திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 1

திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 1



கடவுள் வாழ்த்து -1

தமிழின் தொடக்கம் அகரம்
உலகின் தொடக்கம் இறைவன்

எழுத்தின் தொடக்கம் அகரந்தான்!
உலகின் தொடக்கம் இறைவன்தான்!

சான்றோர் வழியை வணங்கிடுவோம்
இல்லையேல் கற்றது வீணாகும்!

நினைக்க நினைக்க நிம்மதிதான்!
நீண்ட காலம் வாழ்ந்திடலாம்!

துன்பம் நம்மை நெருங்காது
தீவினை நம்மைச் சேராது!

ஆசை தன்னை அடக்கித்தான்
ஒழுக்கத் தோடு வாழ்ந்திடலாம்!

அவரடி பணிந்தால் போதுமே
கவலைகள் எல்லாம் நீங்குமே!

மறந்து போன மற்றவர்க்கோ
கவலைகள் நிலையாய் மாறிடுமே!

ஆசைக் கடலைக் கடப்பதற்கோ
அன்புத் தோணி சான்றோர்தான்!

சான்றோரை வணங்காத் தலைகளோ
இயங்காப் புலன்போல் பயனில்லை!

சான்றோர்  வழியில் நடந்தாலே
பிறவிக் கடலை நீந்தலாம்!

வான்சிறப்பு --2
மழை இல்லையேல் உயிரினம் இல்லை

வான்மழை செழிப்பைத் தருவதாலே
வான்மழை நமக்கு அமுதந்தான்!

உணவைச் சமைக்க உதவிடுமே!
தானும் உணவாய் மாறிடுமே!

மழையோ பெய்யத் தவறிவிட்டால்
உயிரினம் பசியால் துடித்திடுமே!

மழையின் அளவோ குறைந்துவிட்டால்
உழவுத் தொழிலும் குன்றிவிடும்!

வளமாய் வாழ்ந்தோர் வளமிழப்பார்!
மழையோ இங்கே பொழிந்துவிட்டால்
வளத்தை இழந்தோர் வளம்பெறுவார்!

மேகம் மழையைப் பொழியாமல்
வேக மாக நகர்ந்துவிட்டால்

பசும்புல் நுனிகள் தழைக்காது!
அலைகடல் இங்கே வற்றிவிடும்!

வாழ்க்கை எல்லாம் வறண்டுவிடும்!
உலகின் இயக்கம் நின்றுவிடும்!

பூசை திருவிழா நடக்காது!
தான தர்மம் நடக்காது!

மனிதம் இங்கே வளராது
ஒழுக்கப் பண்பு இருக்காது!

தண்ணீர் மட்டும் இல்லைö¯ன்றால்
யாருக்கும் இங்கே வாழ்வில்லை!
(தொடரும்)



 


Post a Comment

Previous Post Next Post