி மனிதர் அவர்; பயந்த சுபாவம் கொண்டவர்; காலாகாலமாக வனத்திலுள்ள சகல  இனத்தவரிடமுமிருந்தும் ஒதுங்கி, ஆழமானதோர் குழிக்குள் நீண்டகாலமாக, யாருடைய உதவிகளையும் எதிர்பாராமல்   வாழ்ந்து கொண்டிருந்தவர்; அவ்வப்போது  எவர் கண்ணிலும் படாமல் குழியைவிட்டும் வெளியே வரும் அவர், தனது உணவுத் தேவைக்கானவற்றை மட்டும் விரைந்து தேடியெடுத்துக் கொண்டு, மறுபடி குழிக்குள்ளேயே சென்றுவிடுவது அவரின் நீண்டகால பழக்கமாக இருந்து வந்துள்ளது.

அந்த மனிதர் இப்போது  அதே குழிக்குள் இறந்து கிடக்கின்றார்!

அந்த மனிதர் பற்றிய ஆய்வை மேற்கொண்டுவந்த குழு, சடலத்தைத் 'தகனம்' செய்வதற்காக, கறுப்புப்பொதிக்குள் போட்டுவைத்துவிட்டு, பிணப்பெட்டி எடுத்துவரச் சென்றிருப்பதாக, அங்கு கூடிநின்றவர்கள் பேசிக் கொண்டிருந்ததை  கேட்ட மங்கு பதட்டமடைந்தான்.

ஆதிக்குடிகளின் வழக்காற்றுப்படி இறந்தவர்கள் ஒருபோதும் 'தகனம்' செய்யப்படுவதில்லை. மண்ணில் பிறந்தவர்கள் மண்ணுக்குள்ளேயே அடக்கம் பெறவேண்டுமென்பது அவர்களின்  எண்ணமாகும்!

காததூரம் நடந்துவந்த களைப்பு, செரோக்கியையும், மங்குவையும்  அருகிலிருந்த மரவேர்  ஒன்றில் அமரவைத்தது!

சடலத்தை அந்தக் குழுவினர் கொண்டு செல்லாமல் தடுப்பது எப்படி? நண்பர்கள் இருவரும் நீண்டநேரமாக யோசிக்கலாயினர்.

நல்லாத்தோர் எண்ணம் செரோக்கியின்  மனதில் உதித்ததும், மங்குவை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த வனத்துக்குள் சென்றான் செரோக்கி.

உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களில் ஏறி பட்டை கலட்டி எடுத்துக் கொண்டு, வனத்துக்குள்  மேலும் சிறிது தூரம் உட்சென்று எதையோ தேடலானான்.

செரோக்கி எதைத்தேடுகின்றான் என்பது மங்குவுக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. இறந்துகிடந்த மிருகமொன்றின் அருகில் சென்றதும்தான் மங்குவுக்கு முற்று முழுவதும் புரிந்தது. அந்த செத்தமிருகத்தைப் பட்டையில் சுற்றி எடுத்து கொண்ட அவர்கள், சடலம் இருக்கும் இடத்திற்கு விரைந்து வந்தனர்!

கறுப்புப்பொதிக்குள் திணிக்கப்பட்டிருந்த சடலத்தை மெதுமெதுவாக வெளியில் எடுத்துவிட்டு, தாம் கொண்டுவந்த செத்த மிருகத்தை அதற்குள் திணித்துவிட்டு, சடலத்தைப் பட்டையில் சுற்றிக்கொண்டு களியாட்டத்திடலுக்கு வந்த அவர்கள், அங்கு அதனைப் பாதுகாப்பாக மறைத்து வைத்ததும்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்!
(தொடரும்)





 


Post a Comment

Previous Post Next Post