திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 2

திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 2


நீத்தார் பெருமை -3

புலன்களை அடக்கு புகழின் சிகரம் நிச்சயம்

ஆசையை விட்டே ஒழுக்கமுடன்
வாழ்ந்தால் புகழும் நூல்கள்தான்!

இறந்தவர் எண்ணிக்கை அளவிடல் அரிது!
துறந்தவர் பெருமையும் அளவிடல் அரிது!

நன்மை தீமை இரண்டையுமே
நன்றாய் அலசி ஆராய்ந்து
நன்மை ஏற்றோர் பெருமைதான்
உலகில் உயர்ந்தது உணருங்கள்!

வலிமை என்னும் அங்குசத்தால்
அய்ம்புலன் அடக்கும் தூயவனே
வீடு பேற்றின் விதையாவான்!

ஐம்புலன் ஆசையை அடக்கியவன்
ஆற்றலின் சாட்சி இந்திரன்தான்!

செய்ய முடியாப் பெருஞ்செயலைச்
செய்து முடிப்பவர் பெரியோராம்!
முடிக்கத் தவிப்போர் சிறியோராம்!
ஐம்புலன் ஆசையை வேரறுத்தால்
வையகம் வசப்படும் உணர்வாயே!

அறிவில் சிறந்தவர் என்பதையோ
பேசும் மணிமொழி காட்டிவிடும்!
துறவிகள் கோபம் சீண்டாதே!
நம்மைக் காப்பது அரிதாகும்!

ஏற்றத் தாழ்வே இல்லாமல்
அன்பாய்ப் பழகுவோர் சான்றோராம்.

அறன்வலியுறுத்தல்!-4

அறவழி சிறந்த வழி பெருமைக்கு உகந்த வழி

செல்வம் புகழும் சேர்ப்பதற்கு
அறவழி தானே சிறந்தது!

அறங்கள் செய்வது நன்மைதான்!
மறப்பது என்றும் தீமைதான்!
இயன்ற வரையில் அறச்செயல்கள்
செல்லும் இடமெல்லாம் செய்வோமே!

மனதில் களங்கம் சுமந்தேதான்
செய்யும் அறச்செயல் பகட்டேதான்!

பொறாமை ஆசை கோபங்கள்
மனதைப் பிழியும் கடுஞ்சொற்கள்
இவைகளைத் தவிர்ப்பதே அறமாகும்!
தவிர்த்தால் வாழ்க்கை சிறப்பாகும்!

இளமையில் வேண்டாம் முதுமையிலே
அறங்களைச் செய்வோம் என்றேதான்
ஒத்திப் போட வேண்டாமே!
இன்றே செய்தல் விவேகந்தான்!

அறத்தைச் செய்வோர் உயர்ந்தவராம்!
செய்யா தவரே தாழ்ந்தவராம்!
அறத்தைத் தொடர்ந்து செய்திடுவோம்!
இந்தப் பிறவியை வென்றிடுவோம்!

அறவழிச் செயலில் புகழ்சேரும்!
பிறவழிச் செயலில் பழிசேரும்!

இல்வாழ்க்கை -5

இல்லறத்தில் இயல்பாக வாழப் பழகு!

மனைவி யுடனே இணக்கமாக
வாழ்பவன் இங்கே சிறந்தவனாம்!

பிள்ளைகள் பெற்றோர் உறவினரைப்
பேணிக் காப்பதில் வல்லவனாம்!

நல்லறம் போற்றும் துறவிகளை
வறுமைப் பிணியில் துடிப்போரை

முன்னோர் மற்றும் விருந்தினரைக்
காப்பதே அவனுக்கு அறமாகும்!

நேர்மை யான வழியினிலே
சேர்த்த பொருளை உறவோடு

பகுத்தே உண்டு வாழ்பவனின்
வாழ்க்கை என்றும் சிறப்பாகும்!

உண்மை யான அன்புடனே
நல்லறம் போற்றி வாழவேண்டும்!

பிறவழி சென்று வாழ்பவனை
அறவழி வாழ்வோன் வென்றிடுவான்!

இல்லறந் தன்னில் துறவறத்தை
ஏற்பவன் வல்லமை நிமிர்ந்திடுமே!

பழிச்சொல் இன்றித் துறவறத்தை
ஏற்று வாழ்தல் சிறப்பாகும்!


இல்லற வாழ்வை மேற்கொண்டோன்
உயர்நிலை மாந்தராய்ப் புகழ்பெறுவான்!!
(தொடரும்)



 


Post a Comment

Previous Post Next Post