Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-61


குறள் 752
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

மருமவன.. ஊர்ல எல்லாருமே பணக்காரங்களை புகழ்ந்தே பேசுவாங்க. ஐவேசு இல்லாதவங்களை மட்டந்தட்டி தான்  பேசுவாங்க. இது தான் மருமவன ஒலக இயல்பு. 

குறள் 753
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.

தம்பி.. பணம்ங்கிற அந்த அணையா விளக்கு மட்டும் நம்ம கையில இருந்துட்டா, நெனச்ச எடத்துக்கு போவலாம். அங்க இருக்க சிக்கல்கள் ங்கிற இருட்டை அது துரத்தி விடும் தம்பி.. 

குறள் 754
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

மருமவன.. பணம் சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்கு. ஆனாலும் நல்ல அறவழியில் சேக்கக் கூடிய பணம் தான் ஒருத்தனுக்கு நல்ல வழியைக் காட்டி இன்பத்தைக் கொடுக்கும் மருமவன. 

குறள் 755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

மருமவன.. பணத்தையும் பொருளையும் அன்பு வழியிலும், அற நெறியிலும் சேர்க்கணும். வேற தீய வழி மூலமா வந்தா அதை வேண்டாம்னு ஒதுக்கிறணும் மருமவன. 

குறள் 756
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

மாப்ள.. நாட்டுல கேப்பார் இல்லாம இருக்க சொத்து..  வரி போட்டு, அது மூலம் வார வருமானம்.. பகைவர்களை அடக்கி வச்சிருக்கதால அவங்க கட்டுத கப்பம்..இவை எல்லாம் அரசாங்கத்துக்குச் சொந்தமானது மாப்ள. 
குறள் 757
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

மருமவன.. அன்பு ங்க தாய் பெத்தெடுக்க புள்ளை தான் அருள். இந்தப் புள்ளை பொருள் ங்க வளர்ப்புத் தாயால் வளரக் கூடியது மருமவன. 
(தொடரும்)




 


Post a Comment

0 Comments