முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருமணம் செய்வதற்கான ஆகக் குறைந்த வயதாக 18 வயதை நிர்ணயம் செய்வதால் சமூகத்தில் இளவயதுத் திருமணத்தை இல்லாதாக்க முடியுமா?

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருமணம் செய்வதற்கான ஆகக் குறைந்த வயதாக 18 வயதை நிர்ணயம் செய்வதால் சமூகத்தில் இளவயதுத் திருமணத்தை இல்லாதாக்க முடியுமா?


முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் ஆளப்படுகின்ற முஸ்லிம் சமூகத்தில் திருமணத்திற்கான வயதெல்லையை 18 ஆக நிர்ணயித்தல் தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

சமூகத்தில் இளவயதுத் திருமணங்களை இல்லாதொழித்தல் என்ற தலைப்பின் கீழ் இந்த விவாதம் இடம்பெறுவதைக் காணலாம். நாம் அனைவரும் எமது சமூகத்தில் இளவயதுத் திருமணங்கள் நடைபெறக்கூடாது என்ற விடயத்தில் கருத்தொருமித்தவர்களாக இருப்பதனால் இந்த விவாதம் சரியானதே என்று எமக்கு தோன்றலாம். ஆனால் உண்மையில் சட்டத்தில் 18 வயதைத் திருமணம் செய்வதற்கான ஆகக் குறைந்த வயதாக நிர்ணயித்தல் என்பது எமது சமூகத்தில் இளவயது திருமணங்களை இல்லாமல் ஆக்குமா என்ற விடயத்தினை விஞ்ஞானபூர்வ ஆதாரங்களை முன் நிறுத்திப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. 

இலங்கையில் பல்வேறு சட்டங்களில் சிறுவர்களினுடைய வயது பலவாறாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

உதாரணமாகத் தண்டனைச் சட்டக் கோவையில் ஒரு பெண் பாலியல் ரீதியான உறவினை  ஏற்படுத்துவதற்குச் சம்மதம் வழங்கக்கூடிய வயதாக 16 வயது அடையாளப்படுத்தப்படுகின்றது. பொதுச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கான வயது 18 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொழில் செய்வதற்கான அல்லது வேலையில் அமர்த்தப்படுவதற்கான ஆகக் குறைந்த வயதாக 14 வயது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் எமக்கு வலியுறுத்துவது, பொதுவான ஒரு வயதைச் சிறுவர்களின் வயது என நிர்ணயிக்க முடியாது என்பதாகும். இந்தப் புரிதலின் அடிப்படையில் தான் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருமண வயதை நிர்ணயித்தல் என்பது தொடர்பில் எமது அணுகுமுறை இருத்தல் வேண்டும்.

கடைசியாக வெளியிடப்பட்ட 2012 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பு அறிக்கையில் 15 வயதிற்கு குறைவான திருமணங்கள் 3204 இடம் பெற்றுள்ளன. அவற்றில் 471 திருமணங்கள் முஸ்லிம் சமூகத்தில் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று 15 வயதிற்கும் 19 வயதுக்கும் இடையான திருமணங்கள் 87,633 இடம் பெற்றுள்ளன அதில் அண்ணளவாக 12000 திருமணங்கள் முஸ்லிம் சமூகத்தில் நடைபெற்றுள்ளன. 

இங்கு நாம் கவனிக்க வேண்டியது யாதெனில், பொதுச்சட்டத்திற்குத் திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதில்லை 18 என்று நிர்ணயிக்கப்பட்ட பின்னரே முஸ்லிம் சமூகம் தவிர்ந்த ஏனைய சமூகத்தில் இப்பெருமளவான இளவயதுத் திருமணங்கள் பதிவாகியுள்ளன. இந்தப் புள்ளிவிபரமானது திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லையை 18 எனச் சட்டத்தினால் வரையறுப்பதன் மூலம் இளவயதுத் திருமணங்களைத் தடுக்க முடியாது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிறுவுகின்றது. 

இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவைக்கு 1995 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 22 ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்தின் மூலம் பெண் ஒருவர் பாலியல் ரீதியான உறவினை மேற்கொள்ளுவதற்குச் சம்மதம் தெரிவிக்கக் கூடிய ஆகக் குறைந்த வயதெல்லையாக 16 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் ஆளப்படுகின்ற முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற இஸ்லாம் மார்க்கத்தில் திருமண பந்தத்திற்கு வெளியே உறவு கொள்ளுதல் முற்றாகத்தடுக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். எனவே எமது சட்டத்தில் பாலியல் உறவினை ஏற்படுத்த சம்மதம் தெரிவிக்கிக்கூடிய வயது திருமண வயதாதல் வேண்டும்.

அண்மையில் பேராதெனிய பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையின் படி இளவயதுக் கர்ப்பம் தரித்தல் என்பது முஸ்லிம் அல்லாத சமூகத்திலேயே அதிகமாகக் காணப்படுகின்றது எனவும், அங்கு 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்ய அனுமதி இல்லை என்பதால் அவ்வாறு பிறக்கின்ற பிள்ளைகள் அநாதை இல்லங்களில் சேர்க்கப்படுகின்ற பரிதாப நிலை காணப்படுகின்றது எனவும் குறிப்பிடுகின்றனர். இந்தத் துர்பாக்கிய நிலைமைக்குப் பொதுச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கான ஆகக் குறைந்த வயதாக 18வயது நிர்ணயிக்கப்பட்டிருப்பது மிகப் பிரதானமான காரணி என்பதை எம்மால் மறுக்க முடியாது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின் படி அங்கத்துவ நாடுகள் தங்களது நாட்டில் திருமணம் செய்வதற்கான ஆகக் குறைந்த வயதில்லை 15 விட குறைவாக இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றுதான் குறிப்பிடபடுகின்றது.

உலகின் பல நாடுகளில் 18 வயதைத் திருமண வயதாக நிர்ணயித்துள்ளனர் அந்தத் தரத்தை எமது சட்டத்திலும் உள்வாங்க வேண்டும் அல்லாது போனால் நாம் பின்னடைந்த சமூகமாக மாறிவிடுவோம் என்று பலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் சரியானதா?

வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட திருமணம் செய்வதற்கான ஆகக் குறைந்த வயதெல்லை 18 என்பது, திறத்தவர்கள் தாமாகத் தமது திருமணத்தைச் செய்து கொள்வதற்கான வயது ஆகும். ஆனால் அந்த நாடுகளில் கூட விசேட சந்தர்ப்பங்களில் அவசியம் ஏற்படுகின்ற போது பெற்றோருடைய சம்மதத்துடனும் நீதிமன்றத்தின் சம்மதத்துடனும் 18 வயதுக்கு முன்னரான திருமணங்கள் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இஸ்லாத்தில் திருமணம் ஒன்றின் போது மணமகளுடைய 'வலி'யின் (பாதுகாவலரின்) சம்மதம் கட்டாயமான ஒன்றாக இருக்கின்றது. எனவே திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதில்லை 18 என்ற வாதம் முஸ்லிம்களுக்கு ஏற்புடையதல்ல.

18 வயதைத் திருமணம் செய்வதற்கான ஆகக் குறைந்த வயதாக நிர்ணயித்தல் என்பது இளவயதுத் திருமணங்களை இல்லாமலாக்குவதற்கான வெற்றிகரமான ஒரு பொறிமுறையல்ல. பொதுச்சட்டத்தால் ஆளப்படுகின்ற மக்கள் வாழும் சமூகத்தில் நடக்கின்ற 18 வயதுக்கு குறைவானவர்களுக்கான திருமணங்களின் புள்ளி விபரங்கள் இதற்குச் சான்று.

திருமணம் செய்வதற்கு உரிய ஆகக் குறைந்த வயதெல்லையாக 18 வயதை நிர்ணயிப்பதால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் எவை எனச் சில உதாரணங்களோடு ஆராய்வோம்.

முதலாவதாக; 18 வயதிற்கு குறைவான ஒரு பெண் ஒரு ஆணுடன் உறவு கொண்டு கர்ப்பமாகிவிட்டால் அவளுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வு, குறித்த நபரைத் திருமணம் செய்து வைப்பதாகும். சட்டம் திருமணம் செய்வதற்கான ஆகக் குறைந்த வயதாக 18 ஐ நிர்ணயம் செய்யுமாயின் அத்திருமணம் சாத்தியமற்றதாகி போகும். இங்கு பாதிப்புக்கு உள்ளாக போபவர்கள் குறித்த பெண்ணும் அவளுக்கு பிறக்கப் போகும் குழந்தையும் ஆகும். பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகின்ற போது சம்பந்தப்பட்ட ஆண் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள மறுப்பின் குறித்த நபரிடம் இருந்து சொத்துரிமை உட்பட எந்தத் திருமணம் சார் உரிமைகளையும் அவர்கள் பெற்றுக் கொள்ள மாட்டார்கள்.  இவ்வாறான சந்தர்ப்பத்தில் பிறக்கின்ற குழந்தைகள் வாரிசுரிமைச் சட்டம், பிறப்பு இறப்பினைப் பதிவு செய்யும் சட்டம், தாபரிப்புச் சட்டம் என்பவற்றின் கீழ் ஏனைய குழந்தைகள் போன்று சமமாக மதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலைமையானது எமது நாட்டின் அரசியலமைப்பின் உறுப்புரை 12 இனால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும். அதே போன்று CRC, CEDAW போன்றவற்றின் நிபந்தனைகளுக்கும் முரணானதாகும். 

இரண்டாவதாக, 18 வயதிற்கு குறைவான ஒரு பெண் ஓர் இயற்கை அனர்த்தம் காரணமாக அல்லது ஒரு விபத்தின் காரணமாக அநாதையாக்கப்படுகின்ற போது அவளுடைய பாதுகாப்பிற்காகவும் அவளுக்கு உணர்வு ரீதியான பக்க பலமாக அமைவதற்காகவும் இருக்கின்ற ஒரு சிறப்பான தேர்வு திருமணம் ஆகும். சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட காலத்தில் இப்படியாகப் பல சம்பவங்கள் கையாளப்பட்டன. சட்டத்தில் 18 வயதைத் திருமண வயதெல்லையாக நிர்ணயிப்பதால் இவ்வாறான பெண் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

மூன்றாவதாக; வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற விதவைத் தாய்மார்களின் பராமரிப்பில் இருக்கின்ற 18 வயதுக்கு குறைவான பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து வைத்தல் என்பது, அந்தக் குடும்பத்திற்கு பாதுகாப்பையும் பொருளாதாரப் பலத்தையும் வழங்கக்கூடியதாகவும் அந்த விதவைத் தாயின் சுமையைக் குறைக்க கூடிய ஒரு பொறிமுறையாகவும் இருக்கின்றது. இவ்வாறான குடும்பங்களில் அதிகமான பெண் பிள்ளைகள் தங்களது பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியவர்களாக இருப்பதை நாங்கள் காண்கின்றோம். இங்கு திருமணம் என்பது ஓர் அவசியமானதும் ஆரோக்கியமானதுமான தேர்வாக அமைகின்றது. இங்கு நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது யாதெனில் எமது நாட்டில் இவ்வாறான நிலைமையில் வாழ்கின்ற குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய எந்த ஒரு சரியான திட்டங்களும் பொறிமுறைகளும் இல்லை என்பதாகும்.

எமது சமூகத்திலிருந்து இளவயதுத் திருமணங்களை இல்லாமலாக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தில் நாங்கள் அனைவரும் உடன்படுகின்றோம். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் சட்டத்தில் 18 வயதைத் திருமண வயதாக நிர்ணயிப்பது இதற்கு ஒரு தீர்வாக அமையப் போவதில்லை. மாறாகக் கல்வித் தரத்தை அதிகரித்தல், சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல் போன்றவையே இதனைச் சாத்தியமாக்கக் கூடிய பொறிமுறையாகும். சட்டப்படி 16 வயதினைத் திருமண வயதாக நிர்ணயிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்கக் கூடிய வலுவான அடிப்படைகள் காணப்படுகின்ற போதும் சர்வதேசரீதியாக அடையாளம் செய்யப்பட்டுள்ள 18 வயதைத் திருமணம் செய்யக் கூடிய ஆக குறைந்த வயதாக எமது சட்டத்திலும் உள்வாங்குவதற்கான தேவையை நாமும் கருத்திற் கொள்கிறோம். ஆனால் சட்டத்தில் திருமண வயது தொடர்பான பிரிவிற்கு, விசேட சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடியவாறான ஒரு விதிவிலக்கு வாசகமே எமது நியாயபூர்வமான கோரிக்கையாக உள்ளது. அதன் அவசியம் இங்கு விஞ்ஞானபூர்வமாக நிறுவப்பட்டுமுள்ளது.

ஆனாலும், எம்மில் சிலர் தங்களுடைய சில நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, பெண்கள் பாதுகாப்பு, சிறுவர்களின் உரிமைகள் என்ற பகட்டுக் கோஷங்களைச் செய்து எமது பெண்களையும் சிறுவர்களையும் மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிடக்கூடிய சட்டத்திருத்தங்களைச் செய்துக்கொள்ள அதிக பிரயத்தனப்படுகின்றனர். இதற்கு அவர்கள் கூறுகின்ற நியாயம் யாதெனில் சமூகத்தில் இளவயதுத் திருமணங்களின் அவசியம் இருப்பதை நாம் அறிவோம் ஆனால் அதனைச் சட்டத்தால் அங்கீகரிக்க முடியாது என்பதாகும். இது எப்படி இருக்கின்றது என்றால் "உனக்குப் பசிக்கிறது, உணவின் தேவை இருக்கிறது என்பதை நாம் அறிவோம் ஆனால் அதனை எமது சட்டம் இனங்கண்டு தீர்வைத்தர இடமளிக்க மாட்டோம்" என்று கூறுவதற்குச் சமனானது.  சட்டம் என்பது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்குத் தீர்வைத் தருவதாக அமைய வேண்டுமே அன்றி, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற கதையாய் அமைந்து விடக்கூடாது.


எனவே பொதுமக்களாகிய நாம் இந்த விடயத்தில் தெளிவுடையவராதல் வேண்டும் என்பதோடு எமது சமூகத்தின் நன்மை கருதி எமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவும் வேண்டும்.
சட்டத்தரணி ஷிபானா ஷரிபுத்தீன்


 

Post a Comment

Previous Post Next Post