Ticker

6/recent/ticker-posts

சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-27

நெஞ்சுக்கு நீதி
ஜீவனுக்கு ஒளிதந்து மனத்துக்கு நிறைவைத் தரும் ஒருவாழ்க்கைத்தத்துவக் குறள். “மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை” (295 குறள்)


இதன் பொருள் : தன் மனம் அறியப் பொய் பேசாமல் தன் மனசாட்சி ஏற்கத் தக்க வகையில்
எவ்விடத்தும் எந்நிலையிலும் வாய்மையே பேசுபவன், அருந்தவமும், பெருங்கொடையும் உடையவர்களைவிட மேம்பட்டவன் ஆவான் என்பதாகும்.

இன்றைய மனித மனங்கள் பல்வேறு நிலைகளில் மாசடைந்து உள்ளன. பொருளுக்காக, பெண்ணுக்காக, பொன்னுக்காக, பணத்துக்காக எதையும் செய்யலாம் தவறில்லை என்னும்ஈனநிலைக்கு மனிதன் சென்று கொண்டிருக்கின்றானே இது சரியா? நம் வாழ்க்கை வழிகாட்டிகளான சான்றோர் பெருமக்கள் நமக்குக் கூறிச் சென்றவை பற்றி நாம் சிந்திக்கின்றோமா?

சிந்தனை சீர் பெற்றால் அல்லவா நாம் சீர்மிகு வல்லாளனை, வாலறிவனை,அருட்பெருஞ்சோதியை, இறையாற்றலைக் காணமுடியும்.

"மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்” என்று கூறுவதன் பொருள் நாம் உணர வேண்டாமா? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்ற வள்ளல் பெருமானின் கூற்றின் பொருள் நாம் உணர வேண்டாமா?... இந்நிலையில் தற்காலத்தில் வாழமுடியுமா? என்று யோசிக்கத் தோன்றுகிறதா? முடியும் என மனமிருந்தால்நிச்சயம் முடியும்.

இதோ ஒருசில உண்மைச் சான்றுகள். கந்த சுனாமியின் போது ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, பொருள் இழந்து, உயிரிழந்து வேதனையின் உச்சத்திற்குச் சென்ற போது, உயிரிழந்தோர் உறவினர்களுக்கும் நீரில் மூழ்கி காணாமல் போனவர்களுக்கும் உடனடி நிவாரணமாக ரூபாய் ஒரு லட்சம் பணம் வழங்கப்பட்டது. 

அதுபோல், நிவாரணப் பணம் வாங்கிய ஜெயப்பிரகாஷ் என்னும் பெரியவர் ஒருவர் ஆட்சித்தலைவரிடம் வந்தார். அவரிடம் சுனாமியில் காணாமல்போன என் மகன் திரும்பி வந்துவிட்டான்” ஆகவே நான் பெற்ற பணம் எனக்கு வேண்டாம். திருப்பித் தரவே வந்துள்ளான். பெற்றுக் கொள்ளுங்கள் என்று பணத்தைத் திருப்பித் தந்துவிட்டார்.

அது போலவே, வடநாட்டில் ஒரு ரயில்வே துப்புரவுப் பணியாளர் பகவான்தாஸ் என்பவர் ரயிலில் ஒரு பையைக் கண்டெடுத்தார். அதில் பணம் ரூ. 15 இலட்சம் இருந்தது. மனம் சஞ்சலம் அடையவில்லை . 

உடனடியாகக்காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதுபோல பலசான்றுகள் நமக்குத் தெரியாமல் நடந்துகொண்டுதான் உள்ளன. காரணம் உள்ளத்தில் சத்தியம் உள்ளது.

நாம் செய்திகளில் படிக்கிறோம் ; 350 கோடி பதுக்கி வைத்திருப்பவர்களும் உண்டு ; எங்கும் ஏய்ப்பு, கொலை, கொள்ளை, அநீதி, அநியாயம் நடந்து கொண்டு தான் உள்ளது. இதுவும் கடந்து சத்தியம் வாழ்ந்துகொண்டு தான் உள்ளது. இதற்காகத் தான் வள்ளுவர் மனசாட்சிப்படி வாழ்பவர்களை மனதார வாழ்த்தி மிகவும் உயர்த்திக் கூறுகிறார்.
இப்போது குறளை மீண்டும் படியுங்கள். வாழ்க்கைத் தத்துவம், நாம் காணும் மனிதர்கள், பழகும் மனிதர்கள் நிலை தெள்ளெனப்புரியும். குறள் வழி வாழ்ந்து வாழ்வில் தழைப்போம் ! நலம் பெற்று மனச்சாட்சியுடன் வாழ்வோம்.
(தொடரும்)


 

Post a Comment

1 Comments

  1. சிறப்பு... அருமையான பதிவுகள்... மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 👍💗💖

    ReplyDelete