எழுத்தாணியின் சாயலில்...!

எழுத்தாணியின் சாயலில்...!


மழையில் நனைந்து 
பறந்து செல்லும் தாய்க்குருவிக்கும்
கம்பத்தில் உணவிற்காக 
காத்திருக்கும் ஆண் பறவைக்கும் 
பெற்றோரின் சாயல்....

நல்ல வேளை முழுவதும் 
நனைந்துவிடவில்லை
அப்பாவின் இளகிய மனதை
என்னுள்
மழை கண்டறிந்துவிட்டது போல....

நானும் நண்பனும்
வண்ணங்களைப் பற்றிப் 
பேசும் பொழுதெல்லாம்
வெண்மையின் தூய்மை 
பற்றி நிறைய பேசுவோம்
ஆனால் கண்ணீரின்
ஈரம் நிறைந்த வெண்மையில்
நிறைந்த தாய்மையை
யோசித்ததே இல்லை..

போதும்
போதும் என மூச்சுத் திணறும்
பாலாபிஷேகத்தில் 
பிள்ளையாரின்
திணறலுக்கு
எதிரே
பசி ஏக்கத்தில் பார்க்கின்றன
பச்சிளமும்,பூனையும்.....

புன்னகையுடன்
ஓடி வருகிறாள் மகள்....
"அப்பா.. அப்பா" என்று
கிழிந்த தேதி காகிதம் தனை கொண்டு......
என்ன வென்று கேட்டதற்கு 
இன்று உனக்கு வெற்றி
என்று....
கிடைத்த தோல்வி எல்லாம்
மகுடம் ஏந்தி வரிசை கட்டுகின்றன....
மகளின் புன்னகையில்.....


கவிஞர் சே கார்கவி



 


Post a Comment

Previous Post Next Post