நந்தவனத் தேனீக்கள்..!

நந்தவனத் தேனீக்கள்..!

ஹாலிங்பெல், அழைப்பு கேட்டதும், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார், சோமசுந்தரம். வெள்ளைச் சட்டை அணிந்த அந்த நபர், அங்கு நின்றிருந்தார். கதவைத் திறந்து வெளியே வந்தவர், நின்றிருந்த நபரைப் பார்த்ததும் ஆச்சரியமானார்.

"நீங்க... இராமசாமி தானே...?"

"அதே இராமசாமிதான். உன் பழைய நண்பன் இராமசாமி..."

"வாடா... உள்ளே..." உரிமையோடு அழைத்தார், சோமசுந்தரம்

வீட்டினுள் இருந்த சேரில் அமர்ந்தார், இராமசாமி.

"உன்னைப் பார்த்து, நாற்பது வருஷமாகுது. நான் இங்கே தான் இருக்கேன்னு எப்படி தெரியும்..."

"சோமசுந்தரம்... உன் வீட்டிலிருந்து, மூணாவது தெருவில் இருக்கிற, காந்தி வாத்தியார் வீட்டுக்கு பக்கத்து வீட்டில்தான் இருக்கேன். நேற்றுதான், புதுசா குடிவந்தோம். உன் ஞாபகம் வந்திடிச்சு. வாத்தியாரிடம் கேட்டேன். விலாசம் சொன்னார்..."

"நீயாவது என்னை மறக்காம, ஞாபகம் வெச்சிருக்கே. காபி போட்டுக் கொண்டு வாரேன்..."

"வீட்டில் யாருமில்லையா...?"

"என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அஞ்சு வருஷமா, படுத்தப்படுக்கையா தான் இருக்கா. நான் தான் அவளை கவனிச்சிட்டு வாரேன்..." சொன்ன சோமசுந்தரத்தின் குரல் தழுதழுத்தது.

"என்னடா... சொல்லுற நீ...?" கேட்ட, இராமசாமியை, அழைத்துக் கொண்டு பக்கத்து அறைக் கதவை திறந்து, உள்ளே நுழைந்தார், சோமசுந்தரம்.

கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள், சோமசுந்தரத்தின் மனைவி.

"உன் மனைவிக்கு என்னாச்சு...? நல்லாதானே இருந்தாங்க..."

"அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, ப்ரஸர் அதிகமாகி, தலைசுற்றி கீழே விழுந்ததால், மூளைக்கு போகும் நரம்பு பாதிக்கப்பட்டு, தான் யாருன்னு தெரியாத நிலை. என்னை கூட அவளுக்கு நான்தான் புருஷன்னு தெரியாது. அவளை ஒரு குழந்தைபோல கவனிச்சிட்டு வாரேன். எப்பவும் எதுவும் நடக்கலாம்.  டாக்டரும் கையை விரிச்சிட்டாங்க. சமையல் எல்லாம் நான் பாத்துக்கிறேன்..."

"உன் பிள்ளைங்க, என்னப் பண்ணுறாங்க. இங்கே வருவாங்களா...?"

"எனக்கு மூணு பையன்ங்க... அவங்க, இங்கே வந்து நாலு வருஷமாகுது. மூணு பையன்களை பெத்ததுக்காக வேதனைப்படுறேன். மூணுபேரும் காதல் திருமணம். நல்ல வசதியான பெண்களை, இண்டர்நெட் வழியா, தொடர்பு கொண்டு கல்யாணம் பண்ணிட்டாங்க. சொந்தமா இருந்த வீட்டையும், என்கிட்ட எழுதி வாங்கி வித்துட்டாங்க. எனக்கு கிடைக்கிற பென்சன் பணத்தைக் கொண்டுதான், சமாளிக்கிறேன். ஒரு பெண்ணை பெத்திருந்தா, என் மனைவியை கவனிச்சிருப்பா. என்னைப் பற்றியே, நான் சொல்லிட்டிருக்கேன். உனக்கு எத்தனை பிள்ளைங்க. என்ன பண்ணுறாங்க..."

"எனக்கு, இதுவரையும் அந்த பாக்யமே இல்லடா. நான் கிளம்புறேன். இதுதான் என் செல்ஃபோன் நம்பர். மறக்காம கூப்பிடு. நாளைக்கு வந்து சந்திக்கிறேன். கவலைப்படாதே. கடவுள் இருக்கிறார்..." 

சோமசுந்தரத்தின் கைகளை இறுகப்பிடித்து, தலையை ஆட்டியவாறு மௌனமா வெளியேறினார், இராமசாமி.

******

இராமசாமி இல்லம்.

"உங்க நண்பர் சோமசுந்தரத்தை சந்திச்சீங்களா...? நல்லா இருக்காரா..? எத்தனை பசங்க அவருக்கு. உங்களைப் பார்த்ததும், சந்தோஷமா இருந்திருக்கும் அவருக்கு..." கேட்ட, மனைவி சுந்தரியை பார்த்தார், இராமசாமி.

"ஏங்க... உங்க கண்ணெல்லாம் கலங்கியிருக்கு. நண்பரை பார்க்கலியா...?

"நண்பனை பார்த்தேன், சுந்தரி... விஷயத்தைச் சொல்றேன்..."

நடந்த சம்பவங்களை சொல்ல ஆரம்பித்தார், இராமசாமி.

"கேட்கவே மனசுக்கு கஷ்டமா இருக்குங்க..."

"நான் ஒரு விஷயத்தைச் சொன்னா தப்பா நினைக்கமாட்டியே..? சுந்தரி..."

"நீங்க எதுச் சொன்னாலும், நான் கேட்பேன்..."

******

மறுநாள் மதியம் 12:21 மணி.

"வா... இராமசாமி, இதுதான் உன் மனைவியா...? வணக்கமுங்க... உள்ளே வாங்க..."

சோமசுந்தரம் உரிமையோடு அழைத்தார், இருவரையும்.

"வீட்டில், இனிமேல் நீ சமைக்க வேண்டாம். தினமும், உங்க இருவர்க்கும் என் வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு தருவோம். நாங்க பக்கத்தில் தானே இருக்கோம். நீ கஷ்டப்படுறதை பார்த்து, என்னால ஜீரணிக்க முடியலை. என் மனைவியிடம், விஷயத்தைச் சொன்னேன். அவளும் புரிஞ்சிக்கிட்டா, சோமசுந்தரம்..."

"வேணாம்டா... உன்னை நான் கஷ்டப்படுத்த விரும்பலை..."

சிலவிநாடிகள், அமைதியாக இருந்தார், இராமசாமி.

"உன் மகனும், மகளுமா எங்களை நினைச்சுக்க. உனக்கும் யாருமில்லை. எங்களுக்கும் யாருமில்லை. கடவுள் தந்த பரிசு நீ. நான் தவற விடமாட்டேன்..." சொல்லிக் கொண்டே, சோமசுந்தரத்தின் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டார், இராமசாமி.

******

மூன்று மாதங்கள் கழிந்த, அந்த இரவு நேரத்தில், செல்ஃபோன் அழைப்பைக் கேட்டு கண்விழித்து பார்த்தார், இராமசாமி. அழைப்பில், சோமசுந்தரம் இணைப்பில் இருந்தார்.

"சோமா... என்னடா, இந்தநேரத்தில் போன் செய்திருக்கே...?

மறுமுனையில் விஷயத்தைக் கேட்டு அதிர்ந்தார், இராமசாமி.

"நாங்க உடனே வாரோம்டா... மனசை தேற்றிக்க..." செல்ஃபோன் இணைப்பை அணைத்தார்.

"சுந்தரி, என் நண்பனோட மனைவி, இறந்திட்டாங்க... நம்ம இரண்டு பேரையும் தவிர, அவனுக்குன்னு யாருமில்லை. சீக்கிரமா, கிளம்பு..."

இருவரும் கிளம்பினர்.

சாய்வு நாற்காலியில், சோகமா இருந்த சோமசுந்தரத்தின் கையை ஆதரவாய் பிடித்தார், இராமசாமி.

"உன் பையன்களுக்கு, விஷயத்தை சொல்லிட்டியா.?"

அமைதியா, இருந்தார் சோமசுந்தரம்.

"எல்லாம் கடவுள்வழி. மனசை தேற்றிக்க. நாங்க இருக்கோம். கவலைபடாதே... பையன்ங்க, காலைல வந்திடுவாங்களா...?" கேட்ட, இராமசாமியை பார்த்தார், சோமசுந்தரம்.

"என் மகனும், மகளும் வந்திருக்காங்க, இராமசாமி..."

"எங்கே, இருக்காங்க...?" இராமசாமியின் பார்வை, வீட்டை அலசியது.

"யாரைத் தேடுறே...? இராமசாமி. என் மகனையும், மகளையுமா..? அவங்க, என் பக்கத்தில்தானே நிக்கிறாங்க..."

"என்னச் சொல்லுறே நீ..?" சோமசுந்தரத்தின் முகத்தை பரிதாபமாக பார்த்தார், இராமசாமி.

"நீங்க இரண்டுபேரும் தான். தப்பா நினைக்காதே. கடந்த மூணு நாலு மாசமா, நீயும் உன் மனைவியும், எங்களை நல்லா கவனிச்சிட்டீங்க. முதல்தடவையா சாப்பாடு கொண்டு வந்தபோது, 'உன்னை நான் கஷ்டப்படுத்த விரும்பல'ன்னு சொன்னேன். உன  மகனும், மகளுமா எங்களை நினைச்சுக்கன்னு நீ சொன்னதும் தான், நானும் யோசிக்க ஆரம்பித்தேன். என் மனைவி இறந்துபோனால், நீதான் கொள்ளி வைக்கணும்ன்னு நான் தீர்மானம் பண்ணினேன். பெத்த பிள்ளைங்க காட்டாத அன்பையும், பாசத்தையும் நீங்க இரண்டும் எங்களுக்கு தந்தீங்க.  என் மனைவியோட ஆத்மா சாந்தியடையணும்ன்னா, நீதான் கொள்ளி வைக்கணும், இராமசாமி. என்னை ஏமாற்றிடாதடா..."

செய்வதறியாமல், திகைத்து நின்ற இராமசாமி, தன் மனைவி சுந்தரியை பார்த்தார்.

அடுத்த கணமே, சோமசுந்தரத்தை பார்த்தார், இராமசாமி.

"சோமா... உன் மனநிலையில் இருந்து யோசிச்சேன். எனக்கும் புள்ளக்குட்டி இல்லை. உனக்கு நான், எனக்கு நீ. நானே கொள்ளி வைக்கிறேன். எனக்கு கிடைச்ச பெரும் பாக்யமா கருதுகிறேன். ஆகவேண்டிய காரியங்களை பார்ப்போம்..."

"நீதான் என் நண்பனும், மகனும்டா..."  சொல்லிக் கொண்டே, இராமசாமியை கட்டியணைத்தார், சோமசுந்தரம்.

அடுத்த சில விநாடிகளில்...

சோமசுந்தரத்தின் பிடி தளர்வதை உணர்ந்த இராமசாமி, உடனே கைதாங்கலாய் பற்றினார்.

தலை இடதுபக்கமாய் துவண்ட நிலையில், உயிர்பிரிந்த வெற்று உடலாய் சரிந்தார், சோமசுந்தரம்.

-நாகர்கோவில் கோபால்



 


Post a Comment

Previous Post Next Post